சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2018 5:23PM by PIB Chennai
பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் முதற்கட்டமாக, 34,800 கிலோமீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி தரம் உயர்த்தும் திட்ட முதலீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் மீதமுள்ள பணிகள் தவிர, ஆறு தொகுப்புகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், ரூ. 5,35,000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். கட்டமைப்பு வசதி குறைபாடுகளை சரிசெய்து, நாடு முழுவதும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை முழு அளவிற்கு அதிகப்படுத்தும் நோக்கில் பாரத் மாலா பரியோஜனா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தில் காணவும்.