பிரதமர் அலுவலகம்
இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப் பண்பு உச்சிமாநாடு – 2017-ல் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
Posted On:
30 NOV 2017 6:07PM by PIB Chennai
சோபனா பாரதிய ஜி,
இங்குக் கூடியிருக்கும் முக்கிய பிரமுகர்களே,
சகோதரர்களே, சகோதரிகளே,
மீண்டும் ஒருமுறை உங்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இங்கு எனக்கு நான் பரிச்சயமான பல முகங்களை காணுகிறேன். என்னை மீண்டும் இங்கு அழைத்ததற்காக இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்திற்கும், அதன் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இரண்டாண்டுகளுக்கு முன்பு, உச்சிமாநாட்டில் நான் கலந்துகொண்டபோது, "ஒளிமயமான இந்தியாவை நோக்கி" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டாண்டுகளில் நாம் "இந்தியாவின் மீளா எழுச்சி" என்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். தலைப்பில் மட்டும் மாற்றமில்லை. நாட்டின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தையும் இது பிரதிபலிக்கிறது. இந்த மாற்றம் நமது நாட்டின் நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது.
இந்த நாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் முழுமையாகப் பார்த்தோமானால் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடியும். இதுபோன்ற ஒரு நிலை முன்பு எப்போதும் இருந்ததில்லை. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சுரண்டப்பட்ட, வறிய மக்கள் ஆகியோரிடம் தங்கள் திறன், வளம், கனவுகள் குறித்து ஒருவிதமான நம்பிக்கையைத் தற்போது பெற்றிருப்பது போல முன்பு எப்போதும் நான் கண்டதில்லை.
125 கோடி இந்தியர்களும் அல்லும்பகலும் அயராது பாடுபட்டதால்தான் இந்த நம்பிக்கையைக் கொண்டுவர முடிந்துள்ளது. மக்களுக்குத் தங்கள் மீதும், நாட்டின் மீதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கையே நாடு எழுச்சியுறுவதற்கான சூத்திரமாகும்.
இன்று கீதை ஆண்டு தினமாகும், இது கீதையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘உத்தாரத் ஆத்மனா ஆத்மனம் நா ஆத்மனனம் அவசத்யெத் ஆத்மேவ்-ஆத்மனோ பந்து ஆத்மேவ் ரிபுர் ஆத்மனா.’
தயவுசெய்து உங்களது நிலையை உயர்த்துங்கள், எதிர்மறையான சிந்தனைகளைத் தவிருங்கள்.
உங்களுக்கு நீங்களே நண்பர், உங்களுக்கு நீங்களே எதிரி.
அதனால்தான் புத்த பகவான் இதைகூடச் சொல்லியிருந்தார்.
‘அப்பா தீபோ பவ்’ - இதன் பொருள் நீங்களே உங்களுடைய விளக்கு ஆக வேண்டும்.
125 கோடி மக்களின் அதீத நம்பிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
இந்த ஹோட்டலுக்கு வெளியே ஆட்டோ ஓட்டுபவர்களாக இருந்தாலும், ரிக்ஷா இழுப்பவர்களாக இருந்தாலும், வயலில் உடைப்பெடுத்த வரப்புகளைச் சரிசெய்பவர்களாக இருந்தாலும், கடும் பனியில் காவல் வேலை பார்த்து விட்டு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருப்பவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் தவறாமல் செய்து வருவதை இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் அறிவோம். அவர்களது கடும் உழைப்பால்தான் ஒளிமயமான இந்தியாவை நோக்கி என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவின் மீளா எழுச்சி என்பது பற்றி நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
2014 ஆம் ஆண்டில் மக்கள் வெறும் அரசு மாற்றத்திற்காக மட்டும் வாக்களிக்கவில்லை. நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வாக்களித்தனர். அமைப்பு ரீதியில் நிலையான, நிரந்தரமான மீளா மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக வாக்குகள் அளிக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், நமது அமைப்பின் பலவீனம் நமது நாட்டின் வெற்றிக்குத் தடையாக இருந்துவந்துள்ளன.
நடைமுறையில் இருந்த அமைப்பால் நாட்டுக்குத் தேவையான நியாயத்தை வழங்க இயலவில்லை. எல்லா இடத்திலும் சிலர் இந்த அமைப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். எனது தனி முயற்சியால் மட்டுமின்றி, எனது உறுதிப்பாட்டாலும் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இடையிலான போராட்டம் நின்றிருக்கிறது. மீளமுடியாத மாற்றத்தை மக்களின் வாழ்க்கையில் நாம் கொண்டு வந்திருக்கிறோம். அவர்கள் தங்களது வாழ்க்கையை எளிதாக வாழ வகை செய்திருக்கிறோம்.
அதனால்தான் ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுக்களைப் பெறுவது, சமையல் எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகளைப் பெறுவது, மருத்துவமனையில் நோயாளிகளைச் சேர்ப்பது, பாஸ்போர்ட் பெறுவது, வருமான வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்வது போன்ற சின்னச்சின்ன விஷயங்களுக்கான சிரமங்களை மக்கள் பொருட்படுத்துவதில்லை.
நண்பர்களே, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிக்கு ஏற்ற சுற்றுச்சூழல் முறை ஆகியவையே இந்த அரசின் மிக முக்கிய முன்னுரிமைகளாகும். கொள்கைகள், தொழில்நுட்பம், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இத்தகைய சுற்றுச்சூழல் அமைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் கசிவுகளும் முறைகேடுகளும் குறையும்.
ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றி முன்பு யாரும் சிந்திக்காத நிலையில், அவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட ஜன்தன் திட்டம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் வங்கிகளின் கதவு அருகில் கூட நிற்கவிடாமல் அவமரியாதையுடன் நடத்தப்பட்ட ஏழைமக்கள் இன்று தங்களுக்கு எனச் சொந்த வங்கிக்கணக்குகளை வைத்துள்ளனர். ஜன்தன் வங்கிக்கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 125 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் 30 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஜன்தன் வங்கிக்கணக்குகள் உள்ளன.
ஏழை மனிதர் ஒருவர் தனது பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும்போதும், ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்தும் போதும், அவருக்கு ஏற்படும் தன்னம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்தத் தன்னம்பிக்கை, இந்தத் தைரியம், இப்போது நிரந்தரமாக உள்ளது. இதை ஒருவராலும் மாற்றமுடியாது.
உஜ்வாலா திட்டமும் இதுபோன்றதுதான். இது கிராமப்புறங்களைச் சேர்ந்த மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியுள்ளது. அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கிடைத்ததால் மட்டும் இந்த மாற்றம் ஏற்படவில்லை. பாதுகாப்பு, ஆரோக்கியம், குடும்பத்திற்கு ஒதுக்க நேரம் ஆகியவை அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் பயனாக லட்சோப லட்சம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது பற்றி எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். அரசு கழிவறைகளைக் கட்டியதால் மட்டும் மாற்றம் வந்து விடவில்லை. லட்சக்கணக்கான பெண்களும், நமது புதல்வியரும் மாலைப் பொழுது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்பட்ட மனவலியில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சிலர் மோசமான முறையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டும், இதுபற்றி எழுதுவதைத் தொடர்ந்து கொண்டும், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டும் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை இந்த இயக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
சகோதரர்களே, சகோதரிகளே, இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு இதனுடன் தொடர்பு இருக்கும் என்று தெரியவில்லை. இங்கிருந்து போகும்போது சிலர் வண்டி நிறுத்துவதற்கான கட்டணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதைவிடக் குறைந்த தொகைக்கு ஏழை எளிய மக்கள் காப்பீடு செய்துகொள்ள முடியும். மாதத்திற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக விபத்து காப்பீடு அளிக்கப்படுவதையும், நாளொன்று 90 பைசா பிரிமியத்தில் ஆயுள் காப்பீடு வழங்கப்படுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசின் இந்தத் திட்டங்களில் 15 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் இன்று சேர்ந்துள்ளனர். இந்த்த் திட்டங்களின் கீழ், சுமார் ரூ.1,800 கோடி தொகை ஏழை மக்களின் காப்பீட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு நிதியை வேறு எந்த அரசாவது வழங்கியுள்ளதா? அது ஒரு வரம் அல்லவா.?
இது போன்றதொரு முக்கியமான விஷயம் ஏழை மக்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்பு இதில் யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. தற்போது இது நனவாகியுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு அடுத்த விஷயத்திற்குச் செல்கிறேன். அடுத்த ஒரு உதாரணம் எல்.ஈ.டி பல்பு. முந்தைய ஆட்சிக்காலத்தில் இதன் விலை ரூ.300 முதல் ரூ.350 என இருந்தது. ஆனால் தற்போது நடுத்தர வகுப்புக் குடும்பத்திற்குச் சுமார் ரூ.50-க்கு இது கிடைக்கிறது. உஜாலா திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் சுமார் 28 கோடி எல்.ஈ.டி குமிழ்கள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் பயனாக மக்களின் பணம் ரூ.14,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேமிப்பு அல்லது மின்சாரக் கட்டணக் குறைப்புடன் முற்றுப்புள்ளி வைக்கப் போவதில்லை. இதுவொரு தொடர்ச்சியான சேமிப்பாகவே இருக்கும். தற்போது இது நிரந்தரமாகியுள்ளது.
சகோதர, சகோதரிகளே, முந்தைய அரசுகள் இதைச் செய்வதை யார் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும், அமைப்பு ரீதியில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்த நாட்டின் நலன்கருதி நாங்கள் முடிவு எடுப்பதை யாரும் தடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.
இந்த நாட்டை மந்திரக்கோல் மூலம் உடனடியாக மாற்ற முடியாது என்று சிலர் எண்ணம் கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் அவநம்பிக்கையும், விரக்தியும் நிறைந்துள்ளது. இந்த அணுகுமுறை புதிதாகவோ, புதுமையாகவோ எதையும் செய்வதைத் தடுத்து வந்துள்ளது.
இந்த அணுகுமுறை முடிவுகள் எடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கிறது. எனவே, இந்த அணுகுமுறையை இந்த அரசு அடியோடு மாற்றியுள்ளது. உதாரணமாக, யூரியாவில் வேப்பெண்ணெய் கலந்து கொடுப்பது போன்றதாகும் இது. முந்தைய ஆட்சிக் காலத்தில் யூரியாவில் 35 சதவீதம் வேப்பெண்ணெய் கலக்கப்பட்டது. இது பயனற்றது என்பது முழு அமைப்புக்கும் தெரிந்தே இருந்தது. யூரியாவை இவ்வாறு கொடுப்பதைத் தடுக்க வேண்டுமானால் நூறு சதவீத வேப்பெண்ணெய் கலப்பைச் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த முடிவை ஏற்கனவே எடுக்கவில்லை.
சகோதர, சகோதரிகளே, 100 சதவீத வேப்பெண்ணெய் கலக்கும் முடிவு யூரியாவைத் திசைமாற்றம் செய்வதை நிறுத்தியதுடன் அதன் திறனை அதிகப்படுத்தியது. தற்போது விவசாயிகள் தங்களது நிலங்களுக்குக் குறைந்த அளவு யூரியா பயன்படுத்தினாலே போதும். குறைந்த அளவு யூரியா பயன்படுத்தினாலும் உற்பத்தி அதிகரித்துள்ளதைக் காண வேண்டும்.
இதேபோல, எந்த கிராமத்து விவசாயியாக இருந்தாலும் தனது உற்பத்திப் பொருளை, நாம் உருவாக்கிவரும் டிஜிட்டல் தளத்தின் மூலம் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். நாட்டில் மிகப்பெரிய அமைப்பு ரீதியிலான மாற்றமாக இது இருக்கப் போகிறது. மின்னணு தேசிய விவசாயச் சந்தை எனும் ஈ-நாம் மூலம் இந்த்த் தளத்தின் வாயிலாக 450-க்கும் மேற்பட்ட சந்தைகள், ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தத் தளம் விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்தவும், அதன்மூலம் அவர்களுக்கு அதிகவிலை கிடைக்கவும் உதவும்.
அண்மையில் விவசாயத் துறையில் கிஷான், சம்பதா திட்டம் என்னும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. நாட்டில் உணவுச் சேமிப்பு மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துவதற்காக இது செயல்படுத்தப்படவுள்ளது. எளிதில் அழுகும் தன்மை கொண்ட விவசாயம் மற்றும் தோட்டக் கலை விளை பொருட்கள் சந்தைக்கு வரும் முன்னே கெட்டுப் போவதை தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு உணவுப் பதப்படுத்துதல் துறையை வலுப்படுத்தி வருகிறது. அதனால், விவசாயின் நிலமும் ஒரு தொழிற்சாலையைப் போல இயங்க முடியும்.
உணவுப்பூங்காக்களை ஏற்படுத்தவும், உணவுப்பதப்படுத்துதல் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், வேளாண் செயல்முறை பிரிவில் முழுமையான கட்டமைப்பை உருவாக்கவும், அரசு ரூ.6,000 கோடிக்கும் மேல் செலவு செய்யவுள்ளது.
சகோதர, சகோதரிகளே, காலத்திற்கு ஏற்ப இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விலைப் பொருட்களின் தேவை சீராக அதிகரித்துவருகிறது. சிக்கிம் மாநிலத்தைப் போல நாட்டின் பல்வேறு மாநிலங்கள் 100 சதவீத இயற்கை விவசாயம் செய்யும் திறன் கொண்டவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் இதற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக 10 ஆயிரம் தொகுப்புகளை உருவாக்கி இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை வகுக்க அரசு பரிசீலித்து வருகிறது.
அண்மையில் நாம் ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். சகோதர, சகோதரிகளே, இதுவரை மூங்கில் சட்டப்படி ஒரு மரமாகக் கருதப்பட்டு வந்தது. இதன்காரணமாக, மூங்கிலை அறுவடை செய்வது விவசாயிகளுக்கு மிகக் கடினமான காரியமாக இருந்துவந்தது. இப்போது மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை அரசு எடுத்து விட்டது.
தொலைதூரங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு இது பயனளிக்கக்கூடியதாகும். குறிப்பாக, மூங்கில் சாமான்கள் மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள வடகிழக்கு மாநில விவசாயிகளுக்கு இந்த முடிவு பலனளிக்கக்கூடியதாகும். முந்தைய அரசு நிறைவேற்றிய சட்டங்களில் மூங்கில் ஒரு மரமாக கருதப்படவில்லை என்பது வியப்பளிக்கக்கூடியதாகும். 10, 12 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்தக் குழப்பம் அகற்றப்பட்டுள்ளது.
நண்பர்களே, எங்கள் அரசில் முழுமையான அணுகுமுறையுடன் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் தேவையைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முடிவுகள் முன்பு எடுக்கப்பட்டதில்லை. அதனால்தான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முன்பு கவலை அடைந்தவராக இருந்துள்ளார். உள்ளார்ந்த பிரச்சினைகளில் இருந்து நாடு விடுபட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அத்துடன் புதிய அமைப்புகள் உருவாக வேண்டும் என்றும் விரும்பினார்கள்.
சகோதர, சகோதரிகளே, நாட்டின் முந்தைய அமைப்பு ஊழலை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உருவாக்கியது. நாட்டின் ஒவ்வொரு துறையையும் கறுப்புப்பணம் கட்டுப்படுத்தி வந்தது. 2014 ஆம் ஆண்டில் 125 கோடி இந்தியர்கள் இந்த அமைப்பை மாற்றுவதற்காக வாக்களித்தனர். நாட்டைத் தடுத்து நிறுத்தும் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்காக அவர்கள் வாக்களித்தனர். புதிய இந்தியாவை படைக்க அவர்கள் வாக்களித்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டில் மக்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் உணரலாம். சுதந்திரத்திற்குப் பின்னர் முதன்முறையாகக் கறுப்புப் பணத்தை வைத்திருந்த ஊழல் பேர்வழிகள் அதைப் பரிவர்த்தனை செய்ய அஞ்சினர். தாங்கள் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கு முன்பு இணைப் பொருளாதாரமாக இருந்துவந்த கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் முறையான பொருளாதாரமாக மாறியது.
வங்கிகளுக்குத் திரும்ப வந்து சேர்ந்த இந்தப் பணம், அதனுடன் சான்று ஆவணங்களையும் கொண்டுவந்தது மிக முக்கிய விஷயமாகும். இதன் மூலம் நாட்டுக்குக் கிடைத்துள்ள தகவல் பொக்கிஷம் போன்றதாகும். இந்தத் தகவல்களின் உதவியுடன் ஆராய்ந்தபோது அந்நாட்டில் 400, 500 நிறுவனங்கள் ஒற்றை முகவரியில், ஒற்றை நிறுவனமாக இயங்கிவந்ததும், அவற்றுக்கு இரண்டாயிரம் வங்கிக் கணக்குகள் வரை இருந்ததும் தெரியவந்தது. இது புதிராக இல்லையா? ஒருபக்கம் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஏழைமக்கள் பிரச்சினையைச் சந்தித்து வந்தனர். மறுபக்கம் இந்த நிறுவனங்கள் ஓராயிரம் கணக்குகளை எளிதாகத் தொடங்க முடிந்தது.
இந்த கணக்குகளில் செய்யப்பட்ட அனைத்து முறைகேடுகளும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை இத்தகைய சுமார் 2.25 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் எந்த நிறுவனத்திற்கும் இயக்குநராக முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, இந்த நடவடிக்கை நாட்டில் ஆரோக்கியமான. வெளிப்படையான நிறுவன கலாச்சாரத்தை வலுப்படுத்த உதவும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பைச் செயல்படுத்துவதும், நாட்டின் பொருளாதாரத்தைத் தூய்மைப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறையின் பலவீனங்களையும். வணிகம் புரிவதில் ஏற்பட்ட கட்டாயங்களையும் பின்னுக்குத்தள்ளி தற்போது நாடு பீடுநடை போடுகிறது.
ஜிஃஎஸ்.டி மூலம் நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நடைமுறையில் மேலும் மேலும் வணிகர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். நண்பர்களே. மற்றுமொரு திரும்பப் பெற முடியாத மாற்றம் ஆதார்எண் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசின் விருப்பத்தை நடைமுறைப்படுத்தும் வலுவான விஷயம் ஆகும்.
மானிய விலை ரேஷன் பொருட்கள், கல்வி உதவித் தொகைகள், மருந்துச் செலவுகள், ஓய்வூதியம் ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் மானியம் ஆகியவற்றை உறுதி செய்வதில் ஆதார் மிகச் சிறப்பான முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. செல்போன் மற்றும் ஜன்தன் வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் நடைமுறையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. இத்தகைய அமைப்பு முறை திரும்பப் பெற முடியாததாகும்.
ஆதாரின் உதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சோப லட்சம் போலிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது பினாமிச் சொத்துக்களுக்கு எதிராக இது மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறவிருக்கிறது.
சகோதரர்களே, சகோதரிகளே, இந்த அரசு பழைய பொது கொள்முதல்முறையை அடியோடு மாற்றியுள்ளது. தற்போது அரசு மின்னணுச் சந்தை என்ற பெயரில் புதிய முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்த முறையின் வாயிலாக, ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவதையும் பொதுக் கொள்முதலை மேற்கொள்வதையும் தற்போது அரசு செய்து வருகிறது. தற்போது குடிசைத் தொழில் உரிமையாளர்கள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் வீட்டில் இருந்தபடியே பொருட்களைத் தயாரிப்பவர்கள் ஆகியோர் தங்களது உற்பத்திப் பொருட்களை இந்த முறையின் மூலம் விற்பனை செய்துகொள்ள முடியும்.
சகோதரர்களே, சகோதரிகளே, நமது அமைப்பு முறையில் இருந்த பலவீனம் காரணமாகக் கருப்புப் பணத்தை உருவாக்கும் வாய்ப்புகள் தற்போதைய அமைப்பு மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டு நாம் முன்நோக்கிச் செல்கிறோம்.
நாட்டில் வாங்குவதும், விற்பதும், நிதிப் பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை எப்போது தொழில்நுட்பம் சார்ந்த டிஜிட்டல் முறைக்கு மாறுகிறதோ அப்போது ஊழல் அநேகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். இதனை ஏற்படுத்த அரசியல் ரீதியில் ஒரு விலையைக் கொடுக்க வேண்டுமென்பதை நான் அறிவேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
நண்பர்களே, திட்டங்கள் எப்போது வேகம் பெறுகிறதோ அப்போதுதான் நாடு முன்னேற்றம் காணும். சில காரணங்களால் ஏராளமான அரசுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அதே வளங்கள், அதே உபகரணங்கள்தான் உள்ளன. ஆனால் துரித கதியில் பணிகள் நடக்கின்றன. அதிகாரிகள் மட்டத்தில் புதிய பணிக் கலாச்சாரத்தை அரசு உருவாக்கியதால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இது அதிகாரிகளை மிகவும் பொறுப்புடையவர்களாக மாற்றியுள்ளது.
இந்த மாற்றம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் முந்தைய ஆட்சியில் இந்தத் தூரம் 11 கிலோ மீட்டராக இருந்தது.
முந்தைய ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், 1100 கிலோ மீட்டருக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 2100 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், 2500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. தற்போது கடந்த 3 ஆண்டுகளில் 4300 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், மூலதனச் செலவு சுமார் ரூ. 1.49 லட்சம் கோடிக்குச் செய்யப்பட்டிருந்தது. இந்த அரசின் 3 ஆண்டுகளில் சுமார் ரூ.2.64 லட்சம் கோடிக்கு மூலதனச் செலவு ஆகியுள்ளது.
முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் புதிய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறன் அதிகரிக்கப்பட்டது. இந்த ஆட்சியின் 3 ஆண்டுகளில் மொத்தம் 22 ஆயிரம் மெகாவாட் புதிய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறன் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
கப்பல் தொழில் வளர்ச்சியை ஒப்பிட்டால் கடந்த ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக இருந்தது. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் கப்பல் தொழில் 11 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நண்பர்களே, அடிமட்டத்தில் குறைகளைக் களையா விட்டால் நம்மால் இத்தகைய உத்வேகத்தைக் கொடுப்பது எப்படி சாத்தியமாகும்?
அரசால் இந்த முடிவுகளை எடுத்திருக்க முடியுமா? இல்லை இத்தகைய பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. முழு அமைப்பையும் பழுது நீக்க வேண்டியது அவசியமாகும். இந்த மாற்றங்களைச் செய்து முடித்ததால்தான் தொழில் புரிய ஏதுவான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 142-வது இடத்தில் இருந்து 100-வது இடத்திற்கு நம்மால் முன்னேற முடிந்தது.
சகோதர, சகோதரிகளே, 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது எங்களுக்கு முந்தைய அரசு மூலம் என்ன கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். பொருளாதாரம், நிர்வாகம், நிதி நிலை, வங்கி நடைமுறை ஆகிய அனைத்தும் மோசமான நிலையில் இருந்தன. இது பற்றிச் சில வார்த்தைகளில் குறிப்பிடுவதாக இருந்தால் கொள்கை முடக்கம் என்று நீங்கள் குறிப்பிட வேண்டியிருந்தது.
நமது நாடு ஐந்து துண்டுகளாக உடைந்திருந்ததைக் கற்பனை செய்து பாருங்கள். உலகில் அநேக நாடுகள் தங்களது பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தன. ஆனால் இந்த ஐந்து பேரும் மூழ்கப் போவதுடன் மற்றவர்களையும் அதில் இழுத்துவிடுவார்கள்.
தற்போது உலகளவில் இந்தியாவின் நிலை என்ன? இது பற்றி உங்களுக்கு வெகுவாகத் தெரியும். பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நாடாக இருந்தாலும் இந்தியாவுடன் தோளோடுதோள் சேர்ந்து நடக்க விரும்புகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் இப்போது நாம் நிற்க தேவையில்லை. நமது பயணம் தொடர்ந்துவருகிறது.
நண்பர்களே, ஒரு நாடு தன்னம்பிக்கையுடன் எழுந்துநிற்கும் போது எந்தப் பிரச்சனையையும் ஒரு பொருட்டாக்க் கருத வேண்டியதில்லை. ஒரு நாடு தன்னம்பிக்கையுடன் பீடுநடை போடும்போது தனது உறுதிப்பாட்டையும் தன்னம்பிக்கையுடன் எடுத்து செல்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது இதனால் சாத்தியமாகியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத் தேர்தலில் இந்தியா பெற்ற வெற்றி ஒட்டு மொத்த உலகின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கிறது. சகோதர சகோதரிகளே, ஐநாவின் ஒருமித்த அங்கீகாரத்தை யோகா பெற்றபோது, மீளா எழுச்சியைக் காண முடிந்தது.இந்தியாவின் முன்முயற்சியுடன் சர்வதேசச் சூரியசக்தி கூட்டணி அமைக்கப்பட்டபோது இது பிரதிபலித்தது.
நண்பர்களே, நமது அரசு, ராஜதந்திரத்தை மனிதநேயத்துடனும், மனிதஉணர்வுகளுடனும் இணைத்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கியபோது இந்தியா முதல் நாடாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியக் கடற்படை முதலில் சென்றது. மாலத்தீவுகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டபோது, தண்ணீருடன் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்தது. ஏமனில் சிக்கல் ஏற்பட்டபோது, நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களைக் காப்பாற்றியதுடன் 48 நாடுகளைச் சேர்ந்த மேலும் இரண்டு ஆயிரம் பேரைப் பத்திரமாக வெளியேற்ற இந்தியா உதவியுள்ளது. இதனால்தான் இந்தியாவின் புகழும் நம்பிக்கையும் இப்போது பெருகியுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் பெருமித்ததுடனும். நம்பிக்கையுடனும் தலைநிமிர்ந்து நிற்க முடிந்துள்ளது.
இந்த முறை கேமரன் அரசு, இந்த முறை டிரம்ப் அரசு என்று கோஷம் எழுப்பப்பட்டது போல, இந்தியர்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்தது. சகோதர. சகோதரிகளே ஒவ்வொரு நிறுவனமும். ஒவ்வொரு சமுதாயமும். ஒவ்வொரு தனிநபரும் மாற்றங்களைக் கொண்டுவரும்போதுதான் நமது வலிமையைத் தெரிந்துக்கொள்ளவும் அதன் மூலம் புதிய இந்தியாவைப் படைக்கும் கனவு நனவாகும். இன்று நாட்டின் முன்னேற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் நம் முன்பு உள்ள தேவைகளையும். சவால்களையும் கருத்தில் கொண்டு உறுதி ஏற்க வேண்டும்.
நாடு தனது 75-வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டு வாக்கில் இந்த உறுதிமொழிகளை நாம் நிறைவேற்றி விட வேண்டும். மக்களாகிய உங்களுக்கு நான் எந்த அறிவுரையும் வழங்க முடியாது. ஆனால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூறியதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் கூறியுள்ளார்.
“நம்நாட்டில் உள்ள ஊடகங்கள் ஏன் இவ்வளவு எதிர்மறையாக உள்ளன? அப்படியானால் நமது சொந்தத் திறன் மற்றும் சாதனைகள் குறித்து நாம் தர்மசங்கடப்படுகிறோமா? நமது நாடு மிகப் பெரியது. நம்மிடம் பெரும் வெற்றிகளைக் குவித்த வியப்பூட்டும் வரலாறுகள் உண்டு. இருந்தும் அவற்றை நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம். ஏன் அப்படித் செய்கிறோம்”.
இதை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார். இது இப்போதும் பொருத்தமாக இருந்தால் அறிவார்ந்த மக்களாகிய நீங்கள் உங்களது செய்திஅறைகளில் இது பற்றி விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நீங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் திரும்பப் பெற முடியாதவையாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த்த் தளத்தில் இருந்து அனைத்து ஊடகத்தினருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். உங்களுக்கு நீங்களே உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அது மற்றவர்களை ஊக்குவிப்பதாக இருக்கட்டும். தூய்மை இந்தியா இயக்கத்தை உங்களுடைய சொந்த இயக்கமாகக் கருதிப் பரப்புரை செய்ததில் முக்கியப் பங்கை நீங்கள் ஆற்றியுள்ளீர்கள். அது போல இந்த உறுதிமொழிகளை வெற்றிகரமாக நனவாக்கும் பயணத்திலும் ஒன்று சேர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சொற்களுடன் எனது உரையை நான் நிறைவு செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காக இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்திற்கு மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
ஜெய்‘ஹிந்த்.
(Release ID: 1521441)
Visitor Counter : 383