தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

டிடி இலவச டிஷ் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்ட இடைவெளியை அகற்றி, விளம்பர வருவாயை அதிகரிக்க தூர்தர்ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2018 2:07PM by PIB Chennai

டிடி இலவச டிஷ் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்ட இடைவெளியை அகற்ற, தரமான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதுடன், விளம்பர வருவாயை அதிகரிக்கவும், வரிச்செலுத்துவோர் மீதான சுமைகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தூர்தர்ஷனை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி வலியுறுத்தியுள்ளார். பிராந்திய மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு பற்றிய 24-வது சர்வதேச மாநாடு, நேரியல் அல்லாத ஒளிபரப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மாதிரிகள் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட (ஒளிபரப்புப் பொறியாளர் சங்கம்) – பிஇஎஸ் கண்காட்சி 2018 தொடக்க விழாவில் இன்று பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 53 கோடியை எட்டும் என்றார். நாற்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு 9.6 சதவீதமாக இருந்த விளம்பரச் செலவுகள், இந்தாண்டு 12.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஒளிபரப்புப் பொறியாளர் நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஒளிபரப்புப் பொறியாளர் சங்கத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஒளிபரப்புத் துறையின் பலம், தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையில் மட்டுமன்றி அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளின் தரத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். பிரச்சார் பாரதியில் பணியாற்றும் ஒளிபரப்புப் பொறியியல் பணியாளர்கள் அனைவருக்கும் இச்சங்கம் உரிய பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிஇஎஸ் கண்காட்சி 2018, ஒளிபரப்புப் பொறியாளர் சங்கம் (இந்தியா) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரிடையாகவோ இந்திய முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலமாகவோ காட்சிக்கு வைத்திருந்தன.


(வெளியீட்டு அடையாள எண்: 1521804) வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी