குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சுகாதாரத் திட்டங்களுக்கு விரிவான விளம்பரம் அளிக்க வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்

प्रविष्टि तिथि: 18 APR 2018 3:02PM by PIB Chennai

அடல் அம்ரித் அபியான் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்

 

தீராத நோய்கள் மற்றும் நீண்டகால உடல்நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்கள், வயது முதிர்ந்தோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் விரிவான விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 3.2 கோடி பேருக்கு தரமான மருத்துவ சேவை வழங்கும், அசாம் மாநில அரசின், அடல் அம்ரித் அபியான் இயக்கத்தை குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்து அவர் பேசினார். அசாம் மாநில ஆளுநர் பேராசிரியர் ஜகதீஷ் முகி, முதலமைச்சர் திரு.சர்பானந்தா சோனாவால், மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்கும் அரசின் முயற்சிகளுக்கு தனியார் துறை பெருமளவில் உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். தரமான மருத்துவச் சேவைகள் அவற்றை பெறுவோரின் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நிதிப் பிரச்சினையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவச் சேவைகளை வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய நவீன கால வாழ்க்கை முறையில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்றும் இளைஞர்களைப் பாதிக்கும் இத்தகைய நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, நொறுக்குத்தீனிகளை உண்பது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் போன்றவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வை மருத்துவச் சேவை வழங்கும் அனைத்துப் பிரிவினரும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் நோய்கள் பற்றிய பாடத்தைச் சேர்த்து பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். இயன்ற இடங்களில் எல்லாம் யோகா, ஆசனங்களைக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் இதர பகுதிகளைப் போன்று கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகள் மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை  நிலவுவதாக குடியரசு துணைத் தலைவர் கூறினார். மேலும் அதிக மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதன் மூலமும், கிராமப் பகுதிகளில் மருத்துவ வசதிகளை அளிப்பதன் மூலமும் இந்த இடைவெளியைப் போக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in. என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

                                ----


(रिलीज़ आईडी: 1529535) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English