பிரதமர் அலுவலகம்
மத்திய பிரதேசம், அமர்கான்டக்கில், நடைபெற்ற ‘நமாமி நர்மதே – நர்மதா சேவா யாத்ரா’ நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
15 MAY 2017 3:40PM by PIB Chennai
இங்கு பெருந்திரளாகக் கூடியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே,
நாம் புனிதயாத்திரை மேற்கொள்ள இயலாதபோது, புனிதயாத்திரை சென்று வந்தவரை வணங்கினால், புனிதயாத்திரை மேற்கொண்ட பலன் நமக்குக் கிடைக்கும் எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தகைய பலனைப் புனிதயாத்திரிகர்களான உங்களை வணங்கி நான் பெற விரும்புகிறேன். ஆனால், நான் அதனை எனக்காகப் பெற விரும்பவில்லை. உங்களது புனிதயாத்திரையின் மூலமான புனித ஆசி, நமது தாய்நாட்டிற்குக் கிடைக்க வேண்டும், 125 கோடி இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டும், அது இந்நாட்டு ஏழை மக்களின் துயரங்களை அகற்ற வேண்டும்.
நர்மதா சுற்றுவட்டாரத்துடன் நீண்ட காலமாகத் தொடர்புள்ள அதே
புனிதயாத்திரை தான் நர்மதா யாத்திரை என்பது எனது நம்பிக்கையாகும். அந்தச் சாஸ்திரம் எனக்கு மிகவும் பரிச்சயமானதாகும். நான் அத்தகைய எதிர்பார்ப்பிற்கேற்றவாறு வாழ முயற்சித்தேன். எனவே, நர்மதா சுற்றுவட்டாரத்திற்கான புனிதயாத்திரை எவ்வாறு உங்களின் அகங்காரத்தை அழிக்கும் என்பதை நான் அறிவேன். நர்மதாவைச் சுற்றிவரும் ஒரு நபரின் அகங்காரத்தைத் தாய் நர்மதா அகற்றித் தூய்மைப்படுத்துகிறாள். தாய் நர்மதா, மனிதர்களை அனைத்து பிணைப்புகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுவிக்கிறாள். மிகவும் பாராட்டப்படும், மதிக்கப்படும் நபர் கூட அத்தகைய பிணைப்புகள் மற்றும் உடைமைகளிலிருந்து விடுவிக்கிறது. நர்மதா சுற்றை முடிக்கும்போது, தாய் நர்மதா அவளுடன் வழிபாட்டார்களை இணைக்கிறாள், தாய் நர்மதாவுடனான ஒன்றுபடுதலை ஒருவர் உணர முடியும். இன்று நீங்கள் தாய் நர்மதாவிற்கு சேவைபுரிய உறுதி பூண்டுள்ளீர்கள்.
காலம் ஒரு பக்கத்தைப் புரட்டும்போது, அது ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும். உங்களை அகந்தை ஆட்சி செய்து, நீங்கள் கடமைகளிலிருந்து தவறும்போது இத்தகைய பிரச்சினைகள் எழுகிறது; நாம் அவற்றிலிருந்து வெளிவந்து, தாய் நர்மதாவிற்குச் சேவைபுரிய வேண்டும். இதே தாய் நர்மதா தான், காலம் காலமாக நிலைத்து, நமக்கு வாழ்வளித்து, நமது மூதாதையர்களைப் பாதுகாத்து வந்துள்ளாள். ஆனால் இத்தகைய உதவிகளை நாம் நமது உரிமை எனத் தவறாக எண்ணி, நமது கடமையிலிருந்து விலகிச் சென்று, தாய் நர்மதாவை இறுதிவரை நாம் சுரண்டியுள்ளோம். நமது சுயநலனுக்காக, தாய் நர்மதா குறித்து எப்போதும் நாம் கவலைப்படுவதில்லை. நமது குறுகிய நலன்களுக்காக மட்டுமே நாம் கவலைப்படுகிறோம். நமது மனதில் ஆழமாக, தாய் நர்மதா மீது நமக்கு உரிமையுள்ளது, அதனை நாம் வேண்டும்வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உணர்வு பதிந்துள்ளது. இந்த அகந்தையானது, நம்மை என்றும் நிலைநிறுத்திய தாய் நர்மதாவை நமது வேர்வையைச் சிந்திக் காக்க வேண்டியதாக்கியுள்ளது. நாம் நமது கடமையிலிருந்து விலகிச் செல்லாமல், தாய் நர்மதாவிற்கான நமது கடமைகளை நிறைவேற்றியிருந்தால், அப்போது மனிதர்களான நாம் தாய் நர்மதாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்திருக்காது. எனினும், மத்தியப் பிரதேச முதலமைச்சரும், மத்திய பிரதேச மக்களும் குறித்த காலத்தில் செயலில் இறங்கியுள்ளனர்.
இந்தியா, வரைபடத்தில் பல ஆறுகளைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றில் தண்ணீர் இல்லை. வரலாற்றில் பல ஆறுகளை நாம் இழந்துள்ளோம். இந்தியால் ஓர் ஆறு இருந்தது, நாட்டின் பெயர் சூட்டப்பட்ட ஒரே ஆறான அது, பாரத் பூஜா என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், அந்த ஆறு இருக்குமா அல்லது இறக்குமா என்பது பிரச்சினை. ஆறுகள் அவற்றின் தண்ணீரின் பயன்பாட்டினால் இறப்பதில்லை. ஒரு ஆற்றை நிலைத்திட செய்யும் காரணிகளைப் பாதுகாக்கும் கடமைகளை நாம் நிறைவேற்றத் தவறினால், அது மனிதகுலத்திற்கு விவரிக்கமுடியாத சேதத்தை உண்டாக்கும்.
தாய் நர்மதா பனிமலையிருந்து உருவாகவில்லை என்பதையும், உருகும் பனியிலிருந்து உருவாகவில்லை என்பதையும் நாம் அனைவரும் நன்கறிவோம். தாய் நர்மதா ஒவ்வொரு தாவரத்தின் ஆசியுடனும் உருவாகி நம் வாழ்க்கைக்கு ஆசி வழங்குகிறாள். எனவே, தாய் நர்மதாவின் வளமான எதிர்காலத்திற்கான மிக முக்கியமான பணியை மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது; தாய் நர்மதாவிற்கு உணவு கிடைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதை உறுதி செய்கிறது. இந்த்த் தருணத்தில், நாம் மரக்கன்றுகளை நடும்போது நமது எதிர்காலத் தலைமுறையினருக்காக எத்தகைய சிறப்பான பணியை நாம் செய்கிறோம் என்பதை முழுவதுமாக உங்களால் அறிந்திருக்க இயலாது. நமது மூதாதையர்களின் கடின உழைப்பு, ஆற்றல் மற்றும் கடுமையான சேவைகளின் காரணமாகவே நாம் இன்று தாய் நர்மதாவின் பயன்களைப் பெறுகிறோம். இன்று நாம் செய்த கடும் பணியை எதிர்காலச் சந்ததியினர், தாய் நர்மதாவைக் காப்பாற்ற; தாய் நர்மதாவிற்குப் புத்துயிர் அளிக்க ஒரு காலத்தில் மக்களை மரம், செடிகளின் உதவிகளைப் பெற்றுள்ளனர் என்பதை நினைவு கூருவார்கள். ஏறக்குறைய 150 நாட்களுக்கான இப்பயணம் மிகவும் கடினமானதாகும், இருப்பினும், இத்தகைய நிகழ்வுகளில், அரசு, அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து ஈடுபடும்போது, அத்தகைய பெரும் முயற்சிகளை நம் நாட்டில் குறைத்து மதிப்பிடுவது துரதிருஷ்டவசமானது. இல்லையெனில், இப்பணிக்காக மத்திய பிரதேச மக்களுக்கு, நர்மதா யாத்திரையுடன் தொடர்புள்ள ஒவ்வொரு நபருக்கும், தாய் நர்மதாவின் கரையோரங்களில வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நதியைக் காப்பாற்றிட நூற்றி ஐம்பது நாட்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முக்கியமான நிகழ்வு வேறு எந்த நாட்டிலாவது நடைபெற்றிருந்தால், அது உலகளவில் பேசப்படும் பொருளாக இருந்திருக்கும். அது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டிருக்கும் மற்றும் உலகில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அத்தகைய நிகழ்வைப் படம்பிடிக்க விரைந்திருப்பார்கள். எனினும், நம் நாட்டில் நமது முயற்சிகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் அளித்து அங்கீகாரம் அளிக்கத் தவறியுள்ளதும், அத்தகைய வாய்ப்புகளைத் தவறவிடுவதும் துரதிருஷ்டவசமானது.
மனிதகுலத்தைக் காப்பாற்ற அந்த நாட்டில் சூரிய எரிசக்திப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று வேறு எங்காவது சூரிய எரிசக்திப் பூங்கா நிறுவப்பட்டிருந்தால், உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டிருக்கும். ஒரு நதியைக் காப்பாற்றும் பெரும் பணியை நிறைவேற்றியுள்ளோம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மிகப் பிரமாண்டமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் மக்கள் உறுதியேற்று, இந்த இருபத்தைந்து லட்சம் மக்களுடன் லட்சோபலட்சம் மக்கள் மக்கள், மிகக்கடினமான நாட்களிலும் கடும்துயரங்களையும், உடல் வலியையும் தாங்கி, தாய் பூமியையும், ஆற்றையும், சுற்றுச்சூழலையும், மனிதகுலத்தையும் காப்பாற்றிட நெடுந்தூரங்கள் நடந்துசென்று கடுமையாக உழைத்துள்ளனர். நான் சிவ்ராஜ் அவர்களையும், அவரது குழுவினரையும் மத்தியப் பிரதேச மக்களையும் இந்த மாபெரும் பணியை மேற்கொண்டதற்காகப் பாராட்டுகிறேன்.
நான் குஜராத்தில் பிறந்தேன். நர்மதா நீரின் ஒவ்வொரு துளியின் மதிப்பும் குஜராத்தியர்களுக்கு நன்கு தெரியும். இன்று நர்மதாவின் எதிர்காலத்திற்கான மாபெரும் பணியை மக்களாகிய நீங்கள் மேற்கொள்ளும்போது, குஜராத் கிராமங்கள், மக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாகவும், இராஜஸ்தான் கிராமங்கள், மக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாகவும் மற்றும் மகாராஷ்டிராவின் கிராமங்கள், மக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாகவும், மத்தியப் பிரதேச மக்களுக்கும், மத்திய பிரதேச அரசிற்கும் நான் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய இந்தியா இயக்கம் தற்போது ஓர் ஒழுங்கு நிறைந்த நடைமுறையைப் பெற்றுள்ளது. தூய இந்தியா இந்தியா இயக்கம் தொடர்ந்து மூன்றாம் தரப்பினரால், எந்த மாநிலத்தில் என்ன நடைபெறுகிறது, எந்த நகரம் தூய்மையாக உள்ளது என மதிப்பிடப்படுகிறது. ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமை மக்களின் பங்கேற்பாகும். நாம் மக்களின் வலிமையை, மக்களின் சக்தியை மற்றும் மக்களின் பங்கேற்பைப் புறம் தள்ளினால், அரசுகளால் எதையும் சாதிக்க இயலாது. எத்தகைய சிறந்த யோசனையாக இருப்பினும், எத்தகைய தகுதியான தலைமையைப் பெற்றிருப்பினும், எத்தகைய சிறந்த அமைப்பினைப் பெற்றிருப்பினும், மக்களின் பங்கேற்பு இல்லாவிட்டால் எதுவும் வெற்றி பெற இயலாது. மக்களின் பங்கேற்புடன் இத்தகைய திட்டங்கள் எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு மத்திய பிரதேசம் ஒரு முன்னுதாரணத்தை வகுத்துள்ளது.
கடந்த முறை, நாட்டின் தூய்மை குறித்து ஆய்வு நடத்தியபோது, மத்தியப் பிரதேசம் அதன் பெருமையை இழக்கும் தருவாயில் இருந்தது, இருப்பினும், அரசு அந்த இழிவிலிருந்து வெளிவர வேண்டும் என்ற உறுதியுடன், மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டியும், மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தும், மக்கள் இயக்கத்துடன் இணந்ததற்காகவும் இன்று நான் மத்தியப் பிரதேச அரசைப் பாராட்டுகிறேன். தூய்மைக்காக நமதுநாட்டில் உள்ள 100 நகரங்களை மதிப்பிடும்போது, மத்தியப் பிரதேசத்திலிருந்து 22 நகரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். தூய்மைத் துறையில், மத்தியப் பிரதேசம் தனது மக்களைத் தூய்மை இந்தியா இயக்கத்தில் ஈடுபடுத்தியுள்ளதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. தூய்மைப் பிரிவில், நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை இந்தூர் மற்றும் போபால் முறையே பெற்றுள்ளன.
மொத்தம் நாட்டில் உள்ள 100 நகரங்களில், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த 22 நகரங்கள் முக்கிய இடங்களைப் பெறுவது என்பது மாநில நிர்வாகம் மற்றும் மாநில மக்கள் அதனைத் தங்களது சொந்தப் பணி எனக் கருதுவதே அதன் அர்த்தமாம். அதுவே நர்மதா யாத்ரா திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. இது மக்களின் சக்தியால் அடைய முடிந்ததே ஒழிய அரசின் சக்தியினால் அடைந்ததல்ல. மக்களின் பங்கேற்பு மிகப் பெரும் சாதனைகளை உருவாக்கியுள்ளது. சிவராஜ் அவர்கள் ஜூலை 2 அன்று 6 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக நாற்றங்கால் பண்ணைகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், அப்போதுதான் இது வெற்றி பெறும். இக்கன்றுகளை நம் குழந்தைகள் போல பாதுகாக்க வேண்டும், அப்போதுதான் இக்கன்றுகள் பெரும் ஆலமரங்களாக வளரும்.
அடுத்த ஒரு வருடம் குறித்து மட்டும் சிந்திக்கும் ஒருவர் பயிர்களை வளர்க்கிறார், ஆனால் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் ஒருவர் பழம் தரும் மரக்கன்றுகளை நடுகிறார் என நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பழம் தரும் மரக்கன்றுகளை நடும் இப்பணியானது எதிர்காலத்தில் பல குடும்பங்களுக்குப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கும். மத்தியப் பிரதேச அரசால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை நான் படித்துப் பார்த்தேன். மத்திய பிரதேச அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டம் மற்றும் அது தயாரித்துள்ள திட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும், யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றைத் தெரிவிக்கும் விதத்தில் மிக விரிவாக அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது எதிர்கால தொலைநோக்கு குறித்த முழுமையான ஆவணமாகும். நான் இதனை மற்ற மாநிலங்களுக்கும் வலியுறுத்துகிறேன். சிவராஜ் அவர்கள் இப்புத்தகத்தின் பிரதியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பி வைத்து, மத்தியப் பிரதேசத்தை எடுத்துக்காட்டாக்க் கொண்டு எவ்வாறு இயற்கை வளஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் அவர்களும் அதற்கேற்றவாறு திட்டங்களைத் தயாரிக்க இயலும்.
வாழ்க்கையின் ஆதாரம் நீர், நாம் ஆற்றைத் தாய் எனக் கூறினால், நமது ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ஆற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று அர்த்தமாகும். அது இல்லாமல் போனால் நமது பொருளாதாரம் அழிந்துபோகும். மத்திய பிரதேசத்தின் விவசாயத் துறையின் வளர்ச்சி இருபது சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால், இத்தகைய வளர்ச்சிக்குப் பெருமளவிலான காரணம் தாய் நர்மதாவே ஆகும். இது தான் சக்தி, விவசாயின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி தாய் நர்மதாவிடம் உள்ளது.
2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கோடு இந்தியா முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்தியப் பிரதேசம் விரிவான திட்டம் ஒன்றைத்தயாரித்துள்ளது. ஒவ்வொரு கிராமமும் இத்திட்டத்தின் பலனைப் பெற இயலும் என நான் நம்புகிறேன்.
எனதருமை சகோதர, சகோதரிகளே, 2022-ல் நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யஉள்ளோம். 125 கோடி இந்தியர்களும் எப்போதும் நமது 75 ஆவது சுதந்திர ஆண்டை நினைவு கொண்டிருக்க முடியுமா? நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த அந்தப் புகழ்மிக்க மனிதர்கள், தங்களது இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்தனர், சிலர் உயிர்த் தியாகம் புரிந்தனர், தாய் இந்திய நாட்டிற்காகப் பிறர் தங்களது குடும்பத்தையே தியாகம் புரிந்தனர்; நாம் தனிநபராக, குடும்பமாக, சமூகமாக, 2022-க்குள் நமது நாட்டிற்காக இதனை நிறைவேற்றுவோம் என நாம் உறுதிகொள்ள முடியுமா? நமது கிராமத்தில் உள்ள நமது மக்கள் இதனைச் செய்யலாம், ஒரு நகரமாக நாம் இதனைச் செய்வோம், ஒரு நிறுவனமாக நாம் இதனைச் செய்வோம், ஒரு சமூகமாக, ஒரு மாநிலமாக மற்றும் ஒரு நாடாக நாம் இதனைச் செய்வோம்.
நாம் 2022-க்குள் ‘புதிய இந்தியா’வை உருவாக்கும் கனவை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு இந்தியனையும் அதில் பங்கேற்கச் செய்ய வேண்டும். நாம் ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனும் புதிய உச்சங்களைத் தொட, ஒரு ‘புதிய இந்தியா’வை உருவாக்கிட, நாம் சுதந்திரப் போராட்டத்தின்போது செய்தவாறு செய்ய வேண்டும். ஆகையால், நான் எனது நாட்டுமக்களை வலியுறுத்த விரும்புகிறேன், நான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன், 2022-க்குள் ஒரு நிறுவனமாக, ஒரு குடும்பமாக, ஒரு சமுதாயமாக, ஓர் இயக்கமாக அல்லது ஒரு குழுவாக நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்; நீங்களே அதை முடிவு செய்யுங்கள். நாம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாட்டை உயர்த்திவருகிறோம். அத்தகைய ஐந்தாண்டுகளில் நாம் புதிய உச்சங்களை அடைய முடியும். நாட்டில் உள்ள 125 கோடி மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்துவைத்தால், அடுத்த ஐந்தாண்டுகளில், நாடு 125 கோடி அடிகள் முன்னோக்கிச் செல்லும் என நான் நம்புகிறேன்.
எனக்கு ஆசிகள் வழங்கியதற்காகவும், என் மீது கொண்டுள்ள அன்பிற்காகவும் நான் மதிப்புமிக்க அவதேஷானந்த் அவர்களுக்குச் சிறப்பாக மரியாதை செலுத்துகிறேன்; அத்தகைய தகுதிகள், அத்தகைய மாண்புகள், அத்தகைய அர்ப்பணிப்புமிக்க உணர்வுகளை அளித்திட நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்; அதன் மூலம் நான் நாட்டிற்குச் சரியான வழியில் பணியாற்ற நம்மை நாமே தயார் செய்துகொள்ள முடியும். அவரது அன்பான வார்த்தைகளுக்காகவும், ஆசிகளுக்காவும் நான் எனது ஆழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்து அவரை வணங்குகிறேன்.
நான் உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சிவராஜ் அவர்கள் கூறியதைப் போல, இப்பயணம் இங்குத் தற்காலிகமாக நின்றுள்ளது, எனினும், பயணத்தின்போது நாம் சிந்தித்ததை, நாம் காண்டதை, நாம் செய்ததைச் செயல்படுத்த வேண்டிய காலமிது. பயணம் முடிவடைந்துவிட்டது. ஆனால் வேள்வி துவங்கியுள்ளது. இந்த வேள்வியில் நாம் தியாகம் செய்ய வேண்டும், அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்; சமுதாயத்திற்காக நமது விருப்பங்கள் மற்றும் ஆசைகளைத் தியாகம் செய்ய வேண்டும். நர்மதா ஆற்றின் பிரகாசமான எதிர்காலத்திற்கான இந்த வேள்வி, உங்களது கடுமையான பணியின் மூலம் பெரும் உச்சங்களை எய்தும் என நான் நம்புகிறேன். இந்த உணர்வுடன், நான் ‘நர்மதே’ எனக் கூறும்போது, உங்கள் கைகளை உயர்த்தி ‘சர்வதே’ எனக் கூற வேண்டுகிறேன்.
நர்மதே – சர்வதே
உங்களது ஒட்டுமொத்தக் குரலும் தாய் நர்மதாவின் மறுமுனையான, காம்பட் வளைகுடாவை எட்ட வேண்டும்.
நர்மதே – சர்வதே
நர்மதே – சர்வதே
மிக்க நன்றி
***
(Release ID: 1529280)
Visitor Counter : 71