ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேயில் உணவு வசதி
Posted On:
04 APR 2018 5:54PM by PIB Chennai
ரயில்வேயில் உணவு வழங்கும் சேவையை மேம்படுத்துவது தொடர்ச்சியான நடைமுறையாகும். பயணிகளுக்குச் சுகாதாரமான தரமான உணவை வழங்குவதற்காக 2017, பிப்ரவரி 27 –ம் தேதி புதிய உணவு வழங்கும் கொள்கை வெளியிடப்பட்டது. அந்தக் கொள்கையின்படி இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ரயில்களில் உணவு தயாரிப்பு மற்றும் உணவு விநியோகம் ஆகிய பிரிவுகளில் தனிச்சிறப்புடன் கூடிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது. உணவு தயாரிப்பில் தரத்தை மேம்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி. பழைய சமையலறைகளை மேம்படுத்தியதுடன் புதிய சமையலறைகளை அமைத்துள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் வணிக ரீதியிலான கூட்டு சோதனைகளை நடத்த வேண்டும் என ரயில்வே மண்டலங்களுக்கு தெளிவான அறிவுறுத்தலும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்வே கோட்டம் மற்றும் மண்டலங்களின் உள்கட்டமைப்பு பராமரிப்பு துறைகள், உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவகங்கள் ஒவ்வொன்றையும் விரிவான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, காலமுறையுடன் கூடிய சோதனை மற்றும் திடீர் சோதனைகளை வழக்கமான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்களைக் கொண்ட கூட்டுக்குழு, மேற்கொண்டு வருகிறது. பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை, அரசு ரயில்வே காவல்துறையினர், ரயில்களில் அங்கீகாரமற்ற வியாபாரிகள், தங்கள் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே மண்டல பொது மேலாளர்கள் இந்த நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரயில்களில் சேகரிக்கப்படும் உணவு மாதிரிகள், தர பரிசோதனைக்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடங்களுக்கு உணவுப்பாதுகாப்பு அலுவலர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகள் 2011-ன் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன், தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே இணை அமைச்சர் திரு. ராஜன் கோகைன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in வலைதளத்தை அணுகவும்.
----
(Release ID: 1527855)