பிரதமர் அலுவலகம்

ஜோர்டான் மன்னர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது (மார்ச் 01, 2018) கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் பட்டியல்

Posted On: 01 MAR 2018 4:56PM by PIB Chennai

 

வ.எண்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்பாடு ஆகியவற்றின் பெயர்

விவரம்

1.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாதுகாப்புத்துறையில் இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த ஒத்துழைப்பின் வரம்புகள் வரையறுக்கப்பட்டு நன்கு அறிந்து கொள்ளப்பட்ட பயிற்சி, பாதுகாப்பு தொழில்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், ராணுவ ஆய்வுகள், கணினி பாதுகாப்பு, ராணுவ மருத்துவ சேவைகள், அமைதி காப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் வரையறுத்தல்.

2.

ராஜீய மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு அளித்தல்

ராஜீய மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஜோர்டான் எல்லைக்குள் நுழையவும் அதனை விட்டு வெளியேறவும், அந்நாட்டு பகுதி வழியாக செல்லவும், வீசா தேவையை தவிர்ப்பது இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

3.

கலை நிகழ்ச்சிகள் பரிவர்த்தனை

2018 முதல் 2022 வரையான காலத்திற்கு செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும், ஜோர்டானுக்கும் இடையே இசை, நடனம், நாடகம், கண்காட்சி, கருத்தரங்குகள், மாநாடு, தொல்லியல் ஆவணக்காப்பகம், நூலகம், அருங்காட்சியகம், இலக்கியம், ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், அறிவியல் அருங்காட்சியகம், திருவிழாக்கள், வெகுஜன ஊடகங்கள், இளைஞர் திட்டங்கள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ள வகை
செய்யப்பட்டுள்ளது.
,

4.

மனித ஆற்றல் ஒத்துழைப்பு உடன்பாடு

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜோர்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஜோர்டானில் இந்திய நாட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்யும் சுழற்சி முறையின் நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கு வகை செய்யப்பட்டுள்ளது.

5.

ஜோர்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா, ஜோர்டான் நாடுகளின் சட்டங்கள், நெறிமுறைகளின்படி சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை அடிப்படையில் சுகாதாரம், மருத்துவ அறிவியல், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

6.

ஜோர்டானில் அடுத்த தலைமுறை மீச்சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜோர்டானில் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 3,000 அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு அந்த நாட்டிலேயே பயிற்சி அளிப்பதற்கான அடுத்த தலைமுறை மீச்சிறப்பு மையத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஜோர்டானிலிருந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைமை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதெற்கென இந்தியாவில் வள மையங்களை அமைத்தல்.

7.

 பாறை பாஸ்பேட் மற்றும் உரம் – என்பிகே ஆகியவற்றை வழங்குவதற்கான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாறை பாஸ்பேட்டை சுரங்கத்திலிருந்து தோண்டியெடுத்து பயன்பாட்டிற்கு வருமாறு செய்தல், பாஸ்பாரிக் அமிலம் / டிஏபி / என்பிகே உரங்களை தயாரிப்பதற்கான உற்பத்தி வசதிகளை உருவாக்குதல் ஆகியன இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். உற்பத்தியாகும் உரங்களை 100 சதவீதம் நீண்டகால அடிப்படையில் இந்தியா வாங்கிக் கொள்வதற்கும் இது வகை செய்கிறது. இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நீண்டகாலம் நிலையான முறையில் பாறை பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்கிறது.

8.

சுங்கத்துறையில் பரஸ்பர உதவி உடன்பாடு

சுங்க குற்றங்களைத் தடுக்க இரு நாடுகளிலும் உள்ள சுங்கம் சார்ந்த சட்டங்களை சரியாக பயன்படுத்துவதற்கு பரஸ்பர உதவி அளிக்கும் வகையில் இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே இந்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகள் விதிக்கும்  சுங்கத்தீர்வை, வரிகள், கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவை குறித்த துல்லியமான தகவல்களை தடங்கள் இன்றி பகிர்ந்து கொள்ளுதல்.

9.

ஆக்ராவுக்கும் பெட்ராவுக்கும் (ஜோர்டான்) இடையிலான (பிணைப்பு) நகர உடன்பாடு

ஆக்ராவுக்கும் பெட்ராவுக்கும் இடையிலான சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கென சுற்றுலா, பண்பாடு, விளையாட்டுக்கள், பொருளாதாரத்துறைகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்புக்கும் கூட்டாக பணிபுரிவதற்கும் என ஆக்ரா, பெட்ரா நகரங்களின் நகராட்சி மன்றங்களிடையே இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

10.

இந்தியாவின் வெகுஜன தகவல் தொடர்பு நிறுவனத்துக்கும் ஜோர்டான் ஊடக நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்பு

இந்த இரு நிறுவனங்களுக்கிடையே கூட்டு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கல்வி நிறுவனங்கள் சார்ந்த, அறிவியல் நடவடிக்கைகளை கூட்டாக ஏற்பாடு செய்தல், பொது ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பொருட்களை பரிவர்த்தனை செய்து கொள்ளுதல் ஆகியனவும் இதன் நோக்கங்களாகும்.

11.

பிரசார் பாரதிக்கும் ஜோர்டான் தொலைக்காட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரசார் பாரதிக்கும் ஜோர்டான் வானொலி, தொலைக்காட்சி கழகத்துக்கும் இடையே ஒத்துழைப்புக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளுதல், சேர்ந்து தயாரித்தல், பணியாளர்கள் பயிற்சி, மேலும் கூடுதலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

12.

ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி இருக்கை ஒன்றை அமைப்பதற்கு அப்பல்கலைக்கழகத்திற்கும் இந்திய பண்பாட்டு உறவுகள் சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையின் இந்தி இருக்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான அடிப்படை மற்றும் இதர நிபந்தனைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரையறை செய்கிறது.

 

***



(Release ID: 1522375) Visitor Counter : 287


Read this release in: English , Assamese