சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பயனளிக்கும் லக்ஷயா திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2018 5:36PM by PIB Chennai

18 மாதங்களில் தெளிவான விளைவுகளை அடைய இலக்கு


     பிரசவ அறை மற்றும் மகப்பேறு அறுவைச் சிகிச்சை அரங்கின் (OT) தரத்தை மேம்படுத்துவதற்கான  லக்ஷயா திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. பிரசவ அறை, மகப்பேறு அறுவைச் சிகிச்சை அரங்கு மற்றும் மகப்பேறியல் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICUs) மற்றும் உயர் சார்பு அலகு (HDUs)களில் கர்ப்பிணி பெண்களை கவனித்துக்கொள்ளும் தரத்தை மேம்படுத்த, இத்திட்டம் வழிவகுக்கும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், முதல் குறிப்பு அலகு (FRU), மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் (CHCs) நடைமுறைப்படுத்தப்படும் லக்ஷயா திட்டம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு பயனளிக்கும்.

  லக்ஷயா திட்டம், பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் பிரசவ கால உயிரிழப்புகளை குறைக்கவும், பிரசவத்தின்போதும், பேறு காலத்திற்கு பிந்தைய காலத்திலும் சிறப்பான கவனிப்புக்கும், அரசு சுகாதார மையங்களுக்கு வரும் அனைத்து கர்ப்பிணிகளின் மனத் திருப்தி மற்றும் கௌரவமான பேறுகால கவனிப்புக்கும் வழிவகுக்கும். 

  18 மாதங்களில் தெளிவான விளைவுகளை எட்டுவதற்கான இலக்குடன் விரைவான நடவடிக்கைகள் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

   2001-03 வரை 301 பேறுகால உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், 2011- 13 இடையிலான பத்தாண்டு காலத்தில்  இது 45 சதவீதம் குறைந்து, 167 உயிரிழப்பாக குறைந்ததன் மூலம் பேறுகால உயிரிழப்புகளை தவிர்ப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும், பாதுகாப்பான தாய்மையை அடைய, இந்தியா உறுதிபூண்டுள்ளது.

==========


(வெளியீட்டு அடையாள எண்: 1524762) வருகையாளர் எண்ணிக்கை : 343
இந்த வெளியீட்டை படிக்க: English