குடியரசுத் தலைவர் செயலகம்

“டாக்டர் அம்பேத்கர்: மாமனிதரின் சபதம்” நூல் வெளியீடு: குடியரசுத் தலைவர் முதல் பிரதி பெற்றுக்கொண்டார்

Posted On: 14 APR 2018 7:56PM by PIB Chennai

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி, டாக்டர் அம்பேத்கரைப் பற்றிய “டாக்டர் அம்பேத்கர்: மாமனிதரின் சபதம்” (Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp) நூல் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 2018, ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. அந்த நூலைக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வெளியிட்டார். முதல் பிரதியைக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.

மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கெலாட், நூலின் ஆசிரியர் திரு. கிஷோர் மக்வானா ஆகியோர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “டாக்டர் அம்பேத்கர் அமெரிக்காவின் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கைப் போல் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் தூண்டுகோலாக அமைந்தவர். அவர் காட்டிய மரபைப் பின்பற்றுவது இன்றைய நியாயமான தேவையாகும்” என்று புகழாரம் சூட்டினார்.

டாக்டர் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாள் விழா ஐ.நா. சபையில் 2016ம் ஆண்டு கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர் அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

“என்னிடம் இப்போது அளிக்கப்பட்ட நூல் மிகச் சிறிதாக இருக்கிறது. ஆனால், உத்வேகம் ஊட்டும் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பல்வேறு சிந்தனைகளின் பரிமாணங்கள், அவரது ஆளுமை ஆகியவற்றை அழகாக விவரிப்பதாக இது அமைந்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எப்படி ஓர் உந்துசக்தியாக இருந்தார் என்பது பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. டாக்டர் அம்பேத்கரைப் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் சிறந்த ஆதாரமாகத் திகழ்கிறது. இந்த நூல் உருவாக்கம் பெறுவதில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள சிந்தனைக் கருத்துகள் மேலும் மேலும் பல குடிமக்களைச் சென்றடையும். அவர்களுக்கும் அமைதி, நல்லிணக்கச் சூழ்நிலையில் இணைந்து செயல்படுவதற்கான உத்வேகம் அளிக்கும்” என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

 

***



(Release ID: 1529187) Visitor Counter : 328


Read this release in: English