அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுத்தமான எரிசக்தி உற்பத்திக்காக இந்திய விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்

Posted On: 22 FEB 2018 5:43PM by PIB Chennai

எதிர்காலத்தில் சூரிய சக்தி மின்திட்டம் உள்பட அனைத்து வகை மின் உற்பத்தித் திட்டங்களிலும் சுத்தமான மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான அதிநுட்ப கார்பன்-டை-ஆக்ஸைடு சார்ந்த ப்ரெய்ட்டன் சுழற்சிச் சோதனை வசதியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். (ப்ரெய்ட்டன் சுழற்சி என்பது ஒருவித வெப்ப இயக்கச் சுழற்சியாகும்). இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தினர் (Indian Institute of Science) கண்டறிந்துள்ளனர்.

அடுத்த தலைமுறைக்கான மின்சார உற்பத்தியில் திறன்மிக்க, கச்சிதமான, நீரில்லாத அதிநுட்ப கார்பன்-டை-ஆக்ஸைடு சார்ந்த ப்ரெய்ட்டன் சுழற்சிச் சோதனை நடத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். அத்துடன் சூரிய சக்தியைக் கொண்டு இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்வதும் உலகிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொழில்நுட்ப வசதியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக (IISc) வளாகத்தில் இன்று (2018 பிப்ரவரி 22) தொடங்கிவைத்தார்.

“இந்த முக்கிய ஆராய்ச்சி இந்தியாவின் மின்சாரத் தேவையை ஈடுசெய்வதில் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தும். அதிலும் குறைந்த செலவில் அதிக திறனுடன் மின் உற்பத்தி செய்ய இத்தொழில்நுட்பம் பெரிதும் துணைபுரியும். நமது மின்சாரப் பாதுகாப்புக்கு மிகமிக அவசியமான ஆராய்ச்சி, மேம்பாடு, செயல்கள், நுட்பங்கள், உற்பத்தி ஆகியவற்றில் நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மேலும் பேசுகையில், “சுத்தமான நிலக்கரியை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடத்த இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மையம் தொடங்கப்படும்” என்று அறிவித்தார்.

“இந்த அறிவியல் ஆய்வுக்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 500 கோடியை முதலீடு செய்துள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

<><><><>


(Release ID: 1521527)
Read this release in: English