பாதுகாப்பு அமைச்சகம்

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் மற்றும் ஆயுதத் தளவாட வாரியம் இணைந்து தயாரித்த அதி நவீன 155mm 52 Cal பீரங்கி

Posted On: 13 APR 2018 2:31PM by PIB Chennai

ஆயுதத் தளவாட வாரியம் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரித்த அதி நவீன பீரங்கி சென்னையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் குமார்  ஹோடா, ஆயுதத் தளவாட வாரியத்தின் தலைவர் மற்றும் ஆயுதத் தொழிற்சாலையின் தலைமை இயக்குநர் திரு எஸ்.கே. சவ்ராசியா ஆகியோர் இந்த அதிநவீன பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனத்துடன் சேர்ந்து ஆயுதத் தளவாட வாரியம் தனியாக வடிவமைத்துத் தயாரித்துள்ள தனித்துவமான இந்தப் பீரங்கி, “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு ஏற்ற ஒளிரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வழிகாட்டுதலுடன் கூடிய ஜிபிஎஸ் வசதி, கணினியுடன் கூடிய தரவு மேலாண்மை, இரவு, பகல் உள்ளிட்ட எல்லா நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய வசதி ஆகிய நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இந்தப் பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பீரங்கியை எடுத்துச்செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் BEML-TATRA 8X8 கனரக வாகனம், 10 கிலோவாட் / டன்-னுக்கும் அதிகமான  ஆற்றல் மற்றும் எடை விகிதாச்சாரத்துடன் கூடிய 300 கிலோவாட் (402 குதிரைச் சக்தி) என்ஜின் பொருத்தப்பட்டதாகும். அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த வாகனம், பாதையில்லாத கரடுமுரடனா இடங்களிலும் செல்லும் வகையில் ஒவ்வொரு சக்கரத்தையும் தனித்தனியே இயக்கும் தொழில்நுட்பம் கொண்டதாகும். இந்த வாகனம் சாலையில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும், கரடுமுரடான பாதைகளில் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்திலும் செல்லக்கூடியதாகும். அத்துடன் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் ஆயிரம் கிலோ மீட்டர்வரை எரிபொருள் நிரப்பாமல் இந்த வாகனம் செல்லும் திறனும் கொண்டதாகும்.


கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

----


(Release ID: 1528995)
Read this release in: English