நீர்வளத் துறை அமைச்சகம்
நதி நீர் பகிர்வு
प्रविष्टि तिथि:
15 MAR 2018 3:45PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய தென்மாநிலங்களின் நீர் ஆதாரங்கள் குறித்த மண்டலக் கருத்தரங்கு மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை (WR, RD & GR) இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெஹ்வால் தலைமையில் 20.2.2018 அன்று ஹைதராபாதில் நடைபெற்றது. தெலங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் அமைச்சர்களும், அதிகாரிகளும் இவர்களோடு கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் அதிகாரிகளும் WR, RD & GR, அமைச்சகம், CWC மத்திய நிலத்தடி நீர் வாரியம் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீராதாரங்கள் மற்றும் இதர விஷயங்களில் மாநிலங்களுக்கு இடையேயான தன்மை ஆகியவற்றை எடுத்துரைத்தன. இவை மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
கோதாவரி (அகினேபள்ளி)-காவிரி (கல்லணை) இணைப்புத் திட்டத்தின் மூலம் கோதாவரி ஆற்றின் உபரிநீரை காவிரி ஆற்றுக்கு திருப்பி விடும் மகாநதி-கோதாவரி இணைப்புத்திட்டத்தின் மீதான மாற்று ஆய்வுகள் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தெலங்கானாவில் உள்ள அகினேபள்ளியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆலோசனையும் இதில் இடம்பெற்றிருந்தது. கோதாவரி உபரிநீரை கிருஷ்ணா வழியாக தற்போதுள்ள நாகார்ஜூன சாகர் நீர்த்தேக்கத்திற்கு மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அகினேபள்ளி கல்லணை 3 கட்டங்களில் 132 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட வேண்டியுள்ளது. அகினேபள்ளிக்கும் நாகார்ஜூன சாகருக்கும் இடையே உள்ள இணைப்புத்தூரம் 341 கி.மீ ஆகும். நாகார்ஜூன சாகரிலிருந்து வெண்ணாறு வழியாக சோமசீலா ஏரி வரை உத்தேசிக்கப்பட்டுள்ள தொடர்புக் கால்வாயின் தூரம் 393 கி.மீ ஆகும். சோமசீலாவிலிருந்து பாலாறு மற்றும் காவிரிக்கான கால்வாயின் தூரம் 529 கி.மீ.
மகா நதி – கோதாவரி – கிருஷ்ணா – வெண்ணாறு – காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்திட்டம் ‘ஒன்பது இணைப்பு முறை’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தென் மாநிலங்களுக்கு பயனுடையதாகும். தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) இந்த இணைப்பு முன்மொழிவுகளுக்கு 2004 / 2005-ஆம் ஆண்டில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டது. மகாநதி – கோதாவரி இந்த முறையின் தாய் இணைப்பாக விளங்குகிறது. மகாநதி-கோதாவரி இணைப்பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒருமித்த கருத்து அவசியமாகும்.
பாசனப் பகுதி வாரியாக கூட்டங்கள் நடத்துவதன் மூலம் பாசன மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாசனப் பகுதி வாரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கப்படும் என இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் உட்பட நிலுவையில் உள்ள நீர் ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நாட்டின் மற்ற பகுதிகளிலும் மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்வதென்றும் இதில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகளை முறைப்படுத்துவதற்கு 1956ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவாக்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவாக்கள் திருத்த மசோதா 2017 மக்களவையில் 14.3.2017 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. நதி நீர் பிரச்சினை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நடுவர் மன்றம் அமைப்பது அதிக காலம் பிடிக்கும் நடைமுறையாகும். இதனை தவிர்க்கும் வகையில் நிரந்தர நடுவர் மன்றத்தை அமைப்பதற்கும் நிரந்தர அலுவலகத்தையும் மற்ற அடிப்படை கட்டமைப்புகளையும் செய்வதற்கும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் உள்ள உத்தேச திருத்தங்கள் நதிநீர்ப் பிரச்சினைகள் பற்றி அதனிடம் முறையிட்டபின் தீர்ப்பு வருவதை விரைவுபடுத்தும். இந்த மசோதா நீர் ஆதாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு இந்த மசோதா மீதான பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. 11.8.2017 தேதியிட்ட மக்களவை செயலகக் கடிதத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மாநிலங்களுக்கு இடையோன நதிநீர் தாவாக்கள் திருத்த மசோதா 2017-ன் மீது நீர் ஆதாரங்கள் தொடர்பான நிலைக்குழுவின் 19ஆவது அறிக்கை’ என்ற வடிவத்தில் அது உள்ளது. இதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவாக்கள் சட்டம் 1956-க்கு திருத்தங்கள் செய்ய அமைச்சரவைக்கான வரைவு குறிப்பை அமைச்சரவை தயார் செய்துள்ளது.
மக்களவையில் இன்று (15.3.2018) ஒரு கேள்விக்கு பதில் அளித்த நீர் வளம், நீர் மேம்பாடு, கங்கை புனரமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
----
(रिलीज़ आईडी: 1524672)
आगंतुक पटल : 576
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English