பிரதமர் அலுவலகம்

சர்தார் பட்டேலின் 142-வது பிறந்த ஆண்டு விழா நாளில், நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியில், பிரதமரின் உரை

Posted On: 31 OCT 2017 10:33AM by PIB Chennai

இந்தியத் தாய்க்கு, வெற்றி உண்டாகட்டும்.

சர்தார் சாஹிப் நீடூழி வாழ்க.

     மாபெரும் பாரதத்தை நேசிக்கும் இளைஞர்கள் இங்கே பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள்.

     இன்று, அக்டோபர் 31-ஆம் தேதி.  சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள். அக்டோபர் 31-ஆம் தேதி, முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களின் மறைந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.  மாமனிதர் சர்தார் சாஹிப்பின் பிறந்த ஆண்டின்போது, நாட்டின் விடுதலைக்காக அவரது வாழ்க்கையில் மேற்கொண்ட முயற்சிகளையும், நடத்திய போராட்டங்களையும் நாம் நினைவுகூர்வோம்.

     சுதந்திரத்திற்குப் பின், சிதைந்து போகும் நிலையில் இருந்தபோது, இந்த மாமனிதர் தனது திறமை, போராட்டங்கள், பலம் மற்றும் தேசத்திற்கான உயர்ந்தபட்ச அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், அந்நாளில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியான தருணங்களில், நாட்டைப் பாதுகாத்துள்ளார். சுதந்திரம் அடைந்த காலத்தில், பிரச்சினைகளிலிருந்து நாடு விடுபடுவதற்கு அவர் வழகாட்டியது மட்டுமின்றி, பிரிட்டிஷார் வெளியேறியபின், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய சிறு சிறு சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் மிக முக்கியமான பங்களிப்பு செய்திருக்கிறார். இந்தியாவை சிறு சிறு ஆட்சிப் பகுதிகளாக பிரிப்பதன் மூலம், இந்தியா ஒரே நாடாக இருக்கக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் எண்ணங்கள் வெற்றிபெறாமல் செய்தவர் அவர்.  ராஜதந்திரத்தையும், உத்திகளையும் பயன்படுத்தி, நாட்டை ஒற்றைச் சரடில் ஒருங்கிணைத்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து புதிய தலைமுறை அறிந்து கொள்வதற்கு, எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.  வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அவரது பெயரை அழிப்பதற்கு அல்லது அவரின் பங்களிப்பை குறைத்துக் காட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.  ஆனால், ஓர் அரசியல் சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி அவருக்கு அங்கீகாரம் அளித்ததோ இல்லையோ, வரலாறு உண்மைக்கு சாட்சியமாக இருக்கிறது.  இளையதலைமுறை அவரை மறந்துவிட விரும்பவில்லை.  இதன் விளைவாக, சேவையாற்றும் வாய்ப்பு நம்முன் வந்துள்ளபோது, அந்த மாமனிதரின் பங்களிப்புகளை நாம் சிறப்பான முறைகளில் நினைவுகூர்கிறோம். ஒவ்வொரு தலைமுறைக்கும் அது தொடரும். எனவே, ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற இந்த இயக்கத்துடன் நாம் முன்வந்திருக்கிறோம். இளைய தலைமுறை பேரார்வத்துடன் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்றிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

     நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஒருமுறை கூறிய சில கருத்துக்கள் நம்மை சிந்திக்க நிர்பந்திக்கிறது. “நமது நாட்டின் பெயரை “இந்தியா“ என்று நாம் குறிப்பிடுகிறோம். இன்று “இந்தியா“ என்று அழைக்கும் நாட்டை நாம் பெற்றிருக்கிறோம். சர்தார் வல்லபாய் பட்டேலின் ராஜதந்திரம் மற்றும் மெச்சத்தகுந்த நிர்வாகப் பிடிப்பு ஆகியவற்றின் காரணமாக மட்டுமே இது சாத்தியமானது“ என்று அவர் கூறியிருந்தார். அவர் மேலும் கூறும்போது, “இதற்குப் பிறகும் சர்தார் சாஹிபை நாம் மறந்துவிட்டோம்“. சர்தார் சாஹிப்பின் பங்களிப்புகளை மறந்தது பற்றிய வலியை இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார். முழுவதும் பன்மைத்தன்மை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.  நமது நாட்டின் தனிச்சிறப்பான அம்சம், வேற்றுமையில் ஒற்றுமை என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறோம்.  இதுவே, நமது மந்திரமாகும். ஆனால், நமது நாட்டின் இந்த சிறப்புத் தன்மையை நாம் ஒப்புக்கொள்ளாதபோது, அதுகுறித்து பெருமிதம் கொள்ளாதபோது, இது ஒரு முழக்கமாக மட்டுமே எஞ்சியிருக்கும். நாட்டின் கட்டுமானத்திற்கு இதனை நாம் பயன்படுத்த இயலாமல் போய்விடும். உலகத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், ஒவ்வொரு பாரம்பரியத்தையும் ஏதாவது ஒரு வடிவத்தில் ஒவ்வொரு சித்தாந்தத்தையும் இந்தியா தழுவியிருக்கிறது என்பதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமித உணர்வு கொள்ளலாம். இந்த வேற்றுமைக்கும் அப்பால், நாட்டின் ஒற்றுமைக்காகவும், அதன் நலனுக்காகவும் ஒன்றுபட்டிருக்க நமது பாரம்பரியங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரே மாதிரியான பாரம்பரியத்திலிருந்து அல்லது கலாச்சார பின்னணியிலிருந்து வந்த மக்கள்கூட, இன்று ஒருவொருக்கொருவர் சகிப்புத் தன்மையில்லாமல் இருப்பதோடு, ஒருவர் மற்றொருவரைக் கொல்லவும் செய்கின்றனர். இந்த 21-ஆம் நூற்றாண்டில் மற்றவர்களுடையதைவிட, தங்களின் நம்பிக்கைகளை உயர்வான இடத்தில் வைப்பதற்காக சில பேர் உலகத்தில் வன்முறையை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், உலகின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மதிப்பளிப்பவர்கள் இந்தியர்கள், இந்திய நாடு என்பதை பெருமிதத்தோடு சொல்லமுடியும். இதுவே நமது பாரம்பரியமும், பலமுமாகும்.  ஒளிமயமான எதிர்காலத்திற்கு இதுவே நமது பாதையாகும்.  இதுவே நமது பொறுப்புணர்வாகும். சகோதர, சகோதரியின் அன்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.  சகோதரனும், சகோதரியும் ஒருவர் மற்றவருக்காக தியாகம் செய்வது, இயற்கையான மனநிலை.  இருப்பினும், இந்த புனிதமான அன்பை பாதுகாக்கும் பொருட்டு நாம் ரக்க்ஷா பந்தன் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சகோதரர் மற்றும் சகோதரியின் உறவை விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம். அதேபோல், நாட்டின் ஒற்றுமைக்கு அப்பால், தேசத்தின் கலாச்சாரப், பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதும் அவசியமாகும்.  ஒற்றுமை என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்வது அவசியம். நாட்டின் ஒற்றுமைக்காக மீண்டும் மீண்டும் உறுதியேற்பதை நினைவுபடுத்துவதும் அவசியம்.

     நமது நாடு மிகவும் விரிந்தது.  தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வும் தெரிவதில்லை. எனவே, ஏராளமான பன்முகத் தன்மையுள்ள ஒரு நாட்டில் ஒற்றுமையின் மந்திரத்தை எதிரொலிப்பதும், ஒற்றுமைக்கான பாதையை தேடுவதும் அவசியமாகும். சர்தார் சாஹிப் நமக்கு வழங்கிய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது 125 கோடி இந்தியர்களின் பொறுப்பாகும். எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு அவரின் பங்களிப்பை நினைத்துப் பார்த்து, சர்தார் பட்டேல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாட்டை அவர் ஒருங்கிணைத்த வழிமுறை குறித்து ஒவ்வொரு தலைமுறையும் அறிய வேண்டும். அக்டோபர் 31-ஆம் நாளான இன்று, சர்தார் சாஹிபின் பிறந்த ஆண்டினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்தார் சாஹிபின் 150-வது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாடுவோம். சர்தார் சாஹிபின் 150-வது பிறந்த ஆண்டு நிறைவுபெறும்போது, ஒற்றுமையின் புதிய உதாரணமாக எதை நாம் முன்வைக்கப் போகிறோம். மக்கள் மனதிற்குள் ஒற்றுமை உணர்வை எவ்வாறு நாம் வளர்க்கப் போகிறோம். இந்த எண்ணங்களோடு நாம் முன்னேறிச் செல்லவேண்டியுள்ளது.

     2022-ஆம் ஆண்டு, சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை குறிப்பதாக இருக்கும். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல்  போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள்  நாட்டிற்காக வாழ்ந்தார்கள், மடிந்தார்கள்.  சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் 2022-க்கான தீர்மானத்தை நமது இதயங்களில் ஏற்க வேண்டும், அதனை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற ஒவ்வொரு இந்தியனும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  அந்த தீர்மானம் நமது சமூகத்தின், நமது நாட்டின் நலனுக்கானதாகவும், நாட்டின் பெருமையை விரிவுபடுத்துவதற்காகவும் இருக்க வேண்டும். 2022-ஆம் ஆண்டுக்கான தீர்மானத்தை, மகத்தான சுதந்திரப் போராளி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று நாம் மேற்கொள்வது காலத்தின் தேவை என நான் நம்புகிறேன்.

     ஏராளமான எண்ணிக்கையில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த நிகழ்வில் ஆர்வத்தோடு பங்கேற்றிருக்கிறீர்கள். நாடுமுழுவதும் உள்ள இளைஞர்களும்கூட இதில் இணைந்திருக்கிறீர்கள். தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவில் கொண்டு, உங்கள் முன்னால் நிற்கும் நான் உறுதிமொழியை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் மனங்களுக்குள்ளே ஒரு தீர்மானத்தோடு எனக்குப் பிறகு நீங்கள் அதனை திரும்பக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  உங்களின் வலது கரத்தை முன்பக்கம் நீட்டி, எனக்குப் பிறகு நீங்கள் திரும்பச் சொல்ல வேண்டுகிறேன். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பராமரிக்க என்னை நானே அர்ப்பணித்துக் கொள்வேன் என்று, நான் உளமாற உறுதிகூறுகிறேன். எனது நாட்டு மக்களிடையே இந்த செய்தியைப் பரவச் செய்ய, நான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், பங்களிப்பாலும், சாத்தியமாக்கப்பட்ட எனது நாட்டில் ஒற்றுமை உணர்வோடு இந்த உறுதிமொழியை நான் ஏற்கிறேன். நமது நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, எனது பங்களிப்பை செலுத்துவேன் என்று நான் மெய்யாக உறுதியேற்கிறேன்.

இந்தியத் தாய்க்கு வெற்றி உண்டாகட்டும்.

இந்தியத் தாய்க்கு வெற்றி உண்டாகட்டும்.

இந்தியத் தாய்க்கு வெற்றி உண்டாகட்டும்.

மிக்க நன்றி.

------


(Release ID: 1525981) Visitor Counter : 376


Read this release in: English