பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பாலியல் குற்றங்களைக் கையாளுவதுபற்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு திருமதி மேனகா சஞ்சய் காந்தி கடிதம்.

Posted On: 19 APR 2018 12:55PM by PIB Chennai

மகளிர், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.  அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில நடவடிக்கைகள குறித்த விவரம் வருமாறு:

  1.  அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பாலியல் குற்றங்கள் - குறிப்பாக அவை சார்ந்த தடயங்களைச் சேகரித்துப் பாதுகாப்பது -குறித்து மறுபயிற்சி அளிக்கப் பெறவேண்டும்.
  2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் புலனாய்வை நிறைவு செய்வதற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து சட்டத்தின் காலநியதியைக் கடைபிடிக்குமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
  3. இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகளுடன் ஒத்துழைப்பது அல்லது புலன் விசாரணைக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. குற்றவாளி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவர்களைத் தடுப்பதற்கு விரைவான காலக்கெடுவுடன் கூடிய தொழில் ரீதியான புலனாய்வு மட்டும்தான் ஒரேவழி.  ஆனால், காவல்துறை மாநில அலுவல் பட்டியலில் வருவதால் இதனை மாநில அரசுகள் மட்டுமே செய்ய இயலும்.  இந்த வகையில் பாலியல் குற்றங்களை - குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் - கையாள சிறப்புப் பிரிவுகளை அமைப்பது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

குற்றத்தடவியல் சோதனைக் கூடங்களை மாநிலங்களில் அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் உதவத்தயாராக இருக்கிறார். பாலியல் குற்றங்களுக்கு எதிரான புலன்விசாரணையில் அத்தாட்சிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு இந்தச் சோதனைக்கூடங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

     பாஸ்கோ திட்டத்தின்கீழ், மின்னணுப்பெட்டி அமைப்பைக் குழந்தைகள் அவசரஉதவித் தொலைபேசி 1098 மூலம் பயன்படுத்துவதற்குரிய விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான 175 ஒற்றை உதவி மையங்கள் இதுவரை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இன்னலுற்ற காலத்தில் பெண்கள் காவல்உதவியோ, மருத்துவ உதவியோ பெற இயலாத நேரத்தில் இந்த ஒற்றை உதவி மையங்கள் அவர்களுக்கு உகந்த துணையாக அமையும்.

     பாலியல் குற்ற வழக்குகளில் அது குறித்துப் பதிவு செய்வது முதல் தகவல் அறிக்கை தயாரிப்பது ஆகியவை நடைபெறவில்லை என்றால், பாஸ்கோ சட்டத்தின் 21-வது பிரிவைப் பயன்படுத்துமாறு கடிதம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்த 21-வது பிரிவின்படி, குற்றம் நடந்தது சார்பான அறிக்கை அல்லது பதிவு செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் 19, 20 பிரிவுகளின்படி, தண்டனைகள் வழங்க முடியும்.

     பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வது பற்றி மாநில அரசுகளின் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

-------



(Release ID: 1529614) Visitor Counter : 140