குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வேளாண்மையை சாத்தியமான, லாபகரமான, நீடித்த தொழிலாக மாற்ற வேளாண் விஞ்ஞானிகள் முன்வரவேண்டும் : குடியரசுத் துணைத்தலைவர்
Posted On:
31 MAR 2018 3:57PM by PIB Chennai
அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைகளை நிறைவேற்ற, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, வேளாண்மையை சாத்தியமான, லாபகரமான, நீடித்த தொழிலாக மாற்ற வேளாண் விஞ்ஞானிகள் முன்வரவேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். ஹைதராபாதில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின், இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில், இன்று (31.03.2018), 2022-ஆம் ஆண்டுக்குள் ஆந்திரப்பிரதேஷ் மற்றும் தெலங்கானாவில் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து வேளாண் விஞ்ஞானிகளிடையே அவர் கலந்துரையாடினார்.
வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி, விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க எந்த அளவு பயன்படுகிறது என்பது குறித்து, விஞ்ஞானிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பிய குடியரசுத் துணைத் தலைவர், விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, உரிய தீர்வுகாண முன்வருமாறு கேட்டுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தால்தான் நாட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றார்.
“பிரச்சினைகளை நாம் அறிந்துள்ள நிலையில், அவற்றுக்கான தீர்வுகள் என்ன? புதிய சிந்தனைகள் என்ன? அவற்றை விவசாயிகளிடம் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் என்ன?” என்றும் அவர் வினவினார். தரமற்ற விதைகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, இடுபொருட்கள் செலவு அதிகரித்து வருவது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பயிர்களை வேறுபடுத்தி, வேளாண் சார்ந்த கோழி வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மின்னணு – தேசிய வேளாண் சந்தை முறையை விவசாயிகளிடையே பெருமளவில் பிரபலப்படுத்துமாறும் அவர் விஞ்ஞானிகளிடம் வலியுறுத்தினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்து வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், உணவுப்பாதுகாப்பில் இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்க, உற்பத்தியும், உற்பத்தித் திறனும், அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகளின் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக உருவாக வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.
-----
(Release ID: 1527403)
Visitor Counter : 82