குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்திய கலாச்சாரத்தின் வடிவமாக திகழ்ந்தவர் சர்தார் பட்டேல்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 19 MAR 2018 1:29PM by PIB Chennai

நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல், இந்திய கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழ்ந்தவர் என குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.  புதுதில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் பட்டேல் மாநாட்டு அரங்கை திறந்துவைத்து, அங்கு திரண்டிருந்தவர்களிடையே அவர் உரையாற்றினார். பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் தம்மை சந்திக்க வரும் வெளிநாட்டு தூதுக்குழுவினரையும் பல்வேறு பிரதிநிதிகளையும் குடியரசுத் துணைத் தலைவர் இனி இந்த அரங்கில் சந்திப்பார். கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும், இந்த அரங்கம் பயன்படுத்தப்படும்.

     சர்தார் பட்டேல்தான் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு தெரிவித்தார். அவர்தான் தமக்கு வழிகாட்டி என்று கூறிய திரு வெங்கையா நாயுடு, இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல்பணி போன்ற பணிநிலைகளை உருவாக்கியதிலும் முக்கியப் பங்கு வகித்தார் என்றார்.

     கலந்தாலோசனை, கலந்துரையாடல், கருத்துக்களின் சங்கமம் ஆகியவை ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இதனைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

     இந்த அரங்கத்தை 3 மாத காலத்திற்குள் கட்டி முடித்தமைக்காக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, மத்திய பொதுப்பணித்துறை, புதுதில்லி மாநகராட்சி மற்றும் ஷிர்கே குழுமத்திற்கும் குடியரசுத் துணைத் தலைவர் இந்த விழாவில் பாராட்டு தெரிவித்தார்



(Release ID: 1525142) Visitor Counter : 104


Read this release in: English , Hindi