மத்திய அமைச்சரவை

உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் அதுதொடர்பான பிரிவுகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 APR 2018 7:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அது தொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கும்,  ஆப்கானிஸ்தானின் வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கீழ்க்கண்ட பிரிவுகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது:

அ. தகவல் பரிமாற்றம் மற்றும் தொடர்புக்கான வழிமுறையை உருவாக்குவது;

ஆ.  நலன்சார்ந்த தேர்வுசெய்யப்பட்ட பிரிவுகளில் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு வழிவகை செய்தல். குறிப்பாக, இறக்குமதி வழிமுறைகள், தரக் கட்டுப்பாட்டு செயல்பாடுகள், மாதிரி எடுத்தல், பரிசோதனை, பொதிகட்டுதல் மற்றும் லேபிள் ஒட்டுதல் பிரிவுகளில் தொழில்நுட்ப பரிமாற்றம்.

இ. கூட்டு கருத்தரங்குகள், பணிமனைகள், பயணங்கள், சொற்பொழிவுகள், பயிற்சித் திட்டம் போன்றவற்றுக்கு வழிவகை செய்தல்/ஏற்பாடு செய்தல்.

ஈ. ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது பொறுப்புகளுக்குள் நலன் சார்ந்த மற்ற விவகாரங்களை பரஸ்பரம் முடிவுசெய்துகொள்ளலாம்.

இந்த ஒத்துழைப்பு ஏற்பாட்டு நடவடிக்கை மூலம், உணவு பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக தகவல் பரிமாற்றப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் கற்றுக் கொள்வதற்கு வழி ஏற்படும்.

*****


 



(Release ID: 1527765) Visitor Counter : 150