பிரதமர் அலுவலகம்

லக்னோவில் நடைபெற்ற உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

प्रविष्टि तिथि: 21 FEB 2018 6:15PM by PIB Chennai

உத்தரப்பிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி அவர்களே, எனது சகாக்களே, மூத்த அமைச்சர்களே, லக்னோ நகரின் பிரதிநிதிகளே, மூத்த அரசியல்வாதியான உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மொரீஷியஸ் நாட்டு முன்னாள் பிரதமர் திரு அனிரூத் ஜெகந்நாத் அவர்களே, வெளிநாடுகளின் மாண்புமிகு அமைச்சர்களே, முதலீட்டாளர்களே, தொழில்முனைவோர்களே, இங்கு வந்துள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களே,

மாற்றம் என்பது வெளிப்படையான ஒன்று, இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு, பெருந்திரளாக வந்துள்ள முதலீட்டாளர்கள் ஆகியவை பெரிய மாற்றங்களாகும். இதற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி அவர்களையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும், உத்தரப்பிரதேச குடிமக்களையும் பாராட்டுகிறேன். குறுகிய காலத்தில் மாநிலத்தை வளம் மற்றும் மேம்பாடு நோக்கிய பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்றமைக்கு என் பாராட்டுக்கள்.

மாநிலத்தின் முந்தைய நிலைமையையும் அதற்கான காரணங்களையும், உத்தரப்பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள். அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை சூழலில், சாதாரண மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கே கடினமாக இருந்தபோது, தொழிலதிபர்கள் எதனை எதிர்பார்க்க இயலும். அத்தகைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள், நடுத்தர வகுப்பினரின் உள்ளக் கிடக்கைகள் நிறைவேறுதல் மற்றும் மேம்பாடு குறித்து பேசுவதற்கே சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். யோகி தலைமையிலான அரசு மாநிலத்தை நேர்மறை நிலை நோக்கி, எதிர்மறை நிலை, மனச்சோர்வு, நம்பிக்கையற்ற நிலை ஆகியவற்றிலிருந்து விலகி, நம்பிக்கையை நோக்கி கொண்டு சென்றுள்ளது. இதற்காக நான் பாராட்டு தெரிவிக்கிறேன். இப்போது உத்தரப்பிரதேசத்தின் அடித்தளம் தயாராகிவிட்டது. அதன் மீது மிகப்பெரிய அருள் நிறைந்த புதிய உத்தரப்பிரதேசத்திற்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆகையால், இந்த தூய பணிக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்புக்காக உங்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

பத்து மைலுக்கு ஒரு தரம் மாறுது நீரின் சுவை, நாற்பது மைலுக்கு ஒரு தரம்  மாறுது மொழிஎன்ற பழமொழி ஒன்று உள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ஆதார வளம் நிறைய உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் ஒவ்வொரு மண்டலமும் தனக்கு சொந்தமான அடையாளத்தை நிலை நிறுத்தி உள்ளது.

 

லக்னோ ஆடைகளில் சிக்கன் வேலைகளுக்கு பிரசித்திபெற்றது. மலிஹாபாத் மாம்பழங்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தரை விரிப்புகளுக்கு பிரிசித்திபெற்றது பாடோஹி. மொராதாபாதின் வெண்கல பானைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஃபெரோஸாபாதின் கண்ணாடி பிரகாசமாக ஒளிருகிறது. மேலும், ஆக்ராவின் பேடாவும், கனோஜின் வாசனைப் பொருட்களும் உலகெங்கும் பிரபலமானவை. பனாரஸின் பிரகாசமான காலைப்பொழுதும், அவாத்தின் மாலைப்பொழுதும் நம்மிடம் உள்ளன. நமக்கு தாஜ்மஹால், சாரநாத், அயோத்தியா, மதுரா, காசி ஆகியன உள்ளன. இந்த பூமி ராம்லீலாவுக்கும், கிருஷ்ணரசத்துக்கும் பெயர்போனது. இந்த நிலம் கங்கை, யமுனை, சரயு நதிகள் பாயும் பேறுபெற்றது.

 

உத்தரப்பிரதேசம், கான்பூர் ஐஐடி, லக்னோ ஐஐஎம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற பெருமைமிகு நிறுவனங்களுக்கு பெயர் போனது. உத்தரப்பிரதேசத்திற்கு புகழ்பெற்ற வரலாறும், பிரகாசமான நிகழ்காலமும் உள்ளன. இந்த மாநிலத்தின் ஜவுளி, சுற்றுலா, பண்பாடு, விவசாயம், கல்வித்துறைகளில் இருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம். இவைகள் அனைத்தும் கிழக்கு இந்தியாவுக்கு மட்டுமின்றி நாடு முழுமைக்குமே வளர்ச்சிக்கான உந்து விசையாக செயல்பட முடியும்.

 

சகோதரர்களே, சகோதரிகளே,

 

இன்றைய நிலையில் உத்தரப்பிரதேசம் உணவுதானியம், கோதுமை, கரும்பு, பால், உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலாவது மாநிலமாக விளங்குகிறது. காய்கறி உற்பத்தியில் நாட்டில் இரண்டாவது இடத்தையும் பழ உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் உத்தரப்பிரதேசம் பிடித்துள்ளது. சிறு தொழில்துறையை பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசம் நாட்டின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

கடந்த ஆண்டுகளில் நிலவிய கடினமான சூழ்நிலையையும் மீறி உத்தரப்பிரதேசத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் நிறுத்திய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், முதல் நிலையை அடைய வேண்டும் என்ற போட்டியின் நடுவே, சில அவசரமான, அவசியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியது உள்ளது.

 

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பதே கேள்வி. உத்தரப்பிரதேசத்தின் திறன் இவ்வளவுதானா? உத்தரப்பிரதேசம் தனது முழு திறனையும் அடைந்துவிட்டதா?

 

நண்பர்களே,

 

உத்தரப்பிரதேசத்தில் நன்னெறிகளும், நற்பண்புகளும் உள்ளன. அதேசமயம் அவற்றின் மீது மதிப்புக்கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பணிப்பண்பாடு, வர்த்தகப் பண்பாடு ஆகியவற்றில் மட்டுமின்றி, மாநிலத்தின் ஒவ்வொரு துறையிலும் மதிப்பு கூட்டுதல் அவசியப்படுகிறது. இந்த விஷயத்தை மனதில் கொண்டு திரு யோகி அவர்களின் அரசு முடிவுகளை மேற்கொண்டு திட்டங்களை வகித்து வருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

தொழிலியல் முதலீடுகளை வேலைவாய்ப்புடன் இணைத்து இங்கு கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. திரு யோகி அரசில் பல்வேறு துறைகளுக்கு பல்வேறு திட்டங்கள் இயற்றப்படுகின்றன.

 

ஜவுளி, மின்னணுவியல், உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, சுயவேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் நீண்ட கால திட்டங்கள் கொள்கைகளுடன் இணைந்து அமல்படுத்தப்படுகின்றன. தற்போது உத்தரப்பிரதேசத்தில் தொழில் அதிபர்களை எதிர்கொள்வது சிகப்பு நாடா  நடைமுறை அல்ல, சிவப்பு கம்பள வரவேற்புதான். தொழில் அதிபர்களுக்கான டிஜிட்டல் அனுமதி நடைமுறை ஒரு உதாரணமாகும். இது ஒற்றைச் சாளர வலைதள அடிப்படையிலானது. இதன் மூலம் தொழிலதிபர்கள் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் ஆன்லைன் அனுமதியை பெறுகிறார்கள். மனித தலையீடுகள் மிகவும் குறைந்தபட்ச நிலையில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வர்த்தகம் புரிதலில் எளிமை நடைமுறையில் இது முக்கியமான நடைமுறையாகும். யோகி அரசு பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அளித்த வாக்குறுதியை மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வருகிறது.

 

இந்த ஆண்டு மாநிலத்தின அரிசி உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்குவது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச  அரசு தற்போது அனைவருக்கும் அதிகாரம் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது. இதனால், உள்ளுர் தொழிற்சாலைகளும் பெரிய அளவில் பயன்பெறவுள்ளன.

 

நண்பர்களே,

 

வளமான கங்கை படுகை பெற்றுள்ள உத்தரப்பிரதேசம் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 60% பேர் பணிசெய்யும் வயதுள்ளவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேச அரசு அனைவருக்கும் அதிகாரம் என்ற இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தின் திறன் அளவற்றது என்பதை வலியறுத்த நான் விரும்புகிறேன். வளர்ச்சி என்பது திறன் மற்றும் கொள்கை மற்றும் திட்டமிடல் மற்றும் செயல்திறனின் பலன் ஆகும். உத்தரப்பிரதேச குடிமக்களும், யோகி அரசும் உயர் செயல்திறனுக்கு தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த காலத்தில் தொழிலியலில் நான்காம் தலைமுறை தொழில்நுட்பங்கள் வாயிலாக ஒட்டு மொத்த மதிப்பு சங்கிலியை மேலும் நெகிழ்ச்சியுடையதாக, திறன் உள்ளதாக, சிறந்த தரம் உள்ளதாக மாற்றி வருகின்றன.

 

இந்த கண்காட்சியில் நான் சில சிறப்பு நுட்பங்களை கண்டேன். தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல். மின்னணுவியல் உற்பத்தி ஆகியவற்றில்  பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான அதி நவீன நகரங்கள், அம்ருத் நகரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

 

சகோதரர்களே, சகோதரிகளே,

 

சில நாட்களுக்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் இதேபோன்ற முதலீட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்றேன். மகாராஷ்டிரா அரசு தமது பொருளாதாரத்தை ஆயிரம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்று மற்றொரு முக்கிய கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உத்தரப்பிரதேசமும், மகாராஷ்டிரமும் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் இலக்கை அடைவதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிட முடியுமா? உத்தரப்பிரதேச அரசு பல்வேறு மாநிலங்களுடன் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நிலைகளில் போட்டியிட முடியுமா? இது மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும். வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் திறக்கும். இந்த ஆரோக்கியமான போட்டி, போட்டியிடும் சமஸ்டி அமைப்பின் ஆர்வத்தை வலுப்படுத்தும்.

 

நண்பர்களே,

 

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உத்தரப்பிரதேச பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை பெரிய கட்டமைப்பை கொண்டவை. விவசாயத்திற்கு அடுத்தபடியாக, இந்த துறைதான் மக்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குகிறது.

 

உத்தரப்பிரதேசத்தில் சுமார் 50 லட்சம் சிறு, குறு, நடுத்தரப்பிரிவுகள் உள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு காரணமாக கைவினைப்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், தரைவிரிப்புகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் ஆகியவற்றில் உத்தரப்பிரதேசம் முன்னணி ஏற்றுமதியாளராக விளங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்பு உற்பத்திப் பொருட்களை இந்த துறைதான் உயிரோட்டமாக காப்பாற்றி வருகிறது. நாம் மீண்டும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் நெடுநோக்கில் சிந்திக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் தற்போதுள்ள துறைகளின் வருமானம் உயரும்.

 

இந்த முக்கியமான கருத்தை மனதில் கொண்டு உத்தரப்பிரதேச அரசு ‘ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள்’ என்ற திட்டத்தை தொடங்கி இருப்பதாக அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இத்திட்டம் நிலைமையை முற்றிலும் மாற்றி அமைக்கும் என நம்புகிறேன். நாம் தொகுப்பு அணுகுமுறையை ஏற்கெனவே நன்கு அறிந்துள்ளோம். ஆனால், ‘ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள்’ திட்டம் முழுமையான சுற்றுச்சூழலை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்துடன் திறன் மேம்பாடு, உற்பத்திப்பொருள் சந்தைப்படுத்துதல், சிற்பம் கட்டுதல், உள்ளுர் நிலைகளில் வர்த்தக  பெயரிடுதல் போன்றவை எளிதாக இணைந்து செயல்படுத்தலாம்.

சகோதர, சகோதரிகளே,

உ.பி. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு மாநிலம் இரட்டை மின்சார இயந்திரத்தை கொண்டிருந்தால், அது அபரிமிதமான வேகத்தில் முன்னேறும் என்று கூறியிருந்தேன். ”ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி  திட்டம்” தேவையான மின்சாரத்தைக் கொண்டிருக்கும். மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கம், ஸ்டாண்ட் அப் இந்தியா இயக்கம், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கம் மற்றும் முத்ரா யோஜனா ஆகிய திட்டங்களின் வாயிலாக இது பயன் பெறும்.

இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்களை வழங்கியுள்ளது. சுய வேலைவாய்ப்புக்காக வங்கி உத்தரவாதமின்றி 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் நமது அரசு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முத்ரா கடன்களை வழங்க திட்டமிட்டுள்ளது. ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி மற்றும் முத்ரா கடன்கள் சேர்ந்து சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க உதவும் என நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

நிபுணத்துவத்தையும், திறமையையும் இணைப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். மீரட்டில் ஒருவர் உலகத் தரம் கொண்ட பானையை செய்கிறார் என்றால், உலகத் தரம் வாய்ந்த வணிக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலை உருவாக்குவது பற்றி நாம் யோசிக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த வினியோக முறை மற்றும் உலகத்தரத்திலான சேவை இருக்குமானால் உலகத்தரம் வாய்ந்த திறமை தானாகவே அதில் வந்து சேரும்.

நண்பர்களே,

விவசாயத் துறை மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளது. விளை நிலங்களிலிருந்து பழங்களையும், காய்கறிகளையும் சந்தைகளுக்கு கொண்டு வரும் போது பெருமளவுக்கு அவை வீணாகின்றன. இந்தக் காரணத்தால் நாட்டில் உள்ள விவசாய சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும், 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்பதாக மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.

உதாரணத்திற்கு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். உருளைங்கிழங்கு உற்பத்தியில் உ.பி. முதலிடத்தில் உள்ளது. முன்பெல்லாம் உருளைக்கிழங்கு வறுவல் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டு வந்தன. கால ஓட்டத்தில் இது குறைந்து விட்டது. தற்போது உருளைக்கிழங்கு வறுவல் தயாரிப்பு தொழில் உள்ளூர் மட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அவர்களை எளிதாக அணுக வழி ஏற்பட வேண்டும். ஓராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையை விவசாயிகள் எளிதில் அணுக முடிய வேண்டும். தாசரி மாம்பழங்கள் இங்கு மிகவும் பிரபலமானவை. ஆனால் முறையான சேமிப்பு கிடங்குகள் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகள் இல்லாததால் அந்த மாம்பழங்கள் அழுகி விடுகின்றன. இந்த மாம்பழங்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலுமான சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் பதப்படுத்தும் நிலையங்களைக் கொண்ட தொகுப்புகள் அல்லது சந்தை உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. மாம்பழச் சாறின் உதவியுடன் பல்வேறு ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் மற்றும் தொழில்துறைக்கு இடையே தொடர்பை வலுப்படுத்த வேண்டியது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உ.பி. பால் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. ஆனால் அதன் மதிப்பு கூட்டுப் பொருட்களை பெருக்குவது எப்படி? வயலில் இருந்து வாய்க்கு உணவுப் பொருளை கொண்டு வருவதற்கு உட்கட்டமைப்பு முழுவதையும் எப்படி நவீனப்படுத்துவது? இந்த திசையில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பயிர்கள், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை வீணாவதை தடுக்க மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்பாத யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கும், தொழில் துறையின் தேவைக்கும் இடையே இணைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், அவர்களது இழப்பை குறைக்கவும் எடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கை இதுவாகும். உணவுப் பொருள் வீணாவதை தடுக்கும் வகையில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது.

நண்பர்களே,

விவசாய கழிவுகளையும், அதன் உப பொருட்களையும் செல்வமாக மாற்றும் அதிகப்படியான வாய்ப்பு வசதிகள் உ.பி.யில் உள்ளன. கரும்பு உற்பத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த மாநிலத்தில் எத்தனால் உற்பத்திக்கான சிறந்த வளம் உள்ளது. உயிரி எரிபொருள் துறையில் உ.பி.யின் வளர்ச்சியால் ஏற்படும் தாக்கம் தில்லி வரை உணரப்படலாம். தூய்மையான மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இது அமையும். உயிரி எரிபொருள் கொள்கையை இந்த மாநிலம் தயாரித்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பயிரை எரிக்கும் விஷயத்தை சமாளிக்க இந்தக் கொள்கை உதவும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் இலட்சியத்தை எட்ட, கூட்டாக எடுக்கப்படும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் உதவும்.

நண்பர்களே,

இந்த சிறப்பான தருணத்தில் நான் முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்த அறிவிப்பு உ.பி.க்கு மட்டும் முக்கியமானதல்ல. நாட்டுக்கே தேவையான முக்கிய நடவடிக்கையாகும். பட்ஜெட்டில் நாடு இரண்டு பாதுகாப்பு தொழில் வளாகச் சாலைகளை பெறும் என  அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று உ.பி.யில் அமைய உள்ளது. உ.பி.யில் அமைய உள்ள இந்த வளாகச் சாலை, புந்தல்காண்ட் மண்டலத்தை முன்னேற்றுதை கருத்தில் கொண்டு ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி, சித்ரகூட் ஆகிய பகுதி வரை இது நீட்டிக்கப்படும். இந்த திட்டத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, புந்தல்காண்ட் விரைவுச்சாலை ஆகியவற்றை அமைப்பதன் மூலம் இரு இடங்களையும் தொழில்மயமாக்க யோகி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே

உ.பி.யில் முன்பு லக்னோ, வாரணாசி, கோரக்பூர் ஆகிய 3 இடங்களில் மட்டும் விமான நிலையங்கள்  இருந்தன. தற்போது குஷி நகர், ஜேவார் ஆகிய இரண்டு இடங்களில் கூடுதலாக விமான நிலையங்களுக்கு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர உடான் திட்டத்தின் கீழ் ஆக்ரா, கான்பூர், அலகாபாத்,  பரேலி, ஜான்சி, சித்ரகூட், முராதாபாத், அலிகார், அசாம்கார் ஆகிய 11 நகரங்களில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த நகரங்களில் விமானப் போக்குவரத்து வசதி வந்து விடும். சாதாரண மக்களும் விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

உ.பி.யில் இயங்கும் விமான நிலையங்கள் அவ்வளவாக இல்லை. இருந்தும் விமானப் பயணிகளின் போக்குவரத்து கடந்த ஆண்டு 30 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். இந்தப் புதிய விமான நிலையங்கள் இயங்க தொடங்கினால் எப்படிப்பட்ட மாற்றம் ஏற்படும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

நாட்டிலேயே உ.பி.யில்தான் மிகப் பெரிய ரயில் கட்டமைப்பு உள்ளது. மாநிலத்தில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் கட்டமைப்பு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பிலும் உ.பி.க்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்த பின்னர் உ.பி.யின் பொருளாதாரத்தில் புதிய வலு கிடைக்கும். இரண்டு பாதைகளும் உ.பி.யில் தாத்ரி என்னுமிடத்தில் சந்திக்கும். தில்லி, மும்பை தொழில் வளாகச் சாலை மற்றும் அமிர்தசரஸ்-தில்லி-கொல்கத்தா தொழில் வளாகச் சாலை ஆகியவற்றுடன் இந்தப் பாதையும் உ.பி.யில் வளர்ச்சியில் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

உ.பி.யின் தொழில் வளர்ச்சிக்கு வாரணாசி-ஹால்டியா இடையே அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையும் உதவும். மேலும் லக்னோ-காசியாபாத்-நொய்டா ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கமும், மீரட்-கான்பூர்-வாரணாசி ஆகிய இடங்களில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களும் உ.பி.யின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த பேருதவி செய்யும். பாரத் நெட் பரியோஜனா திட்டத்தின் கீழ் உ.பி.யில் உள்ள பஞ்சாயத்துக்களில் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் தொடர்பு அளிக்கப்பட்டு ஊரகப் பகுதிகள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதி கிட்டும். நவீன நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், சுரங்கப்பாதைகள், மெட்ரோ ரயில் பாதைகள், நீர்வழிகள், தகவல் பாதைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உ.பி.யை 21 ஆம் நூற்றாண்டின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

சிறந்த தொடர்பு நிலை தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள் ஆகியவை போக்குவரத்தின் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாறுவதற்கு பெரும்உதவி செய்யும். போக்குவரத்தில் தடங்கல்கள் குறைக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் எளிதில் வளரும். சுற்றுலா மேம்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

சுற்றுலா, வளர்ச்சியை பல மடங்காக்கும் திறன் கொண்டதாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சார பாரம்பரியம் மிக்க மாநிலமாக உ.பி. திகழ்கிறது. பலத்தரப்பட்ட கலைகள் உ.பி.யில் பரிமளிக்கின்றன. சுற்றுலா மைய சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். பாரம்பரிய சுற்றுலா, கைவினைத்சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, வனப்பகுதி சுற்றுலா, கிராம சுற்றுலா என பல்வேறு வாய்ப்புகள் உ.பி.யில் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக உ.பி. திகழ்கிறது. இதில் முதலிடத்திற்கு உ.பி.யால் வரமுடியும். இந்த உச்சி மாநாட்டில் நான் பிரகடனப்படுத்த உள்ள புதிய சுற்றுலாக் கொள்கை இந்த இலக்கை அடைவதற்கு உதவும் என்று நம்புகிறேன். உ.பி.யில் சுற்றுலா பிரிவு ஒரு தொழிலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 2019-ல் பிரயாகையில் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இது உலகிலேயே இந்த வகையிலான மிகப் பெரிய விழாவாகும். ஐ.நா. சபை கடந்த ஆண்டு கும்பமேளாவை, மனிதர்கள் திரளும் கலாச்சார பாரம்பரிய விழாவாக அங்கீகரித்துள்ளது. இது நம் அனைவருக்கும் குறிப்பாக உ.பி. அரசுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 2019 கும்பமேளா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரவுள்ள மக்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையப் போகிறது. உ.பி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். கும்பமேளாவுக்கு வருகின்ற வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உலகளவில் இதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதன் மூலம் உ.பி.யையும், இந்தியாவையும் உலகம் அடையாளம் காணும் வகையில் இந்த ஏற்பாடுகள் அமைய வேண்டும்.

நண்பர்களே,

முதலீட்டாளர்கள் மாநாட்டை முதன்முதலாக குஜராத்தில் தொடங்கினோம். அதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேஷ், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் இத்தகைய மாநாடுகளை நடத்தி தற்போது அது உ.பி.க்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களிடம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கூடிய விரைவில் செயல்படுத்துவது முக்கியமாகும். அப்போதுதான் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப் போவதாக யோகி வாக்குறுதி அளித்துள்ளதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரே முயற்சிகளில் ஈடுபட இருக்கிறார்.  உ.பி. தனது பணியை தீவிரமாக செயல்படுத்த உள்ளதால் நீங்கள் அனைவரும் அதற்கு தயாராக வேண்டும்.

நமது அரசு, மத்திய அரசானாலும், மாநில அரசானாலும் எப்போதுமே வேலைவாய்ப்பு மற்றும் மக்களை மையப்படுத்தும் வளர்ச்சியை வலியுறுத்தி வந்துள்ளன. ஏழைகளுக்கு உள்ளீடான நிதி ஆதாரம் கிடைக்கும் வகையில் எளிதான வாழ்க்கையை அளிக்கவும், வர்த்தகம் புரிவதற்கு எளிய உகந்த சூழலை அளிப்பதற்கும் தாம் முன்னுரிமை அளித்து வருகிறோம். அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக தற்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 31 கோடி வங்கிக் கணக்குகளை ஏழைகள் தொடங்கியுள்ளனர்.  ஒரு நாளைக்கு 90 பைசா மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு ரூபாய் பிரீமியத்துடன் 18 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு காப்புறுதி கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு ஏழை எளிய நடுத்தர வகுப்பு மக்களுக்கு 1 கோடி வீடுகளை கட்டியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 6 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.  3 கோடியே 30 லட்சத்துக்கும் கூடுதலான ஏழை பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பபட்டுள்ளன.

இந்த பட்ஜெட்டில் உஜ்வாலா இலக்கு 8 கோடிக்கும் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சவுபாக்யா திட்டம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களின் வீட்டுக்கும் ஒளி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 கோடி ஏழை மக்களுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். குடும்பத்தில் யாராவது ஒருவர் நோயுற்றால் அரசு அவரது சிகிச்சை மற்றும் ஓராண்டு மருந்து செலவுக்காக 5 லட்சம் ரூபாயை காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கும்.

இது போன்ற திட்டங்கள் மூலம் ஏழை மக்கள் நல்ல முறையில் வாழ நமது அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் கொள்கைக் குறுக்கீடுகள் விவசாயிகள், ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் ஆகியோரை சென்றடைவதை அரசு உறுதி செய்து வருகிறது.

நண்பர்களே,

புதிய உத்திரபிரதேசம் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான புதிய உற்சாகம், புதிய நம்பிக்கை, புதிய முதலீடுகள் அவசியமாகும். உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு முதலீடுகளுக்கு புதிய வழிகளை திறந்து விடும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் எனது உரையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியை திரு. அனிருத் ஜெகன்னாத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன். யோகியின் முயற்சிகள் உ.பி.யை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவு மற்றும் ஆசிகளால் உ.பி. முன்னேற்றம் அடைந்து இந்தியாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து இந்த கனவை நனவாக்குவோம். இந்த எதிர்பார்ப்புகளுடன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.


(रिलीज़ आईडी: 1522653) आगंतुक पटल : 523
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English