உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சரக்குப் போக்குவரத்து மையமாக கோவா மேம்படுத்தப்படும்- சுரேஷ் பிரபு

Posted On: 16 APR 2018 6:16PM by PIB Chennai

மாநில அரசு மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் கோவாவை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாகவும், போக்குவரத்து மையமாகவும் மேம்படுத்த மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். தாபோலிம் விமானநிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார்.

மோப்பா விமானநிலையம் 2020 செப்டம்பர் வாக்கில், செயல்பாட்டுக்கு வரும். மோப்பாவுடன் சேர்ந்து தாபோலிம் விமானநிலையமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் திரு. பிரபு கூறினார்.

ரூ.300  கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாபோலிம் விமானநிலைய புதுப்பிப்பு பணி நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் புதிய பல அடுக்கு வாகன நிறுத்த வளாகத்துடன் செயல்பாட்டு வரும். தாபோலிம் விமான நிலையத்தில் ஒரு பகுதி டாக்சி சேவைகளை செயல்படுத்துவதற்காக கோவா சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும். ஒரு பிரிவு உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்காக மாநில அரசுக்கு ஒதுக்கப்படும். சர்வதேச சந்தைக்கு எளிதாக சென்றடைய சரக்குப் போக்குவரத்து விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று திரு. சுரேஷ் பிரபு கூறினார். இரண்டு விமானநிலையங்களை கோவா பெறும்போது, பயணிகளைக் கையாளும் திறன் மூன்று கோடியாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

==========



(Release ID: 1529272) Visitor Counter : 112


Read this release in: English