பிரதமர் அலுவலகம்
கனடா நாட்டுப் பிரதமர் இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த ஊடக அறிக்கையின் தமிழாக்கம் (பிப்ரவரி 23, 2018)
Posted On:
23 FEB 2018 8:02PM by PIB Chennai
மேதகைமைமிக்க, மாண்புமிகு பிரதமர் திரு. ஜஸ்டின் ட்ரூடோ அவர்களே,
மதிப்புக்குரிய பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களே,
ஊடகத் துறை நண்பர்களே,
அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பிரதமர் ட்ரூடோ அவர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் என்ற முறையில் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இது இருக்கிறது என்றாலும், 1983-ல் அப்போது கனடாவின் பிரதமராக இருந்த தனது தந்தை திரு. பியெர்ரெ ட்ரூடோ உடன் இவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.
திரு. பிரதமர் அவர்களே உங்களுடைய பயணம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீங்கள் வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இன்றைய நமது சந்திப்புக்கு முன்னதாக இந்தியாவில் பல நகரங்களுக்கு நீங்கள் சென்று வந்தீர்கள் என்பதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
கனடாவுக்கு 2015 ஆம் ஆண்டு நான் மேற்கொண்ட பயணம், 42 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர் ஒருவர் கனடாவில் மேற்கொண்ட முதலாவது இருதரப்பு பயணமாக இருந்தது. அந்தப் பயணத்தின்போது வான்கூவர், டோரண்டோ மற்றும் ஒட்டாவா நகரங்களுக்கு நான் சென்றேன். இந்தியாவின் மீது கனடா நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்றுதல் மற்றும் பாசத்தை நான் கண்டறிந்தேன்.
கனடா மீது இந்தியா கொண்டுள்ள கனிவான மற்றும் இயல்பான சகோதரத்துவத்தை பிரதமர் ட்ரூடோவும் கண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டின் பன்முகத்தன்மையையும், நமது ஜனநாயகத்தின் துடிப்பான தன்மையையும் அவர் அறிந்திருப்பார். நண்பர்களே,
கனடாவுடன் போர்த்திறன்சார்ந்த விஷயங்களில் பங்களிப்பு மேற்கொள்வதற்கு இந்தியா உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.
ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சிதான் உயர்ந்தது என்ற தன்மை, பரஸ்பர தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகள் உள்ளன.
வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இருந்து எரிசக்தி வரையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருந்து கல்வி மற்றும் தொழில்திறன் வளர்ச்சி வரையிலும், பெருங்கடல்கள்கள் முதல் விண்வெளி வரையிலும் என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவும் கனடாவும் இணைந்து பணியாற்ற முடியும்.
இன்றைய நமது சந்திப்பில், பரஸ்பர உறவுகள் குறித்த அனைத்து அம்சங்களையும் நாம் ஆய்வு செய்து, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கைகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.
முதன்முதலில், நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம். இந்தியா மற்றும் கனடா போன்ற ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு தீவிரவாதமும், பயங்கரவாதமும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்த சக்திகளை சமாளிப்பதற்கு நாம் ஒன்று சேர வேண்டியது முக்கியம்.
சமூகத்தை அரசியல் விஷயங்களுக்காகப் பயன்படுத்தி, பிளவு ஏற்படுத்துபவர்களுக்கு எந்த வகையிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது.
மேலும் நமது நாடுகளின் இறையாண்மை, ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் சக்திகளை சகித்துக் கொள்ள முடியாது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவது என பிரதமர் ட்ரூடோ -வும் நானும் ஒப்புக்கொண்டிருக்கிறோம். நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஏற்கெனவே சந்தித்திருக்கிறார்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்துழைப்பு செய்வதற்கான வரையறைகளை அவர்கள் இறுதி செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே,
நமது பொருளாதார உறவுகள் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்தோம். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இந்தியாவின் வேகமான மற்றும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும், பொருளாதார சீர்திருத்தங்களும், நிறைய வாய்ப்புகளுக்கு இடம் தரும் வகையில் உள்ளன. இந்தியாவின் கட்டமைப்பு மேம்பாட்டில், கனடாவின் ஓய்வூதிய நிதி தொடர்ந்து வலிமையான பங்களிப்பு செய்து வருகிறது.
நமது பொருளாதார பங்கேற்புகளுக்கு நிறுவனம் சார்ந்த நடைமுறையை உருவாக்க வேண்டியது அவசியம். இந்த வகையில், இருதரப்பு முதலீடு மற்றும் ஊக்குவிப்பு ஒப்பந்தமும், விரிவான பங்கேற்பு ஒப்பந்தமும் உருவாக்கி இறுதி செய்யும் முயற்சிகளை இரட்டிப்பு வேகத்தில் மேற்கொள்ளுமாறு நமது பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
இன்றைக்கு இரு நாடுகளின் CEO-க்களுடன் பேசுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்திய மாணவர்களுக்கு உயர் கல்விக்கான முக்கிய தலமாக கனடா இருக்கிறது. இன்றைக்கு, ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய மாணவர்கள் கனடாவில் உள்ளனர். இன்றைக்கு புதுப்பிக்கப்பட்டுள்ள உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்வதற்கான வசதிகளை அளிக்க உதவிகரமாக அமையும்.
தொழில்திறன் பயிற்சி பெற்ற தொழில் நிபுணர்கள் செல்வதை அதிகரிக்கும் வகையிலும், அவர்களுடைய இடம்பெயர்தலுக்கு வசதி செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் ட்ரூடோ -வை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதன் மூலம் நமது இரு நாடுகளும் பயன்பெறும். போட்டிகளை சமாளிக்கும் வகையில் கனடாவின் பொருளாதாரத்தை மேலும் மாற்றுவதாகவும் இருக்கும்.
நமது தொழில்நுட்ப பங்களிப்பில் தாராளமான வாய்ப்புகள் உள்ளன. நமது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முறைமைகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். கனடா மற்றும் இந்தியா என இரு நாடுகளிலும் இது ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும். 2017 தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கனடா பங்களிப்பு நாடாக இருந்தது. தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நமது அரசுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
மின்சார சூப்பர் பவர் நாடாக கனடா இருந்து வருகிறது. அதிகரித்து வரும் நமது மின்தேவையை சமாளிக்க கனடாவால் உதவ முடியும். மின்துறை பேச்சுவார்த்தையை விரிவுபடுத்தவும், எதிர்கால மின்துறை பங்களிப்புக்கு எதிர்கால வரையறையை உருவாக்கவும் இன்றைக்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
தடையின்றி யுரேனியம் வழங்கும் செயல்பாட்டின் மூலம், அணுசக்தித் துறையில் நமது ஒத்துழைப்பின் வலிமை பிரதிபலிக்கப்படுகிறது. இன்றைக்கு நமது ஒத்துழைப்பில் அணுசக்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைச்சிந்தனை ஆகியவற்றை நாம் சேர்த்திருக்கிறோம்.
நண்பர்களே,
நானும் பிரதமர் ட்ரூடோ அவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய சூழல் குறித்த சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டோம்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கும், அமைதியான, பாதுகாப்பான, வளமையான மற்றும் ஜனநாயகமான ஆப்கானிஸ்தானை உருவாக்கவும் அந்த அரசுக்கு உதவி செய்ய வேண்டிய தெளிவான தேவை உள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கடல் பயணம், வடகொரியாவில் ஆயுதப்பரவல் விஷயங்கள், மாலத்தீவுகளில் ஜனநாயகப்பூர்வ அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட விஷயங்களில் எங்களுடைய கருத்துகள் ஒரே மாதிரியாக இருந்தன.
மூன்றாம் நிலை நாடுகளில் அமைதியை உருவாக்குவது மற்றும் திறன் வளர்ச்சிக்கு சிறப்புக் கவனம் செலுத்துவதற்கான ஒத்துழைப்பை பலப்படுத்துவது என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
நண்பர்களே,
நமது போர்த்திறன்சார்ந்த பங்களிப்புகளில் நபர் சார்ந்த தொடர்புதான் உறுதியான அடித்தளமாக இருக்கிறது.
கனடாவில் இந்திய சமூகத்தவர்களின் பங்களிப்பு குறிப்பு இந்தியா பெருமை கொள்கிறது. இந்தப் பயணத்தில் அவர்களில் பலரை பிரதமர் அழைத்து வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தவருடன் நட்பு மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு அவர்கள் தீவிர பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
திரு. பிரதமர் அவர்களே,
நன்மதிப்புகள் பரவியிருப்பதில் இந்தியாவும் கனடாவும் இயல்பான பங்காளர்களாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பங்களிப்பு ஏற்பட வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறேன்.
நன்றி.
(Release ID: 1521676)
Visitor Counter : 215