தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

65வது தேசிய திரைப்பட விருதுகள் (2017) அறிவிப்பு மறைந்த நடிகர் திரு. வினோத் கன்னாவுக்குத் தாதா சாகேப் பால்கே விருது

மறைந்த ஸ்ரீதேவி சிறந்த ஹிந்திப் பட நடிகையாகத் தேர்வு
ஏ.ஆர். ரஹ்மானுக்குச் சிறந்த இசை அமைப்பாளர் விருது

Posted On: 13 APR 2018 1:42PM by PIB Chennai

2017ஆம் ஆண்டுக்கான 65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (13.04.2018) அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்கள், திரைப்படம் தொடர்பான சிறந்த நூல், திரைத்துறையில் சாதனை புரிந்தோரைக் கவுரவிக்கும் வகையிலான தாதா சாகேப் விருது ஆகிய பல்வேறு விருதுகளைத் தேர்வுக் குழுவினர் இன்று அறிவித்தனர்.

பொழுதுபோக்குத் திரைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்தியக் குழுவின் தலைவராக சர்வதேச மற்றும் ஹிந்தித் திரைப்பட இயக்குநர் திரு சேகர் கபூர் தலைவராக உள்ளார். பொழுதுபோக்கு அல்லாத திரைப்படத்தைத் தெரிவு செய்வதற்கான குழுவின் தலைவராக திரு. நகுல் காம்தே, திரைப்படம் குறித்த நூலைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுத் தலைவராக திரு. ஆனந்த் விஜய் ஆகியோர் இருந்தனர்.

தேசிய திரைப்பட விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் 2018, மே 3ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குகிறார். 65ஆவது திரைப்பட விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினர் அது தொடர்பான அறிக்கையை மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸுபின் இரானியிடம் 12.4.2018 அன்று அளித்தனர்.

இந்தியத் திரைப்பட உலகுக்குச் சிறந்த வகையில் பங்களிப்பு செலுத்தியதற்காக மறைந்த பிரபல நடிகர் திரு. வினோத் கன்னாவுக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மொழியில் தயாரித்து வெளியிடப்பட்ட “வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்” (Village Rockstars) திரைப்படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“பாகுபலி - நிறைவு” (Baahubali - The Conclusion) சிறந்த பிரபலமான படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதர விருதுகள் குறித்த விவரம்:

அறிமுகத் திரைப்பட இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – ஜஸாரி மொழிப் பட இயக்குநர் பம்பள்ளி (சிஞ்சார்).

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் திரைப்பட விருது : டப்பா (மராத்தி).

சிறந்த திரைப்பட இயக்குநர் விருது : இயக்குநர் ஜெயராஜ் (பயானகம்).

சிறந்த நடிகருக்கான விருது மறைந்த ஸ்ரீதேவிக்கு கிடைத்துள்ளது. “மாம்” (Mom) திரைப்படத்திற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. அதைப் போல் சிறந்த நடிகருக்கான விருது நகர்கீர்த்தன் படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு அளிக்கப்படுகிறது.

சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த படத்துக்கான விருது “ஆலோருக்கம்” மலையாளத் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது. இப்படத்தை வி.சி. அபிலாஷ் இயக்கியுள்ளார்.

பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களில் அறிமுகப் பட இயக்குநரான பியா ஷா தயாரித்த “வாட்டர் பேபி” (Water Baby) படத்துக்கு விருது அளிக்கப்படுகிறது.

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெறாத மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

ஜஸாரி மொழியில் வெளியான “சிஞ்சார், துளு மொழியில் தயாரான “படாவி” லடாகி மொழியில் வெளியிடப்பட்ட “வாக்கிங் வித் தி விண்ட் ஆகிய திரைப்படங்களுக்குச் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன..

சிறந்த திரைப்பட விமர்சனத்துக்கான விருது கிரிதர் ஜாவுக்கு அளிக்கப்படுகிறது. அவர் ஹிந்தித் திரைப்படம் குறித்து எழுதிய விரிவான நம்பகமான, விமர்சனத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அதைப் போல் திரைப்படம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதிய சுனில் மிஸ்ராவுக்கும் சிறப்பு விருது அளிக்கப்படுகிறது.

திரைப்படம் குறித்த சிறந்த புத்தகமாக “மத்மாகி மணிப்பூர் – முதல் மணிப்பூர் மொழித் திரைப்படம்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதை எழுதிய பாபி வாஹெங்பாமுக்கு விருது வழங்கப்படுகிறது.

 

சிறப்பு நடுவர் விருது “நாகர்கீர்த்தன்” திரைப்படத்தை இயக்கிய கவுசிக் கங்குலிக்கும் தயாரித்த சானி கோஷ் ரேவுக்கும் அளிக்கப்படும். பொழுதுபோக்கு அல்லாத வகையிலான சிறப்பு நடுவர் விருது “எ வெரி ஓல்ட் மேன் வித் எனார்மஸ் விங்க்ஸ் அண்ட் மண்டே” திரைப்படத்தை இயக்கிய பிரதீக் வத்ஸுக்கும அதைத் தயாரித்த திரைப்படப் பிரிவுக்கும் (Films Division) அளிக்கப்படும்.

குழந்தைப் படங்களுக்கான விருதினைப் பொறுத்தவரையில் மராத்தி மொழியில் தயாராகி வெளியான மோர்க்யா (Mhorkya) படத்துக்கு அளிக்கப்படுகிறது. இப்படத்தை அமர் பாரத் தேவ்கர் இயக்கியுள்ளார்.

“காற்று வெளியிடை…” திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


(Release ID: 1529022) Visitor Counter : 430
Read this release in: English