சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள் குறித்துச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது
Posted On:
16 APR 2018 3:52PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை (திருத்தம்) விதிகள் (2018) குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மறுசுழற்சி செய்யப்படாத அல்லது எரிசக்திக்குப் பயன்படாத, வேறு எந்தப் பயன்பாடும் அல்லாமல் அடுக்கடுக்காகக் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் படிப்படியாக அழிப்பதற்கு திருத்தப்பட்ட இந்த விதிகள் வழிவகுக்கும்.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர், இறக்குமதியாளர், அதற்கான பிராண்ட் உரிமையாளர் ஆகியோர் மத்தியப் பதிவுமுறையின் கீழ் பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் இந்தத் திருத்தம் அமைந்திருக்கும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்வோர், பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் தங்களது தொழில்களுக்கான பதிவுகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் தானாகவே செயல்படும் முறைக்கு இந்த விதிகள் வழி செய்கின்றன.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர், பிராண்ட் உரிமையாளர் ஆகியோர் தங்களது பதிவுகளைப் பூர்த்தி செய்வதற்கான பதிவுமுறை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் வடிவமைக்கப்படும். இரு மாநிலங்களுக்கு மேல் நிறுவனங்களை இயக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள் அவற்றுக்கான பதிவை மத்தியப் பதிவின் கீழ் மேற்கொள்ள வேண்டும். இரண்டு மாநிலங்கள் அல்லது அதற்குள் நிறுவனங்களை இயக்குவோர் மாநில அளவிலான பதிவுகளின்கீழ் பதிவை மேற்கொள்ளவேண்டும்.
இத்துடன் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகளில் (2018) இடம்பெற்றுள்ள “கேரி பேக்” எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு வெளிப்படையாக விலை நிர்ணயிப்பதற்கான 15ஆவது விதி நீக்கப்படுகிறது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகள், வேண்டுகோள்களை அடுத்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் (2018), திடக் கழிவு மேலாண்மை விதிகள் (2016) ஆகியவற்றை அமல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள், சவால்கள் குறித்து ஆராய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அந்த விதிகள் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதித்து, அதன் பரிந்துரைகளை மத்திய அமைச்சகத்துக்கு அளித்துள்ளது.
அதையடுத்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகளை (2018), 2018ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியிட்டது.
***
(Release ID: 1529245)
Visitor Counter : 1087