பிரதமர் அலுவலகம்

மணிப்பூரில் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்

Posted On: 16 MAR 2018 5:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.3.2018) மணிப்பூரில் ரூ.750 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம், 1000 அங்கன்வாடி மையங்கள் மற்றும் இதர  முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.   லுவாங்போக்பா பல்விளையாட்டு வளாகம், ராணி காய்டின்லீயூ பூங்கா, மற்றும் இதர முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். லுவாங்சங்பாம்-ல் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் உரையாற்றினார்.

   கடந்த ஓராண்டுக்காலமாக மணிப்பூர் மாநில அரசு மேற்கொண்டுள்ள பணிக்காக பிரதமர் தமது உரையில் பாராட்டுத் தெரிவித்தார்.

  இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள் இளைஞர்களின்  திறன், உள்ளக்கிடக்கைகள், அவர்கள் வேலை வாய்ப்பு, மகளிர் அதிகாரமளித்தல், இணைப்பு ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பானது. தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம், வடகிழக்கு பகுதியின் இளைஞர்களின் திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்தை அதிகபட்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மணிப்பூர் இஞைர்களை அவர் கேட்டுக் கொண்டார். சமீபத்தில் நிறைவடைந்த கேலோ இந்தியா விளையாட்டுக்களில் சிறப்பாக செயல்பட்டமைக்காக மணிப்பூருக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.  பல்விளையாட்டு வளாகம், பயிற்சிக்கும் போட்டிகள் நடத்துவதற்கும் சிறந்த வாய்ப்பளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

    விளையாட்டுக்கள் எவ்வாறு மகளிர் அதிகாரம் அளித்தலுக்கு  பயன்படும் என்பதை மணிப்பூர் எடுத்துக்காட்டியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தின்  மீராபாய் சானு, சரிதாதேவி உள்ளிட்ட புகழ் பெற்ற விளையாட்டு வீர்ர் வீராங்கனைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். மணிப்பூர் மாநில அரசு மகளிர் அதிகாரமளித்தலுக்கு  மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று அடிக்கல் நாட்டப்பட்ட  1000 அங்கன்வாடி மையங்களையும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து இயக்கம் குறித்தும் பிரதமர் பேசினார்.

     வடகிழக்குப் பகுதிக்கான மத்திய அரசின் நெடுநோக்கு  போக்குவரத்து மூலம் மாற்றம் என்பதாகும் என்று பிரதமர் கூறினார்.   வடகிழக்குப் பகுதி இந்தியாவின் வளர்ச்சியில் புதிய எஞ்சினாக செயல்பட முடியும் என்று பிரதமர் கூறினார்.  நாட்டின் இதர பகுதிகளுக்கு இணையான வளர்ச்சியடைவதற்கான வடகிழக்கு பகுதியின் சிறப்புத் தேவைகளை அரசு நிறைவு செய்து வருவதாக அவர் கூறினார்.  கடந்த நான்கு ஆண்டுகளில் தாம் வடகிழக்குப் பகுதிக்கு 25 முறைக்கும் கூடுதலாக  வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  வடகிழக்கு மண்டலத்தின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு பெரிய அளவில் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மண்டலத்தில் சாலை, ரயில் இணைப்புகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார்.

   அமைப்பு ரீதியிலான கலந்துரையாடல்,  பொதுமக்கள் குறைதீர்ப்பு உள்ளிட்டவற்றில், குடிமக்களை மையமாகக் கொண்டு, மாநில அரசு எடுத்து வரும்  திட்டங்கள் குறித்து பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

    1944 ஏப்ரலில் மணிப்பூரில் நேதஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் சுதந்திரத்திற்காக முதல் குரல் எழுப்பியது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.  இன்று மணிப்பூர் புதிய இந்தியா உதயமாவதில் முக்கிய பங் காற்ற முடிவு செய்திருக்கிறது என்று அவர் கூறினார்.

---------



(Release ID: 1524903) Visitor Counter : 123


Read this release in: English , Assamese