குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குரூப் 1 வேலைக்கு தாய்மொழித் திறமையைக் கட்டாயமாக்க வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 13 APR 2018 5:11PM by PIB Chennai

குரூப் – 1 வரையிலான வேலைவாய்ப்புக்குத் தாய்மொழியில் திறமையை வளர்த்துக் கொள்வதை மாநில அரசுகள் கட்டாயமாக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தினார்.

விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேச உயர்நிலைப் பள்ளியில் கணிப்பொறி ஆய்வகத்தையும் உப்புநீரைச் சுத்திகரிக்கும் பிரிவையும் அவர் திறந்துவைத்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய நாயுடு, “நாட்டில் கலாசார மறுமலர்ச்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. கலாசாரம் என்பது வாழ்க்கை முறையாகும், மதம் என்பது வழிபாட்டு முறையாகும்என்று குறிப்பிட்டார்.

கல்வியில் ஒருங்கிணைந்த சீர்திருத்தத்தைக் கொண்டுவர வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், “மக்கள் நமது வேர்களையும், மரபையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், விழுமியங்களையும் தேடிச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“நமது குழந்தைகளுக்கு இயற்கையோடு எப்படி வாழ்வது என்று நாம் கற்றுத் தரவேண்டும். இயற்கையை, மரங்களை, விலங்குகளை, நதிகளை வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் நாம். எனவே, குழந்தைகள் மனத்தில் நெறிகள் சார்ந்த விழுமியங்களை ஊட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“இந்தியா ஒரு காலத்தில் உலகின் ஆசிரியன் (விஸ்வகுரு) என்று போற்றப்பட்டு வந்தது. உலகெங்கும் உள்ள மக்கள் நம் நாட்டுக்கு வந்து, நமது பண்டைய கல்வி நிறுவனங்களான நாளந்தா, தட்சசீலம் ஆகிய இடங்களுக்கு வந்து கல்வி பயின்றனர். இன்று உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்கிறது. நமது கல்வி முறை, உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் தன்னம்பிக்கையைப் பெறும் வகையிலான இளைஞர்களை உருவாக்க வேண்டும். அதிகாரமளிப்பதாகவும், அறிவூட்டுவதாகவும், அறிவை மேம்படுத்துவதாகவும் நமது கல்வி அமைந்திருக்க வேண்டும்” என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

பின்னர், எம்ஆர்சி காகத்திய கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், மக்கள் ஆடம்பரத் திருமணங்களைக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

திருமணம் என்பது புனிதமான நிகழ்வாகும். அங்கே நமது சொத்துகளைப் பறைசாற்றும் வகையில் காட்சிப் பொருட்களாக வைப்பதும் உணவை விரயம் செய்வதும் கூடவே கூடாது. இந்தியா போன்ற நாடு அத்தகைய செயல்களைத் தாங்காதுஎன்றார் அவர்.

பொதுமக்கள் தங்களைச் சுற்றிலும் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். அத்துடன் எல்லா இடங்களையும் தூய்மையாக வைத்திருப்பது என்பதை ஓர் இயக்கமாகவே கருதிக் கடைப்பிடிக்க வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் மட்டும் செய்து விட முடியாது. நகரத்தைத் தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருப்பதில் மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஈடுபாடும் மிகவும் அவசியமாகும்என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

 

******


(Release ID: 1529065) Visitor Counter : 150
Read this release in: English