சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பிரதமர் டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை நாளை புதுதில்லியில் திறந்துவைக்கிறார்

प्रविष्टि तिथि: 12 APR 2018 2:53PM by PIB Chennai

டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்திய தில்லி இலக்கம் 26, அலிப்போர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை (டிஏஎன்எம்) பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கைக்கும் பங்களிப்புக்கும் இந்த நினைவிடம் அர்ப்பணிக்கப்படுகிறது. பிரதமர் 2016-மார்ச் 21ஆம் தேதி இந்த நினைவிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

     பாரத் ரத்னா, பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மத்திய பிரதேசம் மோ என்ற இடத்தில் 1891-ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும் அவர் பணிபுரிந்தார். மத்திய அமைச்சரவையிலிருந்து 1951 நவம்பர் 1-ஆம் தேதி ராஜினாமா செய்த டாக்டர் அம்பேத்கர், தில்லி அலிப்போர் சாலையில் இலக்கம் 26-ல் அமைந்திருந்த சிரோஹி மகாராஜாவின் இல்லத்தில் வசிக்கத் தொடங்கினார். அந்த இல்லத்திலேயே 1956-டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். டாக்டர் அம்பேத்கர் நினைவாக டாக்டர் அம்பேத்கர் மஹா பரிநிர்வாண ஸ்தலம் அலிப்போர் சாலை இலக்கம் 26-ல் 2003 டிசம்பர் 2-ஆம் தேதி அப்போதைய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயினால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பாபாசாகேபின் தொண்டர்கள் அவர் மகாநிர்வாண நிலையடைந்த அலிப்போர் சாலை இலக்கம் 26-ஐ புனித இடமாகவே கருதுகின்றனர். எனவே, இந்தக் கட்டிடத்தைப் பாபாசாகேப் நினைவிடமாகக் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியாக செயல்பட்டதால், இந்தக் கட்டிடம் ஒரு புத்தகத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டது.

     இந்தக் கட்டிடத்தில் கண்காட்சிப் பகுதி, நினைவிடம், புத்தர் சிலையுடன் கூடிய தியான மண்டபம், டாக்டர் அம்பேத்கரின் 12 அடி உயர வெண்கலச் சிலை உள்ளிட்டவை அமைந்திருக்கும். இதன் நுழைவுப் பகுதியில் 11 மீட்டர் உயரமுள்ள அசோகத் தூணும், பின்பகுதியில் தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கட்டிடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (30 கேஎல்டி), மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கட்டமைப்புடன் இணைந்த மீட்டர் பொருத்தப்பட்ட  மேற்கூரை சூரியசக்தி அமைப்பு ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன. 7,374 சதுர மீட்டர் பரப்பில் 6,758 சதுர மீட்டர் பரப்புக் கட்டுமானத்துடன் நினைவிடக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

  • முக்கிய கட்டிடத்தின் பின்பகுதியில் புத்தர் சிலையுடன் கூடிய தியான மண்டபம்
  • இசைக்கேற்ற ஒளிச்சிதறல் கொண்ட நீரூற்று
  • கட்டிடத்தின் தோற்றத்தைப் பொலிவாக்கும் முகப்பு விளக்குகள்
  • புத்த சமயப் பாணியில் அமைக்கப்பட்ட விதானத்தின்கீழ், டாக்டர் அம்பேத்கரின் மார்பளவுச் சிலை
  • கட்டிடத்தின் வெளிப்பரப்பில் போதி மரம்

நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் நவீன இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றைப் புகைப்படங்கள், ஒளிப்படங்கள், காட்சிக் கேள்வி நிகழ்ச்சிகள், பல்லூடகத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

 

------


(रिलीज़ आईडी: 1528860) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी