பிரதமர் அலுவலகம்

எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 23 FEB 2018 9:17PM by PIB Chennai

புதிய பொருளாதாரம் - புதிய விதிகள் என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டு, புதுடெல்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மத்திய அரசு பொறுப்பேற்று இன்னும் சில மாதங்களில் நான்கு ஆண்டுகளைப் நிறைவு செய்யப் போகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நிச்சயமான மாற்றங்கள் இப்போது வெளியில் தெரிகின்றன என்று கூறினார். பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், புதிய இந்தியா மற்றும் புதிய பொருளாதாரத்துக்கு புதிய விதிகளின் அவசியத்தைக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், ``எளிதில் சரியக்கூடிய ஐந்து'' பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்து, ``ஐந்து டிரில்லியன் டாலர்'' பொருளாதாரமாக மாறுதல் என்ற இலக்கை நோக்கி மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சியில், இந்தியா எந்த வகையில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அடையாளப்படுத்திக் காட்டும் வகையில் புள்ளிவிவரங்களை பிரதமர் முன்வைத்தார். உலக GDP-யில் 2013-ல் 2.4% ஆக இருந்த இந்தியாவின் பங்களிப்பு 2017-ல் 3.1% ஆக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு பெரிய பொருளாதார குறியீடுகளில் இந்தியாவின் செயல்பாடு நன்றாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய அணுகுமுறை மற்றும் புதிய பணி கலாச்சாரத்தால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் போட்டிகளை எதிர்கொள்ளும் தன்மையை ஒட்டுமொத்த உலகமே இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த உலக தொழில் மாநாட்டில் கடைசியாக தாம் கலந்து கொண்டபோது, ஜி.எஸ்.டி. என்பது, அறிமுக வாய்ப்புள்ள நிலையில் இருந்ததாக திரு. நரேந்திர மோடி நினைவுபடுத்தினார். இன்றைக்கு, அது அமலாகிவிட்டது, அதனால் நல்ல வரி செலுத்தும் முறைமை அமலுக்கு வந்து, நல்ல வருவாய் முறைமை அமலாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். திவால் மற்றும் நொடிப்புநிலை விதிமுறைகள் சீர்திருத்தம் போன்ற மற்றவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசின் முயற்சிகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதில், வேகம், அளவுகோல் மற்றும் உணர்வுப்பூர்வ செயல்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன என்றார் அவர். கட்டமைப்புத் துறையில் வேகமான செயல்பாடுகளுக்கு சில உதாரணங்களையும் அவர் கூறினார்.

கட்டமைப்பு, வேளாண்மை, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது முதலீடுகள் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்திரதனுஷ் திட்டம், ஜன மருந்து (அவுஷாதி) விற்பனை மையங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற முயற்சிகள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், 100 கோடி வங்கிக் கணக்குகள், 100 கோடி ஆதார் அட்டைகள் மற்றும் 100 கோடி செல்போன்கள் என மூன்று விஷயங்கள் இணைந்திருப்பதால், உலகில் வேறு எங்கும் கண்டிராத வகையில், தனித்துவமான சூழல் உருவாகியிருப்பதாகக் கூறினார். எம்.எஸ்.எம்.இ. துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பற்றியும் அவர் பேசினார்.

எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் கடந்த முறை உரையாற்றியபோது, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு, அனைவருக்கும் சுகாதார வசதி, அனைவருக்கும் காப்பீடு பற்றி தாம் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். வீடுகள் கட்டுதல், சவுபாக்யா திட்டம், உஜ்வாலா திட்டம் மற்றும் காப்பீட்டுத்திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். ஏழைகளுக்கு அதிகாரம் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசு முயற்சிகள் எடுப்பதாகக் கூறிய அவர், கழிவறைகள் கட்டுதல், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்குதல், மண்வள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பையும் பிரதமர் கூறினார்.

பல்வேறு நிதி அமைப்புகளில் விதிகள் மற்றும் நன்னெறிகளை அமல் செய்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு பொறுப்பில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார். நிதிசார்ந்த விஷயங்களில் முறைகேடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். மக்களின் பணத்தை சட்டவிரோதமாக சேர்த்துக் கொள்வதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார். ``புதிய பொருளாதாரம் - புதிய விதிகள்'' என்பதன் தாரக மந்திரம் இதுதான் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
 

*****



(Release ID: 1521675) Visitor Counter : 149


Read this release in: English