வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இரண்டாவது இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு இன்று நடைபெற்றது
Posted On:
27 FEB 2018 6:12PM by PIB Chennai
இரண்டாவது இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை கோத்ராவில் உள்ள சோசன்இல்போ நிறுவனம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இந்த உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவுக்கும், கொரியா குடியரசுக்கும் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியன இந்த உச்சிமாநாட்டின் நோக்கங்களாகும்.
இந்த உச்சிமாநாடு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையேற்ற கொரிய நாட்டு முதன்மை நிர்வாகிகளுடனான வட்டமேஜையுடன் தொடங்கியது. இந்தியாவுக்கும் கொரியா குடியரசுக்கும் இடையே நிலவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை கோடிட்டு காட்டிய இந்த நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் திறன் குறித்தும் எடுத்துக்காட்டியது. கொரிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை விவாதிப்பதற்கும் இந்தியாவில் செயல்படும் கொரிய நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த வட்டமேஜை வாய்ப்பளித்தது. இந்த வட்டமேஜை நிகழ்ச்சியில் இருநாடுகளின் பிரதிநிதிகள், மொத்தம் 57,500 கோடி அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் பெரிய கொரிய நிறுவனங்களைச் சேர்ந்த 25 முதன்மை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடக்க உரையாற்றிய பிரதமர் திரு மோடி, கிழக்கு நாடுகளுடன் அதிக அளவு பொருளாதார உறவுகளுக்கான தனது நெடுநோக்கை பற்றி குறிப்பிட்டார். முதலீடுகள், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் ரயில்வே, தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், அடிப்படை வசதி துறைகளில் முதலீடு செய்ய வருமாறு கொரியாவை பிரதமர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு இந்தியா வழங்கும் ஜனநாயகம், மக்கள்தொகை, தேவை ஆகிய வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை வலியறுத்தினார். இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை கோடிட்டு காட்டிய திரு சுரேஷ்பிரபு இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தையும் உலக அளவில் இந்தியா அடைந்துள்ள தர வரிசை முன்னேற்றத்தையும் எடுத்துரைத்தார்.
இந்த உச்சிமாநாட்டின்போது பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான பி2பி எனப்படும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு தொழில்கள் சார்ந்த பலதரப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இந்த உச்சிமாநாட்டில் 90 கொரிய நிறுவனங்களைச் சேர்ந்த 425 தென்கொரிய பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
(Release ID: 1521962)
Visitor Counter : 92