குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திரைப்படங்கள் சமுதாய ஒற்றுமையை மேம்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக இருக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2018 6:09PM by PIB Chennai

திரைப்படங்கள் சமுதாய ஒற்றுமையை மேம்படுத்துவதுடன்  மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளாக திகழ வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி ஆகியவற்றை ஜனரஞ்சக அம்சங்கள் குறையாமல் மேம்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  சென்னையில் இன்று திரு. பி. நாகிரெட்டி குறித்த நூல் மற்றும் அவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு அவர் உரையாற்றினார்.  தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்,  உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே. பி. அன்பழகன், தமிழ்நாடு  தலைமை அஞ்சல் துறை அலுவலர் திரு. எம். சம்பத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திரு. நாகிரெட்டி புகழ்பெற்ற பத்திரிகை வெளியீட்டாளராக, வெற்றிகளை குவித்த திரைப்படத் தயாரிப்பாளராக, கொடையாளராக, சிறந்த மனிதநேயராக திகழ்ந்தார் என்று குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.  நாகிரெட்டியின் மிக வெற்றிகரமான திட்டங்களில், 1947 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய ‘சந்தமாமா‘ எனும் குழந்தைகள் பத்திரிகை என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.  பார்வையற்ற வாசகர்களுக்காக சந்தமாமாவை பிரைல் வடிவத்தில் நான்கு மொழிகளில்  வெளியிட்டது அவரது மனிதநேயத்தைக் காட்டுவதாகும் என்றும் திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

ஊழல், சாதிவெறி, மதுப்பழக்கம், போதைப்பழக்கம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலினப் பாகுபாடுகள், பிரபுத்துவம், மதம் அல்லது சித்தாந்த ரீதியிலான தீவிரவாத அபாயம் ஆகிய தீமைகளுக்கு எதிராக திரைப்படத் துறையினர் குரல் எழுப்பவேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். சமுதாயத்தில் நடப்பவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திரைப்படங்கள் இருக்கின்றனவா என்று தங்களுக்குத் தாங்களே திரைப்படத்துறையினர் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  வன்முறை, குற்றச் செயல்கள், ஆபாசம் இல்லாமல் முற்றிலும் தெளிவான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது என்ற எண்ணுவது முற்றிலும் தவறானதாகும் என்று அவர் கூறினார். 

திரைப்படங்கள் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், வன்முறை மற்றும் ஆபாசத்தை பொழுதுபோக்கு என்ற பெயரில், தேவையில்லாமல் திணிக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியறுத்தினார்.  திரைப்படங்கள் மிக வலுவான தகவல் தொடர்பு சாதனம் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று அவர் தெரிவித்தார்.  வன்முறை, சகிப்புத்தன்மையின்மை குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், நற்செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரிக்கும் மிகப்பெரிய பொறுப்பு திரைப்படத்துறையினருக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1521575) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: English