பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் அதிபர் பயணத்தின்போது (10.3.2018) பிரதமர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையின் தமிழக்கம்

Posted On: 10 MAR 2018 5:17PM by PIB Chennai

 நண்பர்களே, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அவர்களே,

மதிப்பிற்குரிய தூதுக்குழு உறுப்பினர்களே, ஊடகப் பிரதிநிதிகளே

 நமஸ்காரம்!

அதிபர் மேக்ரானையும் அவருடன் வந்துள்ள தூதுக் குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் அவர்களே சென்ற ஆண்டு பாரீசில் சில மாதங்களுக்கு முன்னதாக, எனக்கு அன்பான வரவேற்பு அளித்தீர்கள். தற்போது, இந்திய மண்ணுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் மகிழச்சி அடைகிறேன்.

  அதிபர் அவர்களே,

நாம் இருவரும் இந்த மேடையை பகிர்ந்து கொண்டுள்ளோம். நாம் இருவரும் இரண்டு சக்திவாய்ந்த சுதந்திரமான, பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகங்களின் தலைவர்கள் மட்டுமன்றி, இரண்டு வளமான திறனுள்ள பாரம்பரியத்தின் சந்ததிகள் ஆகிறோம். நம்மிடையேயான யுக்தி அடிப்படையிலான ஒத்துழைப்பு இருபது ஆண்டுகள் பழமையானது என்றாலும், நமது இரு நாகரீகங்களுக்கும் இடையிலான ஆன்மீக ஒத்துழைப்பு நூற்றாண்டு கால பழமை மிக்கது.

18 ம் நூற்றாண்டுமுதல் பிரான்ஸ் சிந்தனையாளர்கள் பஞ்சதந்திர கதைகள், மூலமாகவும், ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீஅரவிந்தர் போன்ற ஞானிகள் மூலமாகவும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள், மூலமாகவும் இந்தியாவின் ஆன்மாவுக்குள் நுழைந்து பார்த்து வருகிறார்கள். வால்டேர், விக்டர் ஹ்யுகோ, ரோமெய்ன் ரோலண்ட், ரேனே டவ்மால், ஆன்ட்றெ மால்ராக்ஸ் போன்ற பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துக்கள் இந்தியாவை உத்வேகம் பெறச் செய்துள்ளன.

அதிபர் அவர்களே,

இன்று நமது சந்திப்பு இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மட்டுமல்ல. ஒரே கருத்துக்கள், ஒருமித்த பாரம்பரியம், ஆகியவற்றை கொண்ட இரண்டு நாகரீகங்களின் சங்கமமாகும். “ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” , என்ற கருத்து  பிரான்ஸ் நாட்டில் மட்டுமன்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எதிரொலிப்பது ஏதோ தற்செயலான நிகழ்ச்சியல்ல. இருநாடுகளின் சமுதாயங்கள் இந்த நெறிகளின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நெறிகளுக்காக நமது இருநாடுகளின் ராணுவ வீரர்களும், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

 நண்பர்களே,

அனைத்தையும் உள்ளடக்கிய, திறந்த, வளமான, அமைதியான, உலகத்திற்கு அடையாளச் சின்னமாக பிரான்சும், இந்தியாவும் இன்று ஒரே மேடையில் தோன்றுகின்றன. இருநாடுகளின் சுயேட்சையான, சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கைகள் அவர்கள் நலனுக்கு மட்டுமோ அல்லது அவர்கள் நாட்டு மக்களின் நலனுக்கு மட்டுமோ அல்லாமல் உலகளாவிய மனிதநேய நன்னெறிகளை நிலைநிறுத்துவதற்காகும். இன்று இந்தியாவும் பிரான்சும் உலக சவால்களை எதிர்கொள்ள இயலும். இருநாடுகளும் கைகோர்த்து இந்த பணியை எளிதாக்க அதிபர் அவர்களே உங்கள் தலைமை உதவியுள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டணி பாரீஸ் நகரில் 2015ம் ஆண்டு பிரான்ஸ் அதிபருடன் தொடங்கி வைக்கப்பட்டது. நாளை (11.03.2018) நடைபெறவுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் முதலாவது மாநாடு நாம் பகிர்ந்துகொள்ள உள்ள பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வின் தெளிவான உதாரணமாக திகழ்கிறது. இந்த நற்பணி பிரான்ஸ் அதிபருடன் இணைந்து நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

 

நண்பர்களே,

இந்தியா – பிரான்ஸ் இடையேயான நட்புறவு வரலாற்றில் பாதுகாப்பு, தற்காப்பு, விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மிகவும் பழமையானது.  இருதரப்பு உறவுக்கும் இருநாடுகளுக்கும் இடையே இதுதொடர்பான ஒப்பந்தம் உள்ளது.  இருநாடுகளிலும் எந்த ஆட்சி அமைந்தாலும், நமது நட்புறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்றைய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை  நீங்கள் பெற்றுள்ளீர்கள்.  எனவே, குறிப்பிட்ட மூன்று விதத்தில் என்னுடைய கருத்துக்களை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.  முதலாவது, பாதுகாப்புத் துறையில் நம்முடைய நட்புறவு மிகவும் ஆழமானது. பிரான்ஸ் நாட்டை இத்துறையில் அதிக நம்பகத்துவம் வாய்ந்த நட்பு நாடாக நாங்கள் கருதுகிறோம். இருநாட்டு ராணுவத்தினர் இடையே தொடர்ந்து ராணுவ ஒத்திகைகள் மற்றும் ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.  பாதுகாப்பு சாதனம் மற்றும் உற்பத்தியிலும் நம்முடைய உறவு மிகவும் வலிமையாக உள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி, பாதுகாப்புத் துறையில் பிரான்ஸ் இணைந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 

இன்று இருநாட்டு ராணுவத்தினர் இடையே  “ஒத்திசைவு தளவாடங்கள் ஆதரவில்” மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாக நான் கருதுகிறேன்.  இரண்டாவதாக உலகின் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் வளத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்கை ஆற்றவுள்ளதை நாம் இருவரும் நம்புகிறோம்.  இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் சுற்றுச்சூழல், கடல்சார் பாதுகாப்பு, கடல் வளம், கடற்பரப்பிலான சுதந்திரம் மற்றும் விமானப் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்த  நாம் முடிவெடுத்துள்ளோம்.  எனவே, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டு யுக்திகள் திட்டத்தை இன்று நாம் வெளியிடுகிறோம். 

மூன்றாவதாக, நமது இருநாட்டு நல்லுறவில் நல்ல எதிர்காலம் உடைய துறையாக மக்கள் தொடர்பு குறிப்பாக, இளைஞர்களிடையே மக்கள் தொடர்பை நாம் நம்புகிறோம்.  இருநாடுகளின் இளைஞர்கள் மற்ற நாட்டைப் பற்றி நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.  அங்கேயே இருந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தூதர்களாக அவர்கள் இந்த உறவை மேம்படுத்த முடியும்.  எனவே, இன்று இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.  ஒன்று இருதரப்பினர் இடையேயான கல்வித் தகுதியை அங்கீகரித்தல் மற்றும் இரண்டாவதாக குடியேற்றம் மற்றும் இடமாற்றம் தொடர்பான ஒத்துழைப்பு.  இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இருநாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இடையேயான நல்லுறவு குறித்த செயல்திட்டத்தை உருவாக்கும். 

நண்பர்களே,

நம்முடைய நல்லுறவில் மற்ற பல்வேறு அம்சங்களும் உள்ளன.   இவை அனைத்தையும் நான் குறிப்பிட வேண்டும் என்றால், அனைத்தையும் சொல்லி முடிப்பதற்கு இன்றிரவு ஆகி விடும்.  ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விண்வெளி என

தரை முதல் வான் வரை பல்வேறு துறைகளில் நம்முடைய ஒத்துழைப்பு உள்ளது. எந்த ஒரு துறையையும் நாம் விட்டு வைக்கவில்லை.  சர்வதேச அளவிலும் நாம் ஒருங்கிணைந்துள்ளோம்.  இந்தியாவும், பிரான்சும், ஆப்பிரிக்க நாடுகளுடன் வலுவான நல்லுறவில் உள்ளது.  நம்முடைய ஒத்துழைப்பை மற்ற அம்சங்களில் மேம்படுத்த இவை உதவுகின்றன.  நாளை சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு நிதி மாநாட்டில் நானும்,  அதிபர் மெஹ்ரானும் இணைந்து பங்கேற்கவுள்ளோம்.  நம்முடன் மற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், அரசுகள் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.   உலக நலனுக்கான எதிர்காலத்திற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் வெற்றிக்காக நாம் அனைவரும் உறுதிபூண்டுள்ளோம். 

அதிபர் அவர்களே, நாளை மறுநாள் வாரணாசியில் இந்தியாவின் பழமை வாய்ந்த என்றென்றும் நீடித்திருக்கும்  ஆன்மாவை நீங்கள் அனுபவிக்கவுள்ளீர்கள்.  பிரான்ஸ் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரை கவர்ந்த இந்திய நாகரீகத்தின் மாண்பையும், நீங்கள் உணரவுள்ளீர்கள்.  அடுத்து வரும் இரண்டு நாட்களில் அதிபர் மெஹ்ரானும், நானும் தொடர்ந்து எங்களுடைய எண்ணங்களை பரிமாறக்கொள்ள உள்ளோம்.  அதிபர் அவர்களையும், அவருடன் வந்துள்ள பிரதிநிதிகளையும் இந்தியாவுக்கு வருக, வருக என மீண்டும் வரவேற்கிறேன். 

நன்றி, வணக்கம்.



(Release ID: 1524098) Visitor Counter : 168


Read this release in: English