தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பொதுக் கணக்கு எண் பெற்றுள்ள வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், மிஸ்டுகால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் மூலம் தங்களது இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்

Posted On: 12 MAR 2018 6:03PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பொதுக் கணக்கு எண் பெற்றுள்ள சந்தாதாரர்கள், தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 011 – 2290 1406 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து, தங்களது தொகை இருப்புப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். சந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண், வங்கிக் கணக்கு எண், ஆதார் அல்லது வருமானவரி நிரந்தர கணக்கு எண் இணைக்கப்பட்டிருந்தால், தங்களது கணக்கில் செலுத்தப்பட்ட கடைசி சந்தாத் தொகை அல்லது வைப்பு நிதி இருப்புப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த வசதியைப் பெற, சந்தாதாரர்களின் செல்போன் எண், பொதுக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 011 – 2290 1406 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால், 2 ரிங்குகளுக்குப் பிறகு தொலைபேசி இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு பதில் அனுப்பப்படும்.  இந்த சேவை சந்தாதாரர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் வசதி இல்லாத போன்களில் இருந்தும் இந்த சேவையைப் பெறலாம்.

     வைப்பு நிதி இருப்புத் தொகை மற்றும் கடைசி சந்தாத் தொகை விவரங்களை மிஸ்டுகால் மற்றும் எஸ்எம்எஸ் தவிர, யூமாங் செயலி மூலமும் அறிந்து கொள்ளலாம்.

     பொதுக் கணக்கு எண்ணை பயன்படுத்தும் சந்தாதாரர்கள், தங்களத பதிவு செய்யப்பட்ட செல்போனிலிருந்து 77382 99899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தும், இருப்புத் தொகை மற்றும் சந்தா விவரங்களை அறிந்து கொள்ளலாம். EPFOHO UAN என்று எஸ்எம்எஸ் செய்யலாம்.  இந்த வசதி ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பத்து மொழிகளில் கிடைக்கும்.  ஆங்கிலம் அல்லாத மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் பதில் பெற பொது கணக்கு எண்ணிற்கு பிறகு தாங்கள் விரும்பும் மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை பயன்படுத்தி எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும்.

     பொதுக் கணக்கு எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்துதான் எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.  இதற்கு, சந்தாதார்ர்களின் வைப்பு நிதி மற்றும் சந்தா இருப்புத் தொகை விவரங்களை அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களுடன் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் பதில் அனுப்பும். 

 

 


(Release ID: 1524058) Visitor Counter : 293
Read this release in: English