பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் பயன்படுத்தப்பட்ட நிதி
Posted On:
05 APR 2018 5:20PM by PIB Chennai
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், நாட்டில் குறைந்து வரும் பாலின விகிதாச்சாரத்தை சரிப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகும். பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், இந்த மிகப்பெரிய இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் ஆதரவுடன் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டம் பிரபலமாகி உள்ளது. பயிற்சி, விழிப்புணர்வு, சமுதாய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் மக்களின் மனப்போக்கு பெரிதும் மாறியுள்ளதை உணர முடிகிறது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் யாருக்கும் ரொக்கப்பணமோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படுவதில்லை என்பதால், இதுநேரடி மானிய மாற்றத் திட்டத்தின் கீழ் வராது.
2016-17 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ. 32.69 கோடி அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி, மத்திய நிதியமைச்சகம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விதிமுறைகள் மற்றும் நிதிக் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி 2016-17 ஆம் ஆண்டு முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியை பெறுவதற்காக பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர்கள் தனி வங்கிக் கணக்கை தொடங்குவது அவசியமாகும்.
இந்த காரணத்தால் நிதிப் பயன்பாடு கணிசமாக குறைந்தது. இருப்பினும், தற்போது செலவு பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் காணொலிக் காட்சிகளை நடத்துவது, ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்வது, விளம்பரங்கள் செய்வது ஆகியவற்றின் மூலம் நிதி இலக்கை அடைய அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி. மேனகா சஞ்சய் காந்தி அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.pib.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
(Release ID: 1527981)