பிரதமர் அலுவலகம்
குஜராத், ராஜ்கோட் நகரில் பசுமை விமானநிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பாரதப் பிரதமர் நிகழ்த்திய உரை
Posted On:
07 OCT 2017 8:04PM by PIB Chennai
இங்கே பெருமளவில் கூடியிருக்கும் எனது அன்புக்குரிய சுரேந்திர நகர் மாவட்டத்தின் சகோதர சகோதரிகளே, வணக்கம்.
ஒரு நாள் விமானநிலையம் இங்கு அமையும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா.. ? சுரேந்திர நகர் மாவட்டம் இதைப் பற்றி எப்போதாவது நினைத்துப்பார்த்திருக்குமா? இங்கே ஒரு விமானநிலையம் கட்டப்பட்டால், நீங்கள் மகிழ்ச்சி அடைய மாட்டீர்களா? ஒரு விமான நிலையம் இங்கே கட்டப்படவேண்டுமா? வேண்டாமா? ஒரு விமான நிலையம் கட்டப்பட்டால், அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டுப் பறந்துசென்றால், எல்லா ஏற்பாடுகளும் இங்கேயே செய்யப்பட்டால், அது மேம்பாடு என்று அழைக்கப்படுமா? இந்த வளர்ச்சியை நீங்கள் விரும்புகிறீர்களா? மேம்பாடு நடைபெற வேண்டுமா? அப்படி ஒரு வளர்ச்சி அவசியமா? ஒரு வளர்ச்சியானது குஜராத்தின் எதிர்காலத்தையே மாற்றுமா? இத்தகைய மேம்பாடு உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றுமா? மிக நன்று, பாராட்டுகள்!
பரம ஏழையைக் கேளுங்கள், வீடு இல்லாத ஏழையை, அவருக்கு வீடு தேவையா என்று கேளுங்கள். அவர், “ஆம்” என்று கூறுவார். அப்படி ஒரு வீட்டை அவருக்கு அளிக்க வேண்டுமானால், அவர் தங்குவதற்கு உரிய வசதிகளைச் செய்து தர வேண்டுமானால், வளர்ச்சி இல்லாமல் அது சாத்தியம் ஆகாது..
முன்பெல்லாம் ஏதாவது ஒரு கிராமத்தில் அரசியல்வாதி ஊருக்குள் கைக் குழாய்களை அமைக்க ஏற்பாடு செய்தால் வளர்ச்சி ஏற்படும். அதையடுத்து, “உங்கள் ஊரில் கைக்குழாய் அமைத்துத் தந்திருக்கிறேன். உங்கள் இடத்தில் கைக்குழாய் அமைத்துத் தந்துள்ளதால், தேர்தல்களில் எனக்கே ஆதரவு அளியுங்கள்” என்று அவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு மக்களிடம் கூறிக்கொண்டே இருப்பார். உங்களது ஊரில் வளர்ச்சிப் பணியைச் செய்ததால் தனது வெற்றியை உறுதி செய்யும்படி அவர் உங்களைக் கேட்பார். அப்படி என்றால் என்ன? அது கைக்குழாயை அமைத்திருப்பதாகும். குடிநீருக்காகக் கைக்குழாய் அமைத்திருப்பதாகும். இதுதான் வளர்ச்சி என்பதற்கான விளக்கமாகும்.
இன்று, இது அப்படிப்பட்ட அரசு. இந்த அரசு நர்மதைத் தாயின் ஓட்டத்திலிருந்து நீரை எடுத்து ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் மிகப் பெரிய குழாய் மூலமாக விநியோகித்து வருகிறது. நர்மதைத் திட்டத்தின் மூலமாக குஜராத் மாநிலத்தில் ஏதாவது ஒரு மாவட்டம் அதிகப்பட்சம் பலனடைகிறது என்றால், அந்த மாவட்டத்தின் பெயர்….. மாவட்டத்தின் பெயர் என்ன…? என்ன பெயர்…? அந்த மாவட்டத்தின் பெயர் சுரேந்திர நகர்…
நர்மதையின் தண்ணீர், அதாவது நர்மதைத் தாய் உங்கள் ஒவ்வொருவரது வீட்டுக்கும் வருகிறாள். இந்தத் தரிசு நிலத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள். அதற்காக, நர்மதையின் கருணை வெள்ளம் கிராமப்புறங்களையும் விவசாயப் பகுதிகளையும் மட்டுமே தொடும் என்பதில்லை. நர்மதை நீர் ஒரு வகையான சக்தியைக் கொண்டுள்ளது. இந்தத் தண்ணீரின் மூலமாகத்தான் சுரேந்திர நகர் மாவட்டம் இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய தொழில் வளர்ச்சி மண்டலமாக மாறப் போகிறது. சுரேந்திர நகர் மாவட்டத்தில் அதிகபட்சமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், இது கல்விக்கான மையமாகத் திகழ உள்ளது. காரணம், போதிய தண்ணீர் கிடைத்தால், அரசாங்கத்தின் மேம்பாட்டுச் நடவடிக்கைகளும் அதிகரிக்கும். அதைப் போல் இப்போது கட்டப்பட்டுவரும் விமான நிலையம் மேம்பாட்டுக்கு உரிய பங்களிப்பைச் செலுத்தும்.
வரும் நாட்களில் வளர்ச்சிப் பணியை யார் மற்றவர்களை விட எப்போது, எப்படி விரைவாக மேற்கொள்வது என்று இது சுரேந்திரநகர், ராஜ்கோட், மோர்பி ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் போட்டியை உருவாக்கும். இது ஆரோக்கியமான போட்டியாகும். அதனால்தான், அரசு சுரேந்திர நகர் மாவட்டத்துக்கும் ராஜ்கோட் மாவட்டத்துக்கும் இடையில், எது வேகமான வளர்ச்சிக்கு உகந்தது என்று அரசு கருதி, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, மிகப் பெரிய விமான நிலையத்தைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டும் அதிமுக்கியமான நடவடிக்கையை இன்று மேற்கொண்டுள்ளது. இதைப் பற்றிக் கூட மகிழ்ச்சி அடையாத சில பேர் இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் நீங்கள், “ஏன் விமானத்தில் பயணம் செய்கிறீர்கள்? பேருந்தில் பயணம் செல்லலாமே” என்று கேட்டால், அவர்கள் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகச் செல்வதாகக் கூறுவார்கள். ஏதோ அவர்கள் மட்டுமே விரைவாகச் சென்றடைய வேண்டும் மற்றவர்கள் யாரும் விரைவில் சென்றடைவதில்லை என்பதைப் போல் அப்படிக் கூறுவார்கள்.
இது அரசர்கள் மட்டும் விமானத்தில் பயணம் செய்யும் பண்டைய காலம் போன்றதல்ல அதனால்தான், சாதாரண ரப்பர் செருப்பு அணிந்தவரும் விமானத்தில் எளிதாகப் பயணம் செய்யும் வகையில் இந்த நாட்டின் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக நான் கூறினேன். அதை நீங்கள் வியப்போடு பார்க்கப்போகிறீர்கள். இந்தக் காலத்தில் உலக அளவில் விமானப் போக்குவரத்துத் துறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு விமானப் போக்குவரத்துக்கு என்று தனிக்கொள்கை இல்லை. அதைப் பற்றி யாராவது நினைத்துப் பார்த்தீர்களா? இந்திய அரசுக்கு விமானப் போக்குவரத்துக் கொள்கை இல்லை. நாம் அரசுப் பொறுப்பு ஏற்ற பிறகு விமானப் போக்குவரத்துக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். அதுவும் சென்னை, ஆமதாபாத், மும்பை போன்ற பெரிய நகரங்களுடன் அதனைக் குறுக்கிக்கொள்ளப் போவதில்லை. சிறிய ஊர்களையும் விமானப் போக்குவரத்து மூலம் இணைப்பதற்கான பெருமுயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம். மிக நீண்ட தொலைவில் உள்ள இரு இடங்கள், விமானத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்யும்படியாகவோ, ஒரு மணி நேரத்துக்குக் குறைவாகப் பயணம் செய்யும் இடங்களாகவோ இருந்தால், அந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ரூ. 2,500 எனக் கட்டணம் நிர்ணயித்து விமானப்போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தியுள்ளோம். அதன்படி எட்டு வழித்தடங்கள் செயலுக்கு வந்துள்ளன. குஜராத் மாநிலத்தின் காண்ட்லா நகரம், மித்னா பூர் ஆகியவை பயனடைந்துள்ளன. இதையடுத்து எதிர்காலத்தில் சிறிய நகரங்கள் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்படும். இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று விமான நிலையங்கள், விமானத் தளங்கள் ஏற்கெனவே இயங்கிவருகின்றன. எப்படி ஆயினும், ஒவ்வொரு மாநிலத்திலும் 10, 15, 20 என விமான நிலையங்கள் இயங்கும் நிலை ஏற்பட இருக்கிறது. அதனால்தான், விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்று எனக்கு அண்மையில் தகவல் கிடைத்துள்ளது என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அதனால்தான், ராஜ்கோட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பசுமை விமான நிலையத் திட்டத்துக்காகக் குஜராத் மக்களையும் இந்தப் பகுதியில் வாழும் மக்களையும் பாராட்டுகிறேன்.
மிகப் பெரிய விமான நிலையம் அமைப்பதற்கான இத்திட்டத்துக்கு விவசாயிகளிடமிருந்து 4சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மீதமுள்ள 96 சதவீத நிலம் தரிசு நிலமாகும். அதில்தான் விமான நிலையம் கட்டப்பட்டுவருகிறது. அதனால்தான், விவசாயம் சுரேந்திர நகர் மாவட்டத்துக்கு மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு தரிசான நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதனை விமான நிலையம் கட்டுவதற்காகப் பயன்படுத்தியுள்ளோம். ராஜ்கோட் விமான நிலையத்திற்கு ஏராளமான சுற்றுச்சுவர்கள் உள்ளன என்றும், இப்போது விஜய் பாய் பேசிக்கொண்டிருந்ததைப் போல், அந்த எல்லைச் சுவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலும் தெரிகின்றன.
அதனால்தான் ராஜ்கோட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் மேம்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தை மனத்தில் கொண்டு, பன்னாட்டு விமானப்போக்குவரத்துச் சேவைகள் இங்கிருந்து மேற்கொள்ளப்படும் நாள் அமையப்போகிறது. யாராவது நாளை வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், சோட்டிலாவுக்கும் ராஜ்கோட்டுக்கும் இடையில் அமைக்கப்படும் விமான நிலையத்தில்தான் விமானம் ஏறுவார்கள். ஆகையால், இன்று, இந்த மிக முக்கியமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சுரேந்திர நகரிலும், வாத்வானிலும் இரு முக்கியமான நிகழ்ச்சிகளை இன்று நடத்திவருகிறோம். சூர்-சாகர் பால்வளத் திட்டம் எதிர்காலத்தில் உங்கள் மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தப் போகிறது. போதிய தண்ணீர் கிடைப்பதால், கால்நடைப் பராமரிப்பு மேலும் அபிவிருத்தி அடைய இருக்கிறது. தனி நபரின் பால் உற்பத்தியும் அதிகரிக்க இருக்கிறது. எங்களது சூர்-சாகர் பால் வளத் திட்டம் அதைச் செய்யப் போகிறது. முந்தைய அரசு பால்பண்ணைகளை உருவாக்குவதற்குத் தடை விதித்துச் சட்டம் கொண்டுவந்தது. ஏன் இப்படிச் செய்யவேண்டும் என்று எனக்கு வியப்பு மேலிடுகிறது. நான் முதலமைச்சராக இருந்தபோது, இப்படிப் பால்பண்ணையை அமைக்க முன்வருவோருக்கு அரசின் கருவூலத்திலிருந்து உதவி செய்வது என்று முடிவு செய்தேன். இன்று, சவுராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பால்வளத் தொழில் முழு உற்சாகத்துடன் மேம்பாடு அடைந்துள்ளது. கால்நடைகளை வளர்ப்போருக்கு இதை விட வேறு பெரிய உதவி எதையும் செய்து விட முடியாது. அவர்கள் வழங்கும் பாலுக்குச் சரியான கொள்முதல் விலை கிடைக்க வேண்டும். இன்று பால்உற்பத்தி ஆலையை நவீனமயமாக்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். சூர்-சாகர் திட்டம் மற்றும் நர்மதைத் தாய்த் திட்டம் செயலுக்கு வந்ததும் பால் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். உண்மையில் இந்தப் பணி சுரேந்திரநகர் மாவட்டத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். இந்த மகிழ்ச்சிக்கடல் மேலும் பெருகட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்.
தோரிதாஜா அணைக்கட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும். நர்மதையைத் தோரிஜாதா அணைக்கட்டில் வரவேற்பதற்காக நான் இங்கு வந்தேன். அப்போது இந்த மாவட்டம் முழுவதுமே மகிழ்ச்சி அடைந்ததை நினைவில்கொள்கிறேன். தாகத்தில் இருப்போருக்குத்தான் தண்ணீரின் அருமை தெரியும். தண்ணீர் அருமை கட்ச், சவுராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குத்தான் தெரியும். வாத்வான் பகுதியில் ஒரு காலத்தில் 15- 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கும். அப்போது விருந்தாளிகள் வந்துவிட்டால், மக்கள் அவர்களைப் பகலில் வருமாறு கேட்டுக்கொள்வார்கள். காரணம், இரவில் வந்தால், மறுநாள் காலையில் விருந்தினர் குளி்ப்பதற்குத் தண்ணீர் கொண்டுவர படாதபாடு படவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட காலத்தையெல்லாம் இப்பகுதி கண்டிருக்கிறது. இன்று, வாத்வான் நகரில் 300, 350 கி.மீ. தூரத்திற்குக் குழாய் பதித்து, தண்ணீர் எளிதாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதெல்லாம் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி, நல்ல குடிநீர் வசதி ஆகியவற்றால் சாத்தியமாகிறது. அதற்குச் சகோதரிகள் எவ்வளவு ஆசிகள் கூறினாலும் தகும் என்று நம்புகிறேன். கடும் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தச் சகோதரிகள் எவ்வளவு ஆசிகள் வழங்கினாலும் அது போதாது. மோர்பியில் அண்மையில் மீண்டும் அமைக்கப்பட்ட புதிய சாலை ஆமதாபாதுக்கும் ராஜ்கோட்டுக்கும் இடையில் சாலை அகலப்படுத்தப்படுவது போன்ற பல பணிகளை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், நேரமிருந்தால், பாஜக ஆட்சியில் இல்லாதபோது வெளியான செய்தித்தாள்களைப் படித்துப்பாருங்கள்.
ஆமதாபாத் – ராஜ்கோட் நெடுஞ்சாலையில் வாரத்துக்கு நான்கு முறையாவது விபத்துகள் நேரும். பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். குடும்பங்கள் விபத்துகளால் சிதைந்துபோயிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய விபத்துகள் நேர்ந்திருக்கும். இதெல்லாம் சாலை மிகவும் குறுகியதாக இருந்ததால் ஏற்பட்ட நிகழ்வுகளே. அரசியலில் நான் இல்லாத காலத்தில் லிம்பாடி - பகோதரா ஆகியவற்றிலிருந்து ஏராளமான தொலைபேசிஅழைப்புகள் எனக்கு வரும். அப்போதெல்லாம் கைபேசி புழக்கத்தில் இல்லை. பெரிய விபத்துகள் நேர்ந்தால், ஆமதாபாதிலிருந்து அசோக்பய்க்கு விரைந்து செல்வேன். வாரத்துக்கு இரண்டு அல்லது நான்கு முறை இவ்வாறு செல்வது உண்டு. ராஜ்கோட் மக்களைக் கேட்டால், சுரேந்தர் நகர் மக்களைக் கேட்டால், ஏராளமான குடும்பங்கள் தங்களது சொந்தங்களைச் சாலை விபத்துகளில் இழந்திருப்பார்கள் என்பது தெரியவரும்.
குஜராத்தில் 1995ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு, கேசுபாய் பட்டேல் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விபத்துகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுத்து அவர்களை பாதுகாக்க சாலைகளை அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. பாஜக அரசே அதைச் செய்தது. அதன் விளைவாகச் சாலைவிபத்துகளில் உயிர்கள் பலியாவது பெருமளவுக்குக் குறைந்தது. இன்று, போக்குவரத்து மேலும் மேம்பாடு அடைந்திருக்கிறது. இந்தச் சாலைகளை ஆறுவழி நவீனப் பாதையாக்குவது என்று மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் முக்கியமானவை ஆகும். முன்னேற்றத்துக்கு விரைவு தேவையானது. விரைவாக அடைவது என்று வந்துவிட்டால், அது விமானப் போக்குவரத்தோ, சாலைகளை அகலமாக்குவதோ இரண்டிலும் ஒரே சமயம் கவனம் செலுத்த வேண்டும். மோர்பிக்குச் செல்லும் சாலையோ, மோர்பி சாலையை அகலப்படுத்துவதோ எதைச் செய்தாலும் அது தொழில் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என்பது பொருள். கட்ச் வரையில் தொழில்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கட்டுமானம் அதற்குப் பெரிதும் உதவும்.
அதனால்தான் இன்று ஒருசேர பஞ்சல் பந்தக் நகரில் ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியிலும் அடிக்கல் நாட்டும் விழாவிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றேன். புனிதப் பயணிகளுக்கான பஞ்சல் பந்தக் நகருக்குக் குஜராத் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால், சோட்டிலா நகரில் சாமுண்டா தேவி, திருநேத்ரேஸ்வர் தார்ணேதர், சுந்தரி பவானி, சூரஜ் தேவி, பாண்டியவல்லி, ஜரியா மஹாதேவ், கோபிநாத், அவலியாதகர் ஆகிய தெய்வங்கள் இருப்பதால் பஞ்சல் பந்தக் நகர் சிறப்பு பெறுகிறது. அதனால், இந்தப் புனித நகரங்களை ஒன்றோடு ஒன்றை இணைத்து புனிதப் பயணிகள் எளிதில் சென்று தரிசனம் மேற்கொள்ள வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
தர்ணேத்தர் திருவிழாவில் வெளிநாட்டவரைப் பங்கேற்க வைக்க என்ன செய்யலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். சோட்டிலாவில் விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, தார்ணேஸ்வர் திருவிழாவைச் சர்வதேச விழாவாகக் கொண்டாடுவதற்கு அதிகக் காலம் பிடிக்காது. அதனால், மேம்பாட்டுப் பணிகள் பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளதாக அமையவேண்டும். அதன் மூலம் பொருளாதார மேம்பாடு எட்டப்பட வேண்டும். இந்தத் தெளிவான அணுகுமுறையுடன் மத்தியஅரசு, நாட்டின் மூலைமுடுக்குகளில் மேம்பாடு நடைபெறுவதை அதிக அக்கறையுடன் வலியுறுத்துகிறது. இது விஷயத்தில் சீரான, தொடர்ச்சியான முனைப்பினைக் காட்டி வளர்ச்சிப் பணிக்குப் புதிய பரிமாணத்தை அளிப்பதில் குஜராத் அரசு கவனம் செலுத்தி வருவதை வரவேற்கிறேன். வளர்ச்சி பெற்ற குஜராத், நவீன, முன்னேற்றம் அடைந்த குஜராத் அமைப்பது என்ற உறுதியை அடைவதற்கான பாதையை நோக்கி நாம் நகர்ந்து செல்கிறோம்.
2022ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்து 75ஆவது ஆண்டைக் கொண்டாட இருக்கிறோம். அந்தக் கொண்டாட்டத்துக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன. இந்த ஐந்து ஆண்டில் என்ன வகையில் பங்களிப்பு செலுத்துவது என்று ஒவ்வொரு குடிமகனும் முடிவு செய்ய வேண்டும். அரசாங்கமோ, நகராட்சியோ அல்லது வேறு யாராவதோ ஏதாவது நல்லது செய்யட்டும் என்கிற போக்கு இருக்கக் கூடாது. “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் இதைச் செய்வேன், நான் நிச்சயமாக இதை நிறைவேற்றுவேன்” என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நர்மதைத் தாய் நம் வீடுகளுக்கு வருகிறாள். இந்நிலையில், மகத்தான மகசூல் எட்டுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கும்போது, எந்த ஒரு விவசாயப் பண்ணையும் சொட்டுநீர்ப் பாசனம் போன்ற பாசனவசதிகள் இல்லாமல் இருக்கக் கூடாது என்று சுரேந்தர்நகர் மாவட்ட மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். சொட்டுநீர்ப் பாசனம், நுண்பாசனம், தெளிப்புப் பாசனம் போன்ற நவீனப் பாசனமுறைகளை நமது விவசாயிகள் பின்பற்ற வேண்டும். சுரேந்தர் நகர் விவசாயிகள் இத்தகைய நவீனச் சொட்டுநீர்ப் பாசனமுறையைக் கடைப்பிடித்தால் நாம் மிகப் பெரிய விவசாயப் புரட்சியைக் கொண்டுவரலாம் என்பதை நினைத்துப் பாருங்கள். அத்துடன், நர்மதைத் தாய் நமக்கு அளிக்கும் தண்ணீரையும் தேவையான அளவு பயன்படுத்தலாம். அதனால்தான், தண்ணீர்ப் பிரச்சினை குஜராத் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையாக இருக்கிறது. தண்ணீர் போதுமான அளவு கிடைத்தால், அதை நமது உயிரைப் போல் நேசிக்கவேண்டும். ஒரு துளித் தண்ணீரையும் வீணாக்கக் கூடாது. நீரைப் பயனின்றி முறையற்றுப் பயன்படுத்தக் கூடாது. இது குஜராத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
2022ஆம் ஆண்டு நாம் 75ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும்போது, அந்தக் கொண்டாட்டத்தை ஒட்டி, புனிதமான உறுதிமொழியை ஏற்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம், நுண் பாசனம், அறிவியல்முறைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை நமது உறுதிமொழி நிறைவேறுவதிலும் நமது விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டில் இரட்டிப்பாக்குவதிலும் இவை முக்கியமான பங்கினை வகிக்கும்.
இங்கே மிகப் பெரிய அளவில் கூடி, வியத்தகு அன்பினைப் பொழிந்ததற்கும் ஆசிகளை வழங்கியதற்கும் நான் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சோட்டிலாவிலிருந்து பார்க்கும்போது, எல்லா இடங்களிலும் மிகப் பெரிய அளவில் மக்களைப் பார்க்கிறேன்.
பாரத மாதாவுக்கு வணக்கம் (பாரத் மாதா கீ ஜெய்!)
தயவு செய்து இதை நீங்களும் மிக உயர்ந்த குரலில் முழங்குங்கள்.
பாரத மாதாவுக்கு வணக்கம் (பாரத் மாதா கீ ஜெய்!)
பாரத மாதாவுக்கு வணக்கம் (பாரத் மாதா கீ ஜெய்!)
பாரத் மாதாவுக்கு வணக்கம் (பாரத் மாதா கீ ஜெய்!)
***
(Release ID: 1529358)
Visitor Counter : 359