பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராமானுஜர் அஞ்சல்தலை வெளியீட்டுவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
01 MAY 2017 5:25PM by PIB Chennai
மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியும் மகானுமான ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதற்காகப் பெருமிதம் கொள்கிறேன்.
உள்ளடங்கிய சமூகம், மதம், தத்துவம் ஆகியவையே மகான் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கையின் மையச் செய்தியாகும். இருப்பது அனைத்தும், இருக்கப்போவது அனைத்தும் கடவுளின் வெளிப்பாடேயன்றி வேறில்லை என்று மகான் ஸ்ரீ ராமானுஜர் நம்பினார். கடவுளின் வெளிப்பாட்டை மனிதர்களிலும், மனிதர்களின் வெளிப்பாட்டைக் கடவுளிலும் அவர் கண்டார். கடவுளின் அனைத்து பக்தர்களையும் அவர் சரிசமமாகக் கண்டார்.
சாதிய வேறுபாடுகளும் சாதியப் படிநிலைகளும் சமூகத்தின், மதத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொருவரும் படிநிலையில் உயர்வாகவும் தாழ்வாகவும் அதனதன் இடத்தில் அதனை வைத்து ஏற்றுக்கொண்டிருந்தனர். மகான் ஸ்ரீ ராமானுஜர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மதபோதனைகளிலும் அவற்றுக்கு எதிராகப் போராடினார்.
மகான் ஸ்ரீ ராமானுஜர் அவருடைய விரிவுரைகளோடு நின்றுவிடாமல் நிலைத்ததுடன் புதிய பாதையைக் கண்டடைபவராகவும் அல்லாமல் தன் வார்த்தைகளுக்கு ஏற்பவே வாழ்ந்தார். மனம், வாக்கு, செயல் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கி, தமது வாழ்க்கையை அவர் ஒரு வழிபாடாகவே ஆக்கிக் கொண்டார். அவருடைய இதயத்தின் சிந்தனை அவருடைய வாக்கினில் வெளிப்பட்டது. அதுவே அவருடைய செயல்களிலும் தென்பட்டது. சிக்கல்கள் உருதிரண்டு வருவதை நிறுத்தும் நோக்குடன் அவர் எப்போதும் சச்சரவுகளையும் முரண்பாடுகளையும் தீர்த்துவிடவே முயன்றார். கடவுளைப் புரிந்துகொள்வதற்காக அத்வைதம் மற்றும் துவைதம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு தனி இணைப்பாக விசிஷ்டாத்வைதம் என்னும் இடைவழியை அவர் கண்டார்.
மகான் ஸ்ரீ ராமானுஜர் சமூகத்தைக் கூறு போடும் அப்படிப்பட்ட ஒவ்வொரு சடங்கையும் தீர்மானமாக எதிர்த்தார். அப்படியான முறையை மாற்றவும் தகர்க்கவும் அவர் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.
முக்தி பெறுவதற்கும் வீடுபேறு அடைவதற்கும் கூடிய மந்திரத்தைப் பொதுமக்களுக்குச் சொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டதற்கு மாறாக அவர் அனைத்து சாதி, நிலைகளிலுள்ள அனைவரையும் கூட்டி அதனை வெளிப்படுத்தினார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். துயரங்களை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மந்திரம் தனியொருவருக்கு மட்டுமேயானதாகக் குறுக்கிக்கொண்டுவிடக் கூடாது என்றும் மாறாக ஒவ்வொருவரும் அதனைத் தெரிந்துகொள்ளல் வேண்டும் என்றும் அவர் கூறினார். அத்தகைய விசாலமானதும் துணைபுரியக்கூடியதுமாக ஸ்ரீ ராமானுஜரின் இதயம் விளங்கியது.
ஸ்ரீ ராமானுஜரின் இதயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கசிந்த மாபெரும் இதயம் என்று, அந்த மக்கள் அவரவர் கர்மவினையின் பயனாகவே அவ்வாறு இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவிய அந்தக் காலத்திலேயே ஸ்வாமி விவேகானந்தர் கூறினார் என்பது இதன் மூலம் தெளிவாகும். ஸ்ரீ ராமானுஜர் அவருடைய காலத்தின் மனத்தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்தார். அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டியதாக அவருடைய சிந்தனை விளங்கியது.
ஸ்ரீ ராமானுஜர் பல வகைகளில் ஆயிரம் ஆண்டுகளை முன்னோக்கிச் சென்று, ஒடுக்கப்பட்ட மக்களின் சொல்ல முடியாத மற்றும் மனதில் தேக்கிவைத்திருந்த விழைவுகளைக் காணக்கூடிய ஆயிரங்காலத்துத் துறவியாக அவர் திகழ்ந்தார். மதம் மட்டுமன்றி சமூகமும் முழுமை பெற சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், சாதி விலக்கம் பெற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் முழுமையாக சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தார்.
ஏழை மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டலுக்கு ஆளானவர்கள், வறியவர்கள், தலித் மக்கள் ஆகியோருக்கு அவர் ஒரு கடவுளாகவே தோற்றமளித்தார்.
ஒருகாலத்தில், திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அவர் வேறுபட்ட சாதியினரை ஆலய நிர்வாகத்தில் இடம்பெறச் செய்தார். ஏராளமான பொறுப்புகளை அவர் பெண்களுக்கும் அளித்தார். மக்களின் நலம் பேணவும் பொதுச்சேவை புரியவும் கூடிய ஓர் இடமாகக் கோவில்களை அவர் ஆக்கினார். ஏழை மக்களுக்கு உணவு, உடை. உறையுள் ஆகியவற்றை வழங்கும் நிறுவனமாக ஆலயத்தை அவர் மாற்றியமைத்தார். அவருடைய சீர்திருத்த மாதிரிகள் இன்னும் பல ஆலயங்களில் “ராமானுஜ – கூடம்” என்ற பெயரில் செயல்பட்டுவருவதை நாம் காணலாம்.
அவருடைய வாழ்க்கையில் இத்தகைய பற்பல உதாரணங்களை நீங்கள் காணலாம். சாதி முறையை அவர் எதிர்த்தபொழுது, ஓர் ஆசிரியராக ஆக முடியாது என்று அப்போதைய சமூகத்தால் கருதப்பட்ட ஒருவரைத் தமது ஞானாசிரியனாக அவர் ஆக்கிக் கொண்டார். அவர் பழங்குடி மக்களைச் சென்று சந்தித்து, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களது சமூக நிலையை உயர்த்துவதற்காகப் பாடுபட்டார்.
அவ்வாறு அனைத்து மதப் பிரிவுகளையும் சமுதாயத்தையும் சேர்ந்த மக்கள் ஸ்ரீ ராமானுஜரின் தரிசனத்தாலும் வார்த்தைகளாலும் ஈர்க்கப்பட்டனர். மேலக்கோட்டை ஆலயத்தில் இறைவன் சந்நிதிக்கு எதிரிலேயே வழிபடும் வடிவில் முஸ்லிம் இளவரசியான பீபி நாச்சியாரின் சிலையை நிறுவியது அதற்கான தெள்ளத் தெளிவான நிரூபணமாகும். அந்த ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லி சுல்தானின் மகளான பீபி நாச்சியாருக்கு, ஸ்ரீ ராமானுஜர் தான் சிலையை நாட்டினார் என்பதை ஒரு சிலரே அறிவார்கள்.
இந்தச் செயலின் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கும் சமுதாயக் கலப்பிற்கும் ஸ்ரீ ராமானுஜரால் எத்தகைய மாபெரும் செய்தி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் யூகித்தறியலாம். இப்போதும்கூட பீபி நாச்சியாரின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது. பீபி நாச்சியாரின் சிலையைப் போன்றே ஸ்ரீ ராமானுஜரின் போதனைகளும் இன்றும் பொருத்தப்பாடு உடையதாகவே விளங்குகின்றன.
இந்தியச் சமூகத்தின் தாராளமான மற்றும் பல்முனைப்பட்ட சகிப்புத்தன்மையைப் பாதுகாப்பதாகவும் பலப்படுத்துவதாகவும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கையும் போதனைகளும் அமைந்துள்ளன. பாபா சாகிப் பீம் ராவ் அம்பேத்கர் அவருடைய ‘ பஹிஷ்க்ருத் பாரத்’ பத்திரிகையில் 03.06.1927 அன்று ஸ்ரீ ராமானுஜர் குறித்து தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளார். 90 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது அது நமது இதயத்தை ஊடுருவி அடுக்கடுக்கான அலைகளால் நனைத்துச் செல்கிறது.
பாபா சாகிப் எழுதினார் : “ உண்மையிலேயே ஸ்ரீ ராமானுஜர் தான் இந்துமதத்தில் சமத்துவத்தையும் வேறுபாடின்மையும் கொண்டுவரவும் நடைமுறைப்படுத்தவும் பங்களிப்பு செய்து அதற்காகப் பாடுபட்டார். அவர் பிராமணரல்லாதவரான காஞ்சிபூரணரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டார். அந்த குரு அவருடைய வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டுச் சென்ற பின் அவருடைய மனைவி வீட்டைச் சுத்தப்படுத்த முனைந்தபோது ஸ்ரீ ராமானுஜர் தமது வேதனையை வெளிப்படுத்தினார். ஒரு தலித் குரு வந்துசென்றதையொட்டி தமது வீடு தூய்மைபடுத்தப்படுவது கண்டு ஸ்ரீ ராமானுஜர் பெரிதும் மனம் நொந்தார். அவர் அதனால் ஆத்திரமடைந்ததுடன், எந்தக் கோளாறை ஒழிப்பதற்காக அவர் முழுமுயற்சியுடன் பாடுபாட்டாரோ அதனைத் தமது வீட்டிலிருந்தே விரட்டியடிக்க முடியாதுபோனது குறித்து வருந்தவும் செய்தார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால், ஸ்ரீ ராமானுஜர் துறவை மேற்கொண்டு தமது எஞ்சிய வாழ்நாளையெல்லாம் சமுதாயத்தின் நலனுக்காக அர்ப்பணித்துக்கொண்டார். அவர் போதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்தப் போதனைகளை அவர் தமது வாழ்வில் கடைப்பிடிக்கவும் செய்தார் என்று நான் மீண்டும் கூறுவேன்”
பாபா சாகிப் அந்தத் தலையங்கத்தில் ஸ்ரீ ராமானுஜர் எவ்வாறு அந்த நாட்களில் நிலவிய சமுதாயத்தின் மனநிலையில் பெண்களுக்கு அதிகாரமளித்தார் என்பதையும் விவரித்திருந்தார்.
அவர் எழுதுகிறார் : “திருவல்லியில் ஒரு தலித் பெண்மணியுடன் விவாதம் மேற்கொண்ட நிலையில் அவர் (ஸ்ரீ ராமானுஜர்) என்னை விட நீங்கள் நன்கறிந்தவர் என்று அவரிடம் கூறினார். அதன் பிறகு அவர் அந்தப் பெண்மணிக்கு நல்ல துவக்கத்தை அளித்து கோவிலில் அவரது உருவச் சிலையை நிறுவவும் செய்தார். தனுர்தாஸ் என்னும் தீண்டப்படாதவரை அவர் தமது சீடராக ஆக்கிக் கொண்டார். தினமும் ஆற்றில் குளித்த பின்னர் இந்தச் சீடரின் உதவியுடன் வீடு திரும்புவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இது ஞானத்தால் பெற்ற அமைதி மற்றும் போர்க்குணம் ஆகியவற்றின் தனித்தன்மை வாய்ந்த ஒரு இணைப்பாகும். தலித் குரு ஒருவரின் வருகையைத் தொடர்ந்து எவர் ஒருவரின் வீடு சுத்தம் செய்யப்பட்டதோ, அவர் நதியில் நீராடியதன் பின்னர் தலித் சீடரின் துணையுடன் கோவிலுக்குச் செல்கிறார். அந்நாளில் சுதந்திரமாகப் பேசுவதற்குத் தடுக்கப்பட்டிருந்த தலித் பெண்மணியுடன் வாதிட்டுத் தமது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன் அவரது உருவச் சிலையையும் கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் நிறுவுகிறார்.
அதனால்தான் பாபா சாகிப் ஸ்ரீ ராமானுஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பாபா சாகிபைப் படிக்கும் ஒருவர் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்வாலும் சிந்தனையாலும் பெரும் தாக்கத்தை அடைவார்.
ஓராயிரம் ஆண்டு காலத்தின் பல்வேறு காலப்பகுதிகளில் ஒருசிலரது வாழ்க்கையே இவ்வாறு அமைகிறது என்று நான் நினைக்கிறேன். ஸ்ரீ ராமானுஜரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டும் செயல்பட்டும் வருவது இந்த 1000 ஆண்டுகளில் எண்ணற்ற சமூகச் சீர்திருத்தங்களும் இயக்கங்களும் உருவாக வழியமைத்திருக்கிறது. அவருடைய எளிய போதனைகள் கூட பக்தி இயக்கத்தை உருவாக்கக் காரணமானது.
மகாராஷ்டிராவின் வர்க்காரி இயக்கம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் வல்லப இயக்கம், மத்திய இந்தியா மற்றும் வங்காளத்தின் சைதன்யா இயக்கம், அஸ்ஸாமின் சங்கர் தியோ ஆகிய வழிபாட்டுமரபுகள் ஸ்ரீ ராமானுஜரின் போதனைகளைப் பரந்துபட்ட மக்களுக்குப் எடுத்துச்சென்றன.
குஜராத்தின் முன்னோடிக் கவிஞரான நார்சி மேத்தா ஸ்ரீ ராமானுஜரால் கவரப்பட்டு, “ வைஷ்ணவ ஜன தோம் தேனே கஹியே, ஜே பிர் பராயி ஜானே ரே “ என்று கூறி அதனால் ஏழைகளின் வேதனையை ஸ்ரீ ராமானுஜரால் தான் தன்னால் உணர முடிந்தது என்றார்.
ஸ்ரீ ராமானுஜரின் போதனைகள் இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களைச் சமூகப் பொறுப்பினையும், சமூக நல்லிணக்கத்தையும் மேற்கொள்ளவைத்தது. மதத்தின் பெயரால் வெறியிலும் சடங்குகளிலும் மூழ்குவது கோழைகள், அறியாமையில் உழல்பவர்கள், மூடநம்பிக்கையாளர்கள் ஆகியோரின் வழியாகும் என்று அவர் நமக்குக் கற்பித்துள்ளார். எனவே, சாதிமுறை, வேற்றுமை, வன்முறைக்கு எதிரானவர்கள், குரு நானக் மற்றும் கபீர் ஆக மாறுவார்கள்.
வழக்கொழிந்த அந்தப் பழையனவற்றை மாற்றியமைத்துப் புதுப்பிப்பது நமது பண்பாடாகும். எனவே, நமது நாட்டில் சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்ட மாபெரும் ஆத்மாக்கள் தோன்றினார்கள். அதற்காக நஞ்சருந்தித் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் இடர்களை எதிர்கொண்டார்கள். பல நூற்றாண்டுகளாக நிலவிய அமைப்புத் தவறுகளைக் களைய அவர்கள் பாடுபட்டார்கள். சமூகச் சீர்திருத்தங்களுக்கான அவர்களது வேட்கை இந்தியாவின் மனச்சான்றையும் அதன் விழிப்புணர்வையும் காப்பதாக இருந்தது.
ஸ்ரீ ராமானுஜர் போன்ற ஞானிகளால் நிரந்தர சமூக விழிப்புணர்வின் பக்தியோட்டத்தின் மீதான மரியாதை, என்றென்றும் நமது புகழ்வாய்ந்த கடந்த காலத்தில் உறுதியாக நின்று, பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தது. நமது சிந்தனை காலஎல்லைகளைக் கடந்து நமது முன்னேற்றத்தை விளைவித்தது. நமது கலாச்சாரம் தொன்மையானதாக இருந்தும் அதன் நிரந்தரத்தன்மை இன்னும் ஆரம்பநிலையிலேயே இருக்கிறது. உலகவரைப்படம் பெரும் மாற்றங்களைச் சந்திதுள்ளது. பற்பல பேரரசுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் நமது பாரதம், நமது இந்துஸ்தான் இன்னும் பீடுநடை போடுகிறது.
ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்ததினத்தையொட்டி இன்று, பல நிறுவனங்கள் இணைந்து அவருடைய போதனைகளை இல்லங்கள்தோறும் பரப்புவது அறிந்து மகிழ்கிறேன். நமது நாட்டின் இன்றைய நிலையுடன் ஒத்துப் போகும் வகையில் இந்தப் போதனைகள் கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஸ்ரீ ராமானுஜர் ஏழைகளின் தேவைகள் நிறைவேற்றப்படுவதைச் சமூகப் பொறுப்புணர்வுடன் இணைத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எடுத்துக்காட்டாக, மேல்கோட்டையின் அருகே தொண்டனூரில் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு செயற்கை ஏரி உண்டாக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி ஸ்ரீ ராமானுஜர் மக்கள் நலனுக்காக பாடுபட்டதைக் குறிக்கும் ஒரு வாழும் உதாரணமாக இன்றும் நிலவுகிறது. இன்றும் கூட 70 கிராமங்களுக்கான குடிநீர் மற்றும் பாசன வசதிகளை அது நிறைவேற்றிவருகிறது.
இன்று எங்கும் நீராதாரம் குறித்த கவலைகள் சூழ்ந்திருக்கும் நேரத்தில், இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீர் சேமிப்பின் அவசியத்திற்கான விடையை அளித்துள்ளது. இந்த ஏரியால் எண்ணற்ற தலைமுறைகள் பயன்பெற்று, உயிர் வாழ்ந்துள்ளன. நீர் சேமிப்புக்காக நாம் இப்போது என்னென்ன திட்டங்களைத் தீட்டிவருகிறோமோ அவை பல நூற்றாண்டுகளுக்கு மக்களுக்குப் பயன் தருவனவாக மாறும் என்பதற்கு இந்த ஏரி ஓர் ஆதாரமாகும். எனவே, ஆறுகளையும் ஏரிகளையும் சுத்தப்படுத்துவது , லட்சக்கணக்கான குளங்களைத் தோண்டுவது ஆகியன தற்போதைய மற்றும் எதிர்கால முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாகும்.
இந்த ஏரியைப் பற்றி நான் குறிப்பிடும்போது, ஸ்ரீ ராமானுஜரின் போதனைகளைப் பரப்புகையில் இப்போதிலிருந்தே நீர் சேமிப்புக்காகவும் மக்களை ஊக்குவிக்க, ஆற்றல்படுத்த வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா 2022 இல் அதன் 75 ஆவது சுதந்திர ஆண்டில் அடியெடுத்துவைப்பதையொட்டி, நாம் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் கட்டுப்பாடுகளையும் பலவீனங்களையும் கடப்பதற்காகப் பாடுபட வேண்டும் என்றும் இங்குக் கூடியுள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும்கூட, அளவிடத்தக்க தெளிவான குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பத்தாயிரம் கிராமங்களை சென்றடைவதா அல்லது ஐம்பதாயிரம் வசிப்பிடங்களை சென்றடைவதா என்று நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள்.
ஸ்ரீ ராமானுஜரின் தேசிய மத விழிப்புணர்வு வாசகங்களுக்குக் கூடுதலாக இன்றைய சவால்களுடன் மனிதகுல நலத்திற்காக, மகளிர் நலத்திற்காக, ஏழை மக்களுக்கு அதிகாரமளித்தலுக்காக மேலும்மேலும் மக்களைச் செயலூக்கப்படுத்துமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீ ராமானுஜரின் நினைவு அஞ்சல்தலையை வெளியிடும் ஒரு வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த வகையில் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.
***
(Release ID: 1529218)
Visitor Counter : 316