பிரதமர் அலுவலகம்
போர்ச்சுகீசிய பிரதமரின் இந்திய வருகையின்போது ஊடகங்களுக்காக வெளியிட்டப்பட்ட பிரதமரின் அறிக்கை (ஜனவரி 07,2017)
Posted On:
07 JAN 2017 8:32PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா,
தனித்தன்மைமிக்க பேராளர்களே,
ஊடகவியலாளர்களே,
நண்பர்களே,
அனைவருக்கும் என் மாலை வணக்கம்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
உங்களையும் உங்கள் பேராளர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இந்தியாவுக்கு வருவது இது முதல்முறையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்தியாவிற்கு, அறிமுகமில்லாதவர் அல்ல. இந்தியாவும் உங்களுக்குப் பரிச்சயமற்ற நாடு அல்ல. குளிர்வீசும் இந்த அருமையான மாலைவேளையில் உங்களை மனம்நிறைய மீண்டும் வருக வருக என வரவேற்கிறேன். எங்கள் அழைப்பை ஏற்று, பெங்களூருவில் நடக்கும் பிரவாசி பாரதிய திவஸ் (வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம்) கொண்டாட்டத்திற்கு தலைமை விருந்தினாராக நீங்கள் வந்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட நீங்கள் தனித்தன்மைமிக்க தலைவராக விளங்குவதையும், பல சாதனைகள் புரிந்துள்ளதையும் கொண்டாடும் வகையில் நாளைய நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. உங்கள் தலைமையில் போர்ச்சுகல் நாடு அடைந்திருக்கும் வளர்ச்சிக்காக உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் பிரதமர் ஆனபின் போர்ச்சுகல் பொருளாதாரரீதியாகச் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவும், போர்ச்சுகலுக்கும் இருக்கும் வரலாற்றுரீதியான ஒற்றுமையின் மீதே நம் இருதரப்பு உறவுகளும் அமைந்து வந்துள்ளன. ஐநாவில் மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேசச் சூழல்களிலும் நம் உறவு பலமான ஒன்றாகவே இருந்துள்ளது. பிரதமர் கோஸ்டாவுடனான எனது விரிவான ஆலோசனைக்குப் பின் பல்வேறு துறைகளிலும் இந்தியா-போர்ச்சுகல் இடையேயான உறவை ஆராய்ந்தோம். இருநாடுகளும் கூட்டாக செயல்படுவதன்மூலம், இருநாடுகளின் முழுமையான பொருளாதார வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் முடிவுசெய்தோம். இருநாடுகளின் உறுதித்தன்மையை வெளிப்படுத்துவதாகவே இன்று கையெழுத்தான ஒப்பந்தம் அமைந்துள்ளது.
.
நண்பர்களே,
இருநாடுகளுக்கும் இடையிலான வணிகம், முதலீடு மற்றும் வியாபாரக் கூட்டுகளை விரிவுபடுத்துவதே நமது முக்கிய நோக்கம் ஆகும். உட்கட்டமைப்பு, கழிவு மற்றும் நீர் மேலாண்மை, சூரிய ஒளி மற்றும் காற்றுச் சக்தி, புத்தாக்கத்துறை எனப் பல துறைகளில் வலுவான வணிகக் கூட்டை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருநாடுகளுக்கும் இடையில் உள்ளது. ஆரம்பத் தொழில்களுக்கு இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது இருதரப்பும் இணைந்து செயல்பட ஏதுவான பகுதியாக இருக்கும். மேலும் இருநாட்டு இளம்தொழிலாளர்களுக்கும் பரஸ்பரம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் உறவை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். பிரதமர் கோஸ்டாவும் நானும் பாதுகாப்புத்துறையிலும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஒத்த கருத்தோடு இருக்கிறோம். இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்புக்கும் பயன்தரும் வகையில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உதவும். இருதரப்பு உறவும் மேம்பட சாதகமான மற்றொரு துறை விளையாட்டுத்துறை. மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் கால்பந்து ரசிகர் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். கால்பந்தில் போர்ச்சுகலின் பலமும், இந்தியாவில் கால்பந்தின் வளர்ச்சியும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான பலமான புள்ளியாக அமையும்.
நண்பர்களே,
இந்தியாவும் போர்ச்சுகலும் பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளில் ஒரே விதமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. ஐநாவின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்குப் போர்ச்சுகல் கொடுத்த நிலையான ஆதரவுக்காகப் பிரதமர் கோஸ்டாவுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏவுகணைத் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டகத்தில் இந்தியா உறுப்பினர் ஆவதற்காகப் போர்ச்சுகல் அளித்த ஆதரவுக்கும், நியூக்ளியர் சப்ளையர்ஸ் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவருவதற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் பெருகிவரும் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் இருவரும் ஆராய்ந்தோம்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
இந்தியாவும் போர்ச்சுகலும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. உங்கள் தகப்பனார் ஒர்லாண்டா கோஸ்டா கோவா-போர்ச்சுகல் இலக்கியத்தில் ஆற்றிய பணி பெரிதும் பாராட்டத்தக்கது. இன்று இரண்டு நடனக்கலைகளைப் போற்றும்விதமாக அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளோம். இந்த இரண்டு கலைவடிவங்களில் ஒன்று போர்ச்சுகல் நாட்டுடையதும் மற்றொன்று இந்தியாவைச் சேர்ந்ததும் ஆகும்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
அடுத்துவரும் நாட்களில் உங்களுக்கு ஆக்கபூர்வமான பல நோக்கங்களும், பணிகளும் இந்தியாவில் இருப்பதை அறிகிறேன். பெங்களூருவில் தங்கியிருக்கும் தங்களுக்கும், தங்கள் பேராளர்களுக்கும் இந்தப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் உங்கள் மூதாதையரின் வம்சா வழியினருடன் தொடர்புகொள்ளும் வகையில் அமையும் உங்களின் கோவா பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
நன்றி.
***
(Release ID: 1529191)
Visitor Counter : 144