குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வலுவான பண்பையும், சமரசமற்ற நேர்மையையும், ஒருமைப்பாட்டையும் கொண்டிருக்கவேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 16 APR 2018 2:56PM by PIB Chennai

வலுவான பண்பையும், சமரசமற்ற நேர்மையையும்,  ஒருமைப்பாட்டையும் கொண்டிருக்கவேண்டும் என்று நிர்வாகவியல் மாணவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அறிவுரை கூறினார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் இன்று (16.04.2018) இந்திய நிர்வாகவியல் கல்விக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். மேகாலயா ஆளுநர் திரு. கங்கா பிரசாத், மேகாலயா உள்துறை அமைச்சர் திரு. ஜேம்ஸ் கே. சங்மா மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முழுமையாக மாண்புகள் அழிவதும், சட்டத்தின் மீதான அச்சம் இல்லாமல்போவதும், மக்களிடையே ஏற்புடையது அல்லாத, குறுகிய எண்ணம்கொண்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பது கண்கூடாக தெரிகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  பெருந்தன்மை, ஒருமைப்பாடு, உண்மையாக இருப்பது, சிறந்த நடைமுறைகளை ஏற்பது போன்ற மாண்புகளைப் பின்பற்றுவது முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார். பெருநிறுவனங்களின் ஒழுங்குமுறைகளும் மீறப்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

உழைக்காமல் பெற்ற செல்வம், மனச்சாட்சி இல்லாத இன்பம், ஒழுக்கம் இல்லாத அறிவு, நேர்மை இல்லாத வணிகம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல், தியாகம் செய்யாத சமயம், கோட்பாடு இல்லாத அரசியல் என மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய ஏழு குற்றச் செயல்களை நினைவில் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார். தங்களின் பணி சிறக்க மாணவர்கள்  வலுவான பண்பும், சமரசமற்ற நேர்மை, ஒருமைப்பாடு நெறிசார்ந்த மாண்புகள், பொறுமை, நன்றி உணர்வு போன்றவற்றை உடைமையாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.  உங்கள் நிறுவனங்களில் உள்ளவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மற்றவர் மனங்களிலும், உங்களின் நேரடியான ஊழியர்களைச் சார்ந்து உள்ளவர்களின் மனங்களிலும், தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றிஉணர்வு, எதிர்ப்பார்ப்பின்றி உதவுதல், சக மனிதர்கள்மீது அக்கறை செலுத்துதல் போன்ற நல்ல குணங்கள், பொருள் நோக்கிலான மற்றும் நுகர்வுத்தன்மை கொண்ட நவீன உலகில் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், தன்மீது அக்கறைகொள்ளும் அதேவேளையில்  பகிர்ந்தளிக்கும் மனோபாவத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார். பொருளின் தரம், சிறப்பான சேவை, நெறிமுறையுடன் கூடிய வர்த்தக நடைமுறைகள் ஆகியவை ஆக்கப்பூர்வமான உலகின் குறியீட்டுக்கான அடையாளங்களாகும். சிறந்த தலைவர் என்ற முறையில், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்தத் தரங்களின் சான்றுகளைப் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

கல்வி என்பது, வேலைவாய்ப்புக்கு மட்டுமானது அல்ல, நல்லறிவுக்கும், அதிகாரம் அளித்தலுக்கும் உரியதாகும் என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், ஐ ஐ எம் போன்ற நிர்வாகவியல் கல்வி நிறுவனங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சிக்குக் கூடுதல் கவனம் செலுத்துவதை அதிகப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.

===========



(Release ID: 1529239) Visitor Counter : 170


Read this release in: English , Hindi