குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கிராமங்கள் வளர்ச்சி பெறாதவரை காந்திஜியின் ராமராஜ்ஜியம் முழுமையடையாது: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 22 MAR 2018 6:38PM by PIB Chennai

நமது மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில்தான் வசிக்கின்றனர் என்பதால் கிராமங்களின் வளர்ச்சிக்கு சிறப்புக் கவனம் கொடுப்பது மிகவும் முக்கியம். கிராமங்கள் வளர்ச்சியடையாமல் போனால் மகாத்மா காந்தியின் ராமராஜ்ஜியம் முழுமையடையாமல் போகும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறினார். பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற 106வது பீகார் தினக் கொண்டாட்டத் தொடக்க விழா மற்றும் சம்பரா சத்தியாகிரக நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் திரு. சத்ய பால் மாலிக், முதலமைச்சர் திரு. நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் திரு. சுசில் குமார் மோடி மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பீகாரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கென போற்றத்தக்க வரலாறு உள்ளது என குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். தனது இளமைக் காலத்தை நினைவுகூர்ந்த அவர், லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் கொள்கைகள் தம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். மகாத்மா காந்தியுடனான தொடர்பு காரணமாக சம்பரான் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார். காந்திஜி சுதந்திர போராட்டத்தில் அகிம்சையை ஒரு சக்திவாய்ந்த யுக்தியாக இந்த இடத்தில்தான் தொடங்கினார். பீகார் புனிதபூமியில் இருந்துதான் சத்தியாகிரகம் தொடங்கியது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பரானில் காந்திஜி மேற்கொண்ட சோதனை முயற்சி நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக குடியரசு துணைத் தலைவர் கூறினார். முதலாவதாக உண்மையைக் கண்டறிவது, இரண்டாவதாக சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி பொது நம்பிக்கையை உருவாக்குவது, மூன்றாவது, சுதந்திரம் பெறுவதற்கான தொடர் முயற்சி ஆகியவற்றைக் கொண்டது இந்தப் பரிசோதனை.

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு, தீண்டாமை, ஊழல், பெண்கள் நசுக்கப்படுவது, கறுப்புப் பணத்தின் மோசமான தாக்கம் சமுதாயத்தில் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன எனக் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். இவை தவிர நகர்ப்புறம் கிராமப்புறம் எனப் பாகுபாடு, சமூக பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பெண்கள் மதிக்கப்படும் வகையில் குழந்தைத் திருமணங்கள் என்ற பாவச்செயல், வரதட்சிணை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக வாதிட்டதுடன் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மகாத்மா காந்தி வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

 


(Release ID: 1526083) Visitor Counter : 194
Read this release in: English