குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திருமதி. டி.கே. பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டுத் துவக்கவிழாவில் மாண்புமிகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் உரை

Posted On: 17 MAR 2018 1:47PM by PIB Chennai

சகோதர, சகோதரிகளே,

இசைமேதை டி.கே. பட்டம்மாள் அவர்களின் நூற்றாண்டு துவக்கவிழாவில் உங்கள் அனைவரிடையேயும் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலக முழுவதிலுமுள்ள இசை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பதிந்து விட்டுச் சென்றிருக்கும் இந்த இசை மேதையை மிகுந்த பெருமையுடனும் பிரமிப்புடனும்தான் நாம் அனைவரும் நினைவு கூர்கிறோம்.

பெரும்புகழ்மிக்க எம்.எஸ். சுப்புலட்சுமி, தனித்துவம் மிக்க எம். எல். வசந்தகுமாரி ஆகிய இருவரோடும் இணைந்து கர்நாடக சங்கீதத்தின் மூன்று பெண் மும்மூர்த்திகளில் ஒருவராக உயர்ந்த, திறமைமிக்க கலைஞர் ஒருவரின் இசையை, வாழ்க்கையை நினைவு கூர்வதற்கு இது மிகவும் பொருத்தமான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.

மகத்தான கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் பட்டம்மாள் என்பதொன்றும் எதேச்சையான விஷயமல்ல. கடந்த பல நூற்றாண்டுகளாகவே இசை, நாட்டியம் ஆகிய வடிவங்களின் மிகச் சிறந்த பாரம்பரியங்களை ஆதரித்து, போற்றி, பரப்புகின்ற மக்கள் நிரம்பிய ஒரு பகுதியாக அது விளங்கி வந்துள்ளது.

இசைக் கலைஞர்களின் குடும்பத்திலே பிறந்த திருமதி. பட்டம்மாள் அனைத்துவகையான சமூக விதிவிலக்குகளுக்கு மத்தியிலும் தொழில்முறைக் கலைஞர் என்ற வகையில் தனக்கென தனிப்பாதை ஒன்றையும் வகுத்துக் கொண்டவரும் ஆவார். முறையான குருகுலப் பயிற்சி எதுவும் இல்லாமலேயே தானாகவே கற்றுத் தேர்ந்த இசைக் கலைஞராகவும் அவர் விளங்கினார். இசையைப் பொறுத்தவரையில் அவருக்கிருந்த சிறப்பான கேள்வி ஞானத்தின் விளைவாக சாஸ்த்ரீய சங்கீதத்தின் சிறப்பியல்புகள் அனைத்தையும் பெருமுயற்சி ஏதுமில்லாமலேயே உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அவருக்கு 13 வயதாக இருந்தபோதே மூன்று இசைத்தட்டுக்களைப் பதிவு செய்ய பட்டம்மாளின் தந்தை அவருக்கு ஊக்கமளித்திருந்தார். ‘தெலுங்கு வாத்தியார்என்று அவர் அழைத்து வந்த பெயர் தெரியாத ஆசிரியரிடம் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொண்டார். முழுமையானதொரு இசைக் கலைஞராக மாறும் வகையில் அவர் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார் என்பதை இங்கு சுட்டிக் காட்டுவதும் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

பத்து வயதாக இருக்கும் போது அகில இந்திய வானொலியில் துவங்கிய அவரது இசைப் பதிவு, சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் அவரது 13 வயதில் அளித்த முதல் பொதுக் கச்சேரி ஆகியவையே 17 வயது பட்டம்மாளை மியூசிக் அகாதெமி கச்சேரி செய்ய அழைப்பதற்கான முன்னோட்டங்களாக விளங்கின. அன்றிலிருந்து அடுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியேயின்றி தொடர்ந்து அவர் அங்கு கச்சேரி செய்து வந்தார் என்பதோடு, கடைசி பல ஆண்டுகளில் ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக வாங்கிக் கொள்ளாமல் நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இசைத் தட்டுகளை தயாரிப்பவர்கள், திரை இசைத் தயாரிப்பாளர்கள், இசை நிகழ்ச்சிகளை நடத்தும் சபாக்கள் ஆகிய அனைவருமே அவரது நிகழ்ச்சியை நடத்துவது தங்களுக்குக் கிடைத்த பெருமை என்று கருதும் வகையில் தேசிய அளவிலான ஒரு நட்சத்திரமாக பட்டம்மாள் அவர்கள் உயர்ந்தார்.

அவரது இந்த இசைப் பயணத்தை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த அரசாங்க வேலையை விட்டுவிட்டு வந்த அவரது கணவர் திரு. ஆர். ஈஸ்வரன் அவர்களின் துணையோடு பட்டம்மாள் இந்த நாட்டின் முதல் தொழில்முறை இசைக் கலைஞராக என்ற தகுதியைப் பெற்றார். முதல் பெண் இசைக் கலைஞர் என்ற தகுதி மட்டுமல்ல; இசையின் அனைத்து வெளிப்பாடுகளிலும் அப்போதிருந்த ஆண் இசைக் கலைஞர்களை விட மேலும் சிறந்த என்று சொல்லவில்லை என்றாலும் அவர்களுக்கு இணையான திறமை பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.

சகோதர, சகோதரிகளே,

மிகவும் அபூர்வமானதொரு இசை மேதை ஒருவரை நாம் இன்று போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மிகுந்த நுணுக்கத்தோடு விமர்சிக்கின்ற இசை விமர்சகர்களை திருப்திப் படுத்துவது மட்டுமின்றி சாதாரணமாக இசை கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் சூழலை உருவாக்கும் திறன் படைத்தவராக, இசை உலகிற்கு மிகச் சிறந்த பங்காற்றியதோர் இசை மேதையாகவும் அவர் இருந்தார்.

தனக்கென ஒரு பாணியைக் கொண்டவராகவும் பட்டம்மாள் அவர்கள் இருந்தார். நடுவில் சஞ்சாரம், குறைவான வேகம் போன்ற சரியான கலவையும் ஸ்திரத் தன்மையும் கொண்ட அரியக்குடி (ராமானுஜ அய்யங்கார்) அவர்களின் கச்சேரிக்கு மிக நெருக்கமானதாக  இருப்பதாகவும் தோன்றியது. மிகச் சிறந்த இசைக் கலைஞர்களிடம் இருப்பதில் இருந்து எடுத்துக் கொண்டு  தனக்கேயுரிய வித்தியாசமான ஒரு பாணியை அவர் உருவாக்கிக் கொண்டார். தன்னை விட மூத்தவர்கள், தன் முன்னோடிகள், இளையவர்கள் ஆகிய அனைவருமே ஏற்றுக் கொண்ட கடந்த நூற்றாண்டின் மிகச் சில இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.

எனவே அவர் சேடஸ்ரீ பாலகிருஷ்ணம் என்ற கீர்த்தனையை பாடியதைக் கேட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் மிகவும் கவரப்ப்பட்டு, தனக்காக அதை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொண்டார் என்பதை அறியும்போது நம்மிடையே எந்தவித வியப்பும் எழுவதில்லை. அரசியல்வாதிகள், இலக்கிய ஜாம்பவான்கள், இசையின் பல்வேறு வடிவங்களை பின்பற்றி வந்த இசைக்கலைஞர்கள் என 1930களில் இருந்து துவங்கி இன்று வரையில் அவரை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி வந்திருக்கின்றனர்.

சகோதர, சகோதரிகளே,

பல்வேறு மரியாதைகளையும் விருதுகளையும் பெற்றுச் சிறப்புற்றிருந்த மாபெரும் இசை ஆளுமையைத் தான் நாம் இன்று நினைவு கூர்கிறோம். 1962ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் தேசிய விருது, மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது, 1971இல் பத்ம பூஷண் விருது, சங்கீத நாடக அகாதெமியின் சிறப்பு விருது, பின்னர் பத்ம விபூஷண் என பல்வேறு வகையான விருதுகளும் அவருக்குச் சூட்டப்பட்டன. அந்த மகத்தான இசை மேதையின் தனிச்சிறப்புமிக்க திறமைக்கு தலைவணங்கும் விதமாகவே இவை அனைத்தும் இருந்தன.

சகோதர, சகோதரிகளே,

திறமைவாய்ந்ததொரு இசைக் கலைஞரின் தனிச்சிறப்பான சாதனைகளைத்தான் நாம் இப்போது நினைவு கூர்கிறோம்அவர்  வெற்றிகரமான ஆசிரியராகவும் இருந்து வந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தன்னந்தனியாக கர்நாடக இசைக் கச்சேரி நடத்துமளவிற்கு சீன மாணவி ஒருவருக்கு இசைப் பயிற்சி அளித்த ஒரே இசைக் கலைஞராக அவர் ஒருவர்தான் இருந்திருக்கலாம். பட்டம்மாளைப் பொறுத்தவரையில் இசை என்பது தெய்வீகமான, பாலினம், வயது, ஜாதி, மொழி, நாடு ஆகிய எல்லைகள் அனைத்தையும் கடந்த ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

அவரது இந்த வெற்றிக்குப் பின்னால் குழந்தையைப் போன்ற அவரது எளிமை இருந்திருக்கிறது. எப்போதுமே கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவியாக அவர் தொடர்ந்து இருந்து வந்த அதே நேரத்தில் வழக்கமான இந்திய மனைவியாக, கணவரின் தேவைகளை கவனித்துக் கொண்டு, குழந்தைகளை, பேரக் குழந்தைகளை, அவர்களின் குழந்தைகளையும் போற்றி வளர்த்தவராகவும் இருந்தார். அவரது மாணவர்களும் விரிவான அந்தக் குடும்பத்தின் அங்கமாக இருந்தனர். அவர்கள்தான் இன்று இந்த நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சகோதர,சகோதரிகளே,

இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த, தான் மிகவும் நேசித்த மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருந்த தனித்திறமை மிக்க பெண்ணுக்கு உதாரணமாகவே திருமதி பட்டம்மாள் இருந்து வந்தார்.

இசைத் துறைக்கு பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு ஒருவர் பதிலளிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் கீழேயுள்ள மூன்று பதில்களை அவரால் அளிக்க முடியும்:

முதலாவதாக, வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் மிக வேகமாக மாறிக் கொண்டிருந்த ஒரு காலத்தில் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதில் அவர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவே இல்லை.

இரண்டாவதாக, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காது தான் ஈடுபட்டுவந்த கலைக்கு மிகுந்த விசுவாசமாக இருந்து வந்தார்.

மூன்றாவதாக, தனது கச்சேரிகளில் மிகவும் தேர்ந்தெடுத்த வகையில் இசையை வழங்குவதில் அவர் கவனம் செலுத்தினார்.

அவர் தான் பாட எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கீர்த்தனையின் கட்டமைப்பை நன்கு கவனித்து, அதன் விஸ்தாரத்திற்கான வாய்ப்புகளை கவனித்து அதன் மிகவும் சீரமைக்கப்பட்ட வடிவத்தை தனக்கேயுரிய பாணியில் வடிவமைத்துக் கொண்டார். எனவேதான் அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே இப்போதும் ஓர் அளவீடாக, அனைவருக்கும் வழிகாட்டுவதாக விளங்குகின்றன.

அன்பான சகோதர, சகோதரிகளே,

உலக அரங்கில் நமது நாட்டின் தகுதி உயர்ந்து கொண்டே போவதை நாம் பார்த்து வரும் இத்தருணத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின்போது அவரது தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதரின் முழு ஆதரவோடு, ஆயிரக் கணக்கானவர்களுக்கு முன்பாக தேசபக்தப் பாடல்கள் பலவற்றையும் பாடி மகிழ்வித்த இளம் பட்டம்மாளை நாம் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். “வெற்றி எட்டுத் திக்கும்…” “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேபோன்ற பாடல்கள் உள்ளிட்ட சுப்ரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடல்களும் இவற்றில் அடங்கும்.

இன்னும் சொல்லப்போனால், நாடு விடுதலைபெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவை எட்டும் தருணத்தில் அகில இந்திய வானொலியில் பாரதியாரின்ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேஎன்ற பாடலை பாடியது தன் வாழ்க்கையில் மிகவும் நினைவுகூரத்தக்க மகத்தான தருணம் என்று அவர் கருதி வந்துள்ளார்.

 “தியாகபூமியிலிருந்து தொடங்கிஹே ராம்வரையில் 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனதைக் கரைக்கும் சுப்ரமணிய பாரதியாரின்தூண்டிற் புழுவினைப் போல்” “பாரத சமுதாயம் வாழ்கவே!” போன்ற பாடல்களின் மூலம் டி.கே. பட்டம்மாளின் தேசப்பற்றை நம்மால் உணர முடியும். எட்டயபுரத்தில் பாரதி நினைவு மண்டபத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் பாடியவர் என்ற அரிதான பெருமையும் அவருக்கு உண்டு. தமிழில் தெய்வீகப் பாடல்களையும் இந்தியில் பஜன்களையும் அதே போன்ற செறிவுடன் பாடும் வல்லமை படைத்தவராகவும் அவர் இருந்தார்.

சகோதர, சகோதரிகளே,

இந்த மாபெரும் இசைக் கலைஞரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நாம் இன்று துவக்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இசை, நாட்டியம் உள்ளிட்ட நுண்கலைகளின் நீண்ட பாரம்பரியம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. வெறும் பணம் என்பதற்கு அப்பாலும் வாழ்க்கையில் ஏராளமாக உள்ளது என்று நாம் எப்போதுமே நம்பி வந்திருக்கிறோம். தான் இயற்றிய கீர்த்தனைகள் ஒன்றில் தியாகராஜ சுவாமிகள் இந்த உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்:

நிதி சால சுகமா ராமுனி சன்னிதி சால சுகமா நிஸமுக தெல்பு மனசா

வெறும் உணவை மட்டுமே வைத்துக் கொண்டு மனிதர் வாழ்வதில்லை. நமது மனங்களையும் இதயங்களையும் தொடர்ந்து நாம் செழுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. அறிவு, இசை, நடனம், ஓவியம், சிற்பம், கைவினைக் கலைகள் ஆகிய அனைத்துமே இத்தகைய செழுமையை வழங்குகின்றன. இந்த நுண்ணிய அம்சங்கள் நம்மிடம் இல்லையெனில், நமது வாழ்க்கை என்பது முழுமை பெற்றதாக இருக்காது. இவற்றில் இசை என்பது எல்லைகள் பலவற்றையும் கடந்ததாக விளங்குகிறது. “சிஷுர் வேதி, பசுர் வேதி வேதி கானா ரசம் பானிஹிஎன்பதே நமது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதாவது ஒரு குழந்தையும் விலங்கும் கூட இசைக்கு மயங்குவதாக இருக்கின்றன. அதைப் போலவேதான் சர்ப்பமும்.

இசை என்பது காலவரம்பற்ற ஒன்று. அது நமது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது. சிறந்த இசை என்பது நமது ஆத்மாவில், உள்ளுணர்வில் எப்போதும் பதிந்த ஒன்றாக விளங்குகிறது.

இந்தியாவின் சாஸ்த்ரீய இசை என்பது மிகப்பெரும் பொக்கிஷம். நாம் அனைவருமே இந்த செறிவான பாரம்பரியத்தை பெற்ற வாரிசுகளாக இருக்கிறோம். டி. கே. பட்டம்மாளைப் போன்ற மகத்தான இசைக் கலைஞர்களால் அது தொடர்ந்து செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் மேலும் மோதல்கள் அதிகரித்துக் கொண்டே போவதாக நாம் வசித்து வரும் இந்த உலகம் மாறி வரும் சூழ்நிலையில், இசைதான் நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற இதமளிக்கின்றது. கலக்கமான உணர்வுகள் நிரம்பிய உலகத்தில் அதனால் மட்டுமே இனிமையானதொரு சமநிலையை கொண்டு வர முடியும்.

இந்தியாவின் பாரம்பரியமான சாஸ்த்ரீய சங்கீதம், குறிப்பாக கர்நாடக சங்கீதம் என்பது உயரிய எண்ணங்களைக் கொண்டு பின்னப்பட்டதாக, உணர்வுகளைக் கொண்டு மூழ்கடிப்பதாக, மிகவும் தனித்தன்மையான ஒழுங்கு, மகிழ்ச்சியான அனுபவம் ஆகியவற்றோடு இணைக்கும் இனிமையான சங்கதிகளைக் கொண்டதாக விளங்குகிறது.

இந்தக் கலவையை நாம் போற்றிப் பாராட்ட வேண்டியது அவசியம்.

இந்தக் கலாச்சாரப் பாரம்பரியம், வாழ்க்கையைப் பற்றிய புனிதமான ஒன்றுபட்ட கண்ணோட்டம் ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை ஆகும்.

அன்பான சகோதர, சகோதரிகளே,

இந்த ஒளிமிக்க பாரம்பரியத்தை, இந்த பாரம்பரியத்தின் மிகவும் தனிச்சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒருவராகத் திகழும் டி. கே. பட்டம்மாள் அவர்கள் மீண்டும் நினைவு கூர்வதற்கான ஒரு தருணமாக இது விளங்குகிறது என்பதே எனது கருத்தாகும்.

அவரது இசையை போற்றிப் பாராட்டுவதன் மூலம். இந்த செறிவான பாரம்பரியத்தினை வாரிசாகக் கொண்ட நம் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்யும் இசை இழை, வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றை போற்றிப் புகழ்கிறோம்.

இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்தி வரும் அனைவரையும் நான் மீண்டும் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த உயரிய முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன். இந்த மகத்தான இசைக்கலைஞரின் இனிமையான இசை மேலும் அதிகமான அமைதி, இணக்கம், புரிதம், நல்லெண்ணம் ஆகியவற்றை உலகமெங்கும் பரவச் செய்யட்டும்.

ஜெய் ஹிந்த்!


(Release ID: 1524981) Visitor Counter : 680


Read this release in: English