மத்திய அமைச்சரவை

தேசிய மருத்துவ ஆணையச் சட்டமுன்வடிவில் சில அரசு முறை திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

Posted On: 28 MAR 2018 7:51PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மார்ச் 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் (National Medical Commission (NMC) Bill) சில அரசுமுறைத் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்டமுன்வடிவில் சில அம்சங்களைப் பரிசீலிக்கும்படி 2.1.2018ம் தேதி நடைபெற்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மீது சம்பந்தப்பட்ட துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (DRPSC) ஆய்வை அடுத்து, இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலைக்குழு தெரிவித்த பரிந்துரைகளையும் இந்த சட்டமுன்வடிவு குறித்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தெரிவித்த பின்னூட்டக் கருத்துகளையும் அரசு கவனமாகப் பரிசீலித்து, தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் 20.3.2018ம் தேதி தாக்கல் செய்தது.

 

விவரம்:

திருத்தங்கள்:

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டுத் தேர்வை நாடு முழுதும் பொதுத் தேர்வாக நடத்துவது. இது தேசிய இறுதித் தேர்வாக (National Exit Test - NEXT) அமையும்:

மருத்துவக் கல்வி முடித்த பின், மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கான உரிமம் பெறுவதற்கென்று தனியாகத் தேர்வு நடத்துவதைத் தவிர்க்கும்படி மாணவர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, மத்திய அமைச்சரவைக் குழு எம்பிபிஎஸ் இறுதித் தேர்வை நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்துவது என்ற முடிவை எடுத்தது. அத்தேர்வு தேசிய நிறைவுத் தேர்வு (National Exit Test) என நடத்தப்படும். இதையடுத்து,  எம்பிபிஎஸ் முடித்த பிறகு மாணவர்கள் மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கென்று தனியான தேர்வை எழுதத் தேவையில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்தவர்களும் இந்தியாவில் மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கான தனிச் சோதனையாகவும் (National Exit Test) இத்தேர்வு அமையும்.

ஆயுஷ் (பாரம்பரிய) மருத்துவர்கள் நவீன மருத்துவ சேவை புரிய இணைப்புக் கல்வி குறித்த சில நிபந்தனைகள் தளர்வு:

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா,  ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் பணிகளை மேற்கொள்வோர் இணைப்புக் கல்வி (bridge course) பெற்று, குறிப்பிட்ட அளவே நவீன மருத்துவ சேவையை மேற்கொள்லலாம் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்தவும், மேற்கொள்ளவும் அந்தந்த மாநிலங்களே உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதித்தல்:

தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் 40 சதவீதம் மருத்துவக் கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்ற அளவு உயர்த்தப்பட்டு, 50 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்படும். இந்தக் கட்டணம் அந்தக் கல்லூரி வசூலிக்கும் அனைத்துக் கட்டணத்தையும் உள்ளடக்கியிருக்கும்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் பிரதிநிதித்துவம் 3லிருந்து 6 ஆக அதிகரிப்பு:

மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சார்பிலான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஆறாக உயர்த்துவது என முடிவு செய்யப்படுகிறது. இதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் இடம்பெறுவர். அவர்களில் 21 பேர் மருத்துவர்கள் ஆவர்.

விதிகளை நிறைவேற்றாத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்:

விதிமுறைகளைப் பின்பற்றாத மருத்துவக் கல்லூரிகள் அவை ஓராண்டு வசூலிக்கும் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு முதல் 10 மடங்கு வரையில் அபராதமாகச் செலுத்தவும் வகை செய்யப்படும். அத்துடன், எச்சரிக்கை, பண அபராதம், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல், அட்மிஷனைத் தடுத்தல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் ஆகிய கடும்நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தகுதியில்லாத மருத்துவர்கள், போலி மருத்துவர்களுக்குக் கடு்ம தண்டனை:

தகுதியில்லாத மருத்துவர்கள், போலி மருத்துவர்கள் குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது. இது பொதுமக்களின் உடல்நலம் குறித்தது ஆகும். எனவே, இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், போலி மருத்துவர்கள், தகுதியில்லாத மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிப்பது உள்பட கடும் தண்டனை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 

 

***



(Release ID: 1526991) Visitor Counter : 202


Read this release in: English , Assamese