சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

“எடுக்கப்படும் முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்” : டாக்டர் மகேஷ் சர்மா

Posted On: 19 APR 2018 1:33PM by PIB Chennai

கருத்தரங்குகள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் யோசனைகள், கருத்துகள் நடைமுறை வாழ்க்கையில் செயலாக்கப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

தூய காற்றுக்கான தேசியத் திட்டம் (National Clean Air Programme - NCAP) குறித்த இரண்டுநாள் ஆலோசனைக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசிய அவர், “சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவரும் நிலையில், தூய காற்றுக்கான தேசிய திட்டம் (NCAP) போன்ற திட்டங்கள் மிகவும் அத்தியாவசியமானவை” என்று குறிப்பிட்டார்.

காற்று மாசினால் மனிதர்களுடன் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் உடல் நலம், ஆரோக்கியத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்துக் கவலை வெளியிட்டார். இத்தகைய கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்போர் சமுதாயத்திற்கு ஏதாவது “அளித்தாக” வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தூய காற்றுக்கான தேசியத் திட்டம் (NCAP) குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துகள் பயனுள்ளவையாக இருக்கும் என்றும் இத்திட்டத்துக்கான உத்தியை வலுவான வகையில் செயல்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.

இத்திட்டத்தின் மொத்த குறிக்கோள் காற்று மாசினைத் தணித்து, கட்டுப்படுத்தி, தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நிர்வாகத் திட்டமாகும். அத்துடன் காற்றின் தரத்தையும் மேம்படுத்துவதுமாகும்.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் காற்று மாசினை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதற்காகத் தூய காற்றுக்கான தேசியத் திட்டத்தை (NCAP) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தேசிய அளவில் நீண்டகாலத் தேவையாக முறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட மொத்த மதிப்பீடு ரூ. 637 கோடியாகும்.



(Release ID: 1529656) Visitor Counter : 124


Read this release in: English