மத்திய அமைச்சரவை

தொலைத்தொடர்புத் துறையில் வரையறுக்கப்பட்ட கடன் தொடர்பாக அமைச்சகக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2018 7:20PM by PIB Chennai

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், தொலைத்தொடர்புத் துறை தொடர்பான இரு முக்கிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலீடு செய்ய வழியமைத்தல், அத்துறையில் அலுவல் நடவடிக்கைகளை எளிமையாக்குவது  ஆகிய இரு முக்கிய நடவடிக்கைகளுக்கு கேபினட் இசைவு தெரிவித்தது. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் தள்ளிப் போடப்பட்ட கட்டண நிலுவையை மாற்றியமைப்பதும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைப் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச வரம்பைத் திருத்தியமைப்பதும் இந்த நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.

விவரம்:

  1. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் தள்ளிப் போடப்பட்ட கட்டண நிலுவையை மாற்றியமைப்பது

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 10 தவணைக் காலத்துடன், கூடுதலாக அதிகபட்சம் 6 தவணைகளில் செலுத்த ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் தவணை நீட்டிப்பு அசலின் அடிப்படையில் இருக்கும். 2012ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான ஏலத்தில் போட்டியிட விண்ணப்பிக்கக் கோரும் நோட்டீஸில் உள்ளதன்படி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவோ அதன் மொத்த தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் அசல் இருக்கும்.

  1. ஸ்பெக்ட்ரம் வைத்திருப்பதற்கான அலைக்கற்றை உச்ச வரம்பைத் திருத்தியமைத்தல்

இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் (TRAI) மற்றும் தொலைத்தொடர்பு கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வைத்திருப்பதற்கான உச்சவரம்பை மாற்றியமைக்கவும் மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது.

  • ஒட்டுமொத்த ஸ்பெக்ட்ரம் உச்சவரம்பு தற்போதைய அளவான 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துதல்.
  • தற்போதுள்ள அலைக்கற்றைகளுக்கு இடையேயான உச்ச வரம்பு நீக்கப்பட்டது. மாறாக ஒரு ஜிகாஹெர்ட்ஸ் அளவில் ஒட்டுமொத்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு (700 மெகாஹட்ஸ், 800 மெகா ஹட்ஸ், 900 மெஹாஹட்ஸ்) 50 சதவிகித உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தனிப்பட்டோரோ ஒருங்கிணைந்தோரோ 1 ஜிகாஹெர்ட்ஸ் திறனுக்கு மேல் வைத்திருந்தால், அதற்கு உச்ச வரம்புஇல்லை.
  • 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் உலக வானொலித் தொடர்பு மாநாடு முடிந்த பிறகு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான உச்ச வரம்பு பிறகு மாற்றியமைக்கப்படலாம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வைத்திருக்க தற்போதுள்ள உச்ச வரம்பைத் திருத்தியமைக்க டிராய் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் திறம்பட பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

விளைவு:

தள்ளிப் போடப்பட்ட கட்டண நிலுவையைத் திருத்தியமைக்கும் நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். இது சிறிய ஆறுதலாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வைத்திருப்போர்க்கான உச்ச வரம்பைத் திருத்தியமைப்பதன் மூலம் தொலைத்தொடர்பு உரிமம் பெற வழி கிடைக்கும். இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் ஏல நடைமுறைக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

*****



(Release ID: 1523172) Visitor Counter : 99


Read this release in: English