பிரதமர் அலுவலகம்
அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய வளாகத் திறப்புவிழா மற்றும் லக்னோவில் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
Posted On:
20 JUN 2017 10:16PM by PIB Chennai
எனது இளம் நண்பர்களே,
ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்துள்ளது. யோகி ஜியின் தலைமையிலான உத்தரப் பிரதேச புதிய அரசு மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுவரும் விதம் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமது கடின உழைப்பின் மூலம் பல்வேறு ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளையும், பல்வேறு ஆண்டுகளாக உள்ள தடைகளையும் நீக்கி, உத்தரப் பிரதேசத்தையும் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச்செல்வதற்கு அடி மேல் அடி எடுத்துவைக்கும் யோகி ஜியின் அரசு மீது மக்களுக்குப் பேராவல் உள்ளது. யோகி ஜி மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் வளர்ச்சிக்கான அவர்களின் முயற்சிகளுக்குத் எனது பாராட்டுகளைத் தெரவித்துக் கொள்கிறேன்.
மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறிது நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்தது. மனிதகுலத்திற்காக்க் குறைந்த விலையிலும் எந்தவிதமான பக்கவிளைவுகள் இன்றியும் விரைவாக நோய்களைக் குணப்படுத்தக்கூடிய இத்தகைய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக ஆய்வகங்களில் நமது விஞ்ஞானிகள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்கின்றனர். ஒரு வகையில் இந்த விஞ்ஞானிகள் நவீன முனிவர்களைப் போன்றவர்கள், அவர்கள் மனிதகுலம் தனது பிரச்சனைகளில் இருந்தும் உடல்வலியில் இருந்தும் விடுபட அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுடன்; நவீனமுறைகளின் உதவியுடன் பாரம்பரிய முறைகளை வலுப்படுத்தவும் பணியாற்றுகின்றனர்.
இன்றைய தினம், மனிதகுலத்திற்கு முன்பாக - குறிப்பாக சுகாதார அறிவியல் துறையில் - ஏராளமான சவால்கள் உள்ளன. இதற்குப் பல ஆண்டுகள் ஆவதுடன் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தங்களைத் தியாகம் செய்து கொள்கின்றனர் என்றபோதிலும், அதற்கு தீர்வு காண்பதற்கு முன்னதாகப் புதிது புதிதாக நோய்கள் தோன்றிவிடுகின்றன. ஒரு வகையில் இதுவும் ஒருவிதமான போட்டியாக உள்ளது. எனினும் அறிவியலின் உதவியுடனும் புதுமையாக்கத்தின் உதவியுடனும் நாம் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு, இந்த நோய்களைத் தோற்கடிப்பதுடன், ஏழைகளுக்கு ஏற்ற விலையில் சிறந்த மருந்துகளை அளிக்கும் சவால்களால் வெற்றி பெறவேண்டும்.
இன்றைய தினம் இந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தைப் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மக்களை ஊக்குவிக்க டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரை விட வேறு ஏற்ற பெயர் எதுவும் தொழில்நுட்ப உலகில் இல்லை என்றே நான் கருதுகிறேன். அறிவியல் என்பது உலகளாவியது என்ற போதிலும் தொழில்நுட்பம் என்பது உள்ளூர் சார்ந்ததாக இருக்க வேண்டும். இதுதான் நமக்கான சோதனை. அறிவியலில் தத்துவங்கள் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ளன. அறிவியல் அறிவாற்றல் உள்ளது என்றபோதிலும், ஏற்கெனவே உள்ள ஆதாரங்களின் உதவியுடன் தொழில்நுட்பம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்போது, நமது இளைய தலைமுறை சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தொழில்நுட்பத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சாமானிய மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் எண்ணூறு மில்லியன் இளைஞர்களைக் கொண்ட படை உள்ளது, இது 35க்கும் குறைவான வயது கொண்ட இளைஞர்களைக் கொண்ட நாடு மற்றும் ஞானமும் கொண்ட நாடு என்று உலகத்திடம் நான் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். திறன்கள், தொழில்நுட்பப் புதுமை மற்றும் அறிவியல் இருந்தால் இந்த உலகத்தையே வெல்லும் திறமை எனது நாட்டு இளைஞர்களிடம் உள்ளது. ஆனால், கடந்த நூற்றாண்டில் பெரும் பங்காற்றி இருக்கக் கூடிய, ஆனால் அடுத்த நூற்றாண்டுக்குப் பயன்படாத தொழில்நுட்பத்தைக் கொண்டு நம்மால் அதிக வளர்ச்சியை எட்ட முடியாது. எனினும் தொழில்நுட்பம் என்பது காலத்திற்கு ஏற்ற வகையிலும், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டதாகவும், இருக்க வேண்டும். இவற்றில் இந்திய இளைஞர்கள் திறன் கொண்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் உதவியுடன் நாம் தொழில்நுட்பத் துறையில் புதிய உயரங்களை எட்டவும் முடியும்.
இன்றைய தினம் நமது நாடு பாதுகாப்புத் துறையில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. விரைவில் நமது பாதுகாப்புக்காக நமது ராணுவத்திற்குத் தேவையான சிறு சிறு பொருட்களையும் நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பாதுகாப்புத் துறையில் நமது நாட்டைச் சுயசார்பு உடையதாக நம்மால் ஆக்க முடியாதா? நமது நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், புதிய கருவிகளை நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை? பாதுகாப்புத் துறையில் இந்தியாவைச் சுயச்சார்பு கொண்டதாக ஆக்கும் திசையில் நாம் முன்னேற்றம் அடைந்து வருவதுடன் இந்த நோக்கத்திற்காக நாம் பல்வேறு கொள்கை மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளோம். 100% அந்நிய நேரடி முதலீட்டுக்காகப் பாதுகாப்புத்துறையைத் நாம் திறந்து விட்டுள்ளோம். கூட்டு நிறுவனங்களைத் தொடங்குமாறு இந்திய வர்த்தகர்களை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்., வெளிநாடுகளில் இருந்து இந்திய அரசு இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலை நாம் தயாரித்து இருப்பதுடன், அந்தப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டால் அவற்றுக்குச் சிறப்பு ஊக்குவிப்பும் அளிப்போம். இந்த வாய்ப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்திருக்கும் இளைய தலைமுறைக்கு அளிக்கப்படும்.
இதே போல் இன்னொரு துறை உள்ளது. இன்றைய தினம் ஒரு வகையில் மருத்துவ அறிவியல் துறையும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் துறையாகும். இன்றைய தினம் உங்களைத் தாக்கியுள்ள நோய் என்னவென்பதை ஒரு மருத்துவர் உறுதிப்படுத்துவதில்லை. உங்கள் உடலைத் தாக்கியுள்ள நோய் என்னவென்பதை இயந்திரம்தான் கண்டுபிடிக்கிறது. என்ன பாதிப்பு, உங்கள் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு இயந்திரம் தான் கண்டறிகிறது. அந்த இயந்திரம் தயாரித்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் மருத்துவம் அளிப்பதற்கான முடிவை எடுத்து மருந்துகள் குறித்து முடிவு செய்வதுடன் அறுவை சிகிச்சை வேண்டுமா, வேண்டாமா என்பதை டாக்டர் முடிவு செய்கிறார். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் பெரிய அளவிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவற்றின் உற்பத்தித் தேவை இருப்பதால், தொழில்நுட்பத் துறையில் உள்ள மாணவர்கள் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து உள்நாட்டிலேயே அந்த உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான புதிய திசையில் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செல்வது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
தொழில்நுட்பம் சார்ந்த இந்திய இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளிக்கவே 'மேக் இன் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா', 'ஸ்டாண்ட் அப் இந்தியா', 'ஸ்கில் இந்தியா', 'முத்ரா' யோஜனா ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிதித் தேவை, தொழில்நுட்ப ஆதரவின் தேவை அல்லது மனிதவளங்களுக்குத் திறன் மேம்பாடு அளிக்க முன்னுரிமை அளிக்கும் தேவை போன்றவை இருக்கலாம், நாம் ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றி நமது நாட்டில் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல், நமது பல்கலைக்கழகங்களில் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல், இளைய தலைமுறையினரிடம் உள்ள தொழில்நுட்ப அறிவாற்றல் ஆகியவற்றைக் கொண்டு நமது நாடு புதிய உயரங்களை எட்டச் செய்ய வேண்டும். வாய்ப்புகள் கிடைத்தால் இந்திய இளைஞர்கள் சவால்களை எதிர்கொண்டு புதிய இலக்குகளை நிர்ணயிப்பார்கள் என்பதை இந்த நாடு நிரூபித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய வேண்டும் என உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் முயற்சி செய்தன. உலகில் உள்ள எந்த நாட்டாலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடைய முடியவில்லை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை முதல் முயற்சியிலேயே சென்றடைந்த உலகின் முதல் நாடு இந்தியாதான். இவ்வளவு குறைந்த செலவில் இந்திய இளம் விஞ்ஞானிகள் செய்த இந்தச் சாதனை குறித்து அறிந்தபோது இந்த உலகமே ஆச்சரியமடைந்தது. லக்னோவில் டாக்சி அல்லது ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்ய ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் செலவில் நாம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்துவிட்டோம். செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான நமது செலவு ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்க ஆகும் செலவை விட குறைவாகும். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்க ஆகும் செலவை விடக் குறைந்த செலவில் நமது விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்றுவிட்டனர். இத்தகைய சாதனைகள் செய்ய திறன் பெற்றவர்கள் நமது இளைஞர்கள், இதுதான் திறன் கொண்ட நமது இளைஞர்கள், நமது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையாகும். ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை நாம் விண்ணில் செலுத்தியபோது உலகமே ஆச்சர்யப்பட்டது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை ஏவிய நம் விஞ்ஞானிகளைப் பார்த்து அவர்கள் வியந்தனர்.
இந்த வலிமையுடன் நாம் முன்னேற வேண்டும். இதில் இந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கல்லூரிகள் எவ்வாறு முன்னேற முடியும்? உத்தரப் பிரதேசத்தில் கல்வித் துறையில் செயலாற்றுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். நமது ஆளுநர் திரு. ராம் நாயக் ஒரு வேந்தராக பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தைக் கொண்டுவரவும், உரிய காலத்தில் பணிகளைச் செய்துமுடிக்கவும் சிரமப்படுகிறார். மொத்தமுள்ள 28 பல்கலைக்கழகங்களுள் 24 பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை நடத்திப் பட்டமளிப்பு விழாக்களை அவர் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இதுதான் மிகவும் முக்கியமானது. ராம் நாயக் ஜி மிகுந்த கவனக்குவிப்புடன் செயல்படக்கூடியவர். ஒரு செயலைச் செய்ய அவர் ஒப்புக்கொண்டால் அதைச் செய்து முடிப்பார் என்பதாலேயே விதிகள், விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன் உத்தரப் பிரதேசப் பல்கலைக்கழக மாணவர்களின் நேரம் வீணாக்கப்படாமல் இருப்பதையும் அவர் உறுதி செய்கிறார். உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அவரது பணி சுலபமாகி அவர் தமது கடமைகளை நிறைவேற்றி வருகிறார்.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இன்று சில குடும்பங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் 2022ம் ஆண்டு இந்தியா தனது 75ம் ஆண்டு சுதந்திரதின விழாவைக் கொண்டாடுகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சில கனவுகளைக் கொண்டிருந்தனர். தங்கள் இளமையைச் சிறைகளில் கழித்தபோதும், உயிர்த்தியாகம் செய்த போதும் மகிழ்ச்சியான மற்றும் வளமான இந்தியாவைக் காண அவர்கள் விரும்பினார்கள். சுதந்திர இந்தியாவைப் பார்க்க அவர்கள் விரும்பினார்கள். இதற்காக அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்தனர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்கும் வகையில் நாடு புதிய உயரங்களை எட்டச் செய்வது நமது நாட்டின் 125 கோடி மக்களின் கடமை இல்லையா? 125 கோடி மக்களும் ஒன்றாகச் சேர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாதா? இந்த நாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டுசெல்லும் திறன் 125 கோடி மக்களுக்கும் உள்ளது என நான் நம்புகிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு, கழிவறை, குடிநீர், மின்சார இணைப்பு, குழந்தைகளுக்கு அருகிலேயே கல்வி அளிக்கும் வசதி ஆகியவற்றை நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளுக்குள் - அதாவது வரும் 2022ம் ஆண்டுக்குள் - அளிக்கும் கனவு நமக்கு உள்ளது. கிராமப்புறத்தில், நகர்ப்புறத்தில் வீட்டுவசதி அளிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என்பதுடன் இன்றைய தினம் வீடுகள் அளிப்பதற்கான சான்றிதழ்களை தாய்மார்களுக்கு அரசு வழங்கியுள்ளது. நான் வீடு கட்டுகிறேன் என்றும் எனது குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்து அந்தத் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என்றும் ஒரு தாய் என்னிடம் கூறினாள். அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். நமது கனவுகள் நிஜமாகும்போது, எந்த வயதிலும் பெரிய விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும். அந்தப் பெண்ணிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இதைத்தான் நான் உணர்ந்தேன். இது அவரது வார்த்தைகள் தான், எனினும் அவரது உணர்வுகள் ஊக்கமளிப்பதாக இருந்தன.
இன்றைய தினம் மின்சாரம் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாகும். தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கையில் மின்சாரத்திற்கு அதற்கான முக்கியத்துவம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதவியுடன், சூரிய மின்சக்தி மூலம் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் மாபெரும் திட்டம் உள்ளது. வீடுகளுக்கு எல்.இ.டி. விளக்குகளை அளித்து மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 22 கோடிக்கும் அதிகமான எல்.இ.டி. விளக்குகள் ஓராண்டுக்குள் நிறுவப்பட்டு அதன் காரணமாகக் கூடுதல் மின்சாரம் அளிக்கப்படுகிறது. எனினும் எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாடு காரணமாக மக்கள் சுமார் 12-13 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்துள்ளனர். இது சாமானிய மனிதனுக்கான சேமிப்பு. இன்று நான் 400 கிலோவாட் மின்விநியோகத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லக்னோ மற்றும் கான்பூர் இடையே உள்ள மொத்தப்பகுதிக்கும் தரமான மின்சார விநியோகத்தை மேம்படுத்த இது உதவும். ஒட்டுமொத்த உன்மாவ் பகுதியை உள்ளடக்கும் தொழிற்சாலைப் பகுதிகளுக்கு இது சேவை அளிக்கும், வீடுகளுக்கும் இது மின்சாரம் அளிக்கும். மின்சார விநியோகத்தைப் பொருத்தவரையில் உங்கள் மாநிலத்தில் வி.ஐ.பி. ஒதுக்கீடு இருந்ததாக நான் கேள்விப்பட்டேன். சில மாவட்டங்கள் வி.வி.ஐ.பி.களாகக் கருதப்பட்டு அவர்களுக்கான மின்சார விநியோகம் ஒரு மாதிரியாகவும் மற்ற மாநிலங்களுக்கு வேறு மாதிரியாகவும் இருந்தது என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் யோகி ஜி அனைத்து 75 மாவட்டங்களுக்கும் எந்தப் பாரபட்சமும் இன்றி மின்சாரம் அளிக்கப்படும் என உறுதி அளித்திருப்பதால் அவரைப் பாராட்டி அவருக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியாகச் சொல்வதனால் இது நிர்வாகத்தின் பணி. ஒரு பிரிவினர் அனுபவித்து வந்த சலுகைகளை முடிவுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். இதனை யோகி ஜி செய்ய முடியும் என நான் நம்புகிறேன். பலன்களை செயல்களை செய்து முடிப்பதில் அவர் உறுதி கொண்டவர்.
சகோதர, சகோதரிகளே, வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்ட நாடு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் புதிய உயரங்கள் எட்டப்பட வேண்டும். நாட்டின் மக்கள் தொகை 125 கோடி. இந்த 125 கோடி மக்களின் சக்திதான். பெரும் பொருளாதாரங்களில் வேகமாக வளர்ச்சி காணும் ஒரு நாடு உள்ளது என்றால் அது இந்தியா தான் என்பதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளச்செய்துள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவைப் பெருமிதத்துடன் நோக்குகிறது. 125 கோடி இந்தியர்களும் ஒன்றாக இணைந்து முடிவுசெய்தால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள நாம் அனைவரும் இணைந்து முடிவுசெய்தால், நீங்கள் விரும்பிய முடிவுகளை எட்ட முடியும்.
ஜூலை முதல் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்படும். இது இந்த நாட்டுக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயமாகும். அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வேறுபாடுகளை மறந்து, இந்த நாட்டின் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடலளவு மாற்றத்தை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட முடிவை ஜூலை 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்போகிறோம். இது அதனளவிலேயே ஒரு மாபெரும் சாதனையாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் முதிர்ச்சி ஆகியவற்றுக்கான சாதனையாகும். நாடு என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என ஒவ்வொரு கட்சியும் நிரூபித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து மாநில அரசுகள், அனைத்துச் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் / ,இதற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜி.எஸ்.டி.யை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். நாட்டு மக்களின் உதவியுடன் - குறிப்பாக சிறு வணிகர்களின் உதவியுடன் –நாம் ஜி.எஸ்.டி.யை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும், இத்தகைய ஒரு பெரிய நாடு தானாகவே எப்படி மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது என்றும் இந்த உலகமே வியக்கும் என்று நான் நம்புகிறேன். இந்திய ஜனநாயகத்தின் ஆற்றல் உலகத்தால் அங்கீகரிக்கப்படும், இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து இத்தனை பெரிய முடிவை எடுத்துள்ளது என்பது உலகத்தை வியக்க வைக்கப் போகிறது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் சக்தி, இந்திய ஜனநாயக இயல்பின் சக்தி. இந்திய ஜனநாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைமையில் ஏற்பட்ட முதிர்ச்சி காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. எனவே இந்தச் சாதனையின் வெற்றி என்பது மோடிக்கோ ஒரு அரசுக்கோ சொந்தமானதல்ல. இந்த வெற்றி 125 கோடி மக்கள், முதிர்ச்சி அடைந்த இந்திய ஜனநாயகத்திற்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நாட்டின் அனைத்து சட்டமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவைக்கும் சொந்தம்.
இத்தகைய ஒரு பிரம்மாண்டமான பணி நிறைவேற்றப்படும்போது, அதில் சிரமங்கள் ஏற்பட்டால் அவற்றைப் புரிந்துகொண்டு அரசு அவற்றைப் போக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சிரமங்களைப் போக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்ற போதிலும் நாட்டுமக்கள் அனைவரும், குறிப்பாக வர்த்தகர்கள் இதனை வெற்றிகரமான நிகழ்வாக மாற்றவும், மாற்றம் இலகுவாக நிகழும் வகையிலும் முயற்சிகளை எடுக்க வேண்டும். நாட்டின் இந்த மாற்றத்திற்கு வர்த்தகச் சமூகம் முன்நிற்கும் என நான் நம்புகிறேன்.
இந்த எதிர்பார்ப்புடன் நான் இந்த வளாகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வெற்றிக்கு எனது பிரார்த்தனைகள்.
நன்றி.
***
(Release ID: 1529004)
Visitor Counter : 111