பிரதமர் அலுவலகம்
மும்பையில் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ்வடிவம்
Posted On:
14 DEC 2017 11:01AM by PIB Chennai
மகாராஷ்டிரா ஆளுநர் திரு. வித்யா சாகர் ராவ், பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்நவிஸ், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் பாம்ப்ரே, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பிரான்ஸ் தூதர் திரு. அலெக்சாண்டர் ஜிகரல் மற்றும் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இதர விருந்தினர்கள், கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா, கடற்படையின் மேற்கு பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா, வைஸ் அட்மிரல் டி. எம். தேஷ்பாண்டே, மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ராக்கேஷ் ஆனந்த், கேப்டன் எஸ். டி. மென்டேல் மற்றும் கடற்படையின் இதர அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மசகான் கப்பல் கட்டும் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் குழுமியுள்ள அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய தினம் 125 கோடி இந்தியர்களுக்கும் ஒரு முக்கியமான தினம், இன்றைய நாள் நமக்குப் பெருமிதம் தரும் நாளாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தமைக்காக நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மங்கலமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் பெருமையளிக்கத்தக்கது. எனவே, நாட்டு மக்கள் சார்பிலும், இந்திய கடற்படைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கடற்படைக்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கிடைத்துள்ளது. கடற்படையில் ஐஎன்எஸ் கல்வாரி சேர்க்கப்பட்டிருப்பது, பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொண்ட ஒரு பெரும் நடவடிக்கையாகும். இந்தக் கப்பலைத் தயாரிக்க இந்தியர்கள் வியர்வை சிந்தி, தங்களது ஆற்றலைப் பயன்படுத்தி உழைத்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். கல்வாரி தயாரிப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளியையும் மற்றும் ஒவ்வொரு பணியாளரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். கல்வாரித் தயாரிப்பில் பிரான்ஸ் நாட்டின் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-பிரான்ஸ் இடையே வேகமாக வளர்ந்து வரும் நீடித்த ஒத்துழைப்புக்கு, இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒரு தலைசிறந்த உதாரணமாகும்.
நண்பர்களே, இந்த ஆண்டு இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிப் பிரிவின் பொன்விழா ஆண்டாகும். கடந்த வாரம்தான் இந்த நீர்மூழ்கிப் பிரிவுக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்பட்டது. கல்வாரி கப்பலின் வலிமை, புலிச்சுறாவின் ஆற்றல் போன்றதெனக் கூறப்படுகிறது. இது நமது இந்தியக் கடற்படைக்கு வலிமை சேர்ப்பதாக அமையும். நண்பர்களே, இந்திய கடல்சார் பாரம்பரியம் மிகவும் பழமையானது, சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாகும். குஜராத்தின் லோத்தல் துறைமுகம், உலகின் பண்டைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட துறைமுகங்களில் ஒன்றாகும். லோத்தல் துறைமுகம் வழியாக 84 நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பிற நாடுகளுடன் கடல்வழியாகவே நமக்கு நட்புறவு ஏற்பட்டது. வர்த்தகத்திற்காக மட்டுமின்றி, கலாச்சார ரீதியாகவும் இந்தியப் பெருங்கடல் உலகின் பிற நாடுகளுடன் நம்மை இணைப்பதுடன், அவர்களுடன் நாம் இணைந்து செயல்படுவதற்கும் வழிவகுக்கிறது.
இந்திய பெருங்கடல், இந்தியாவின் வரலாற்றைச் செதுக்கியதுடன், நவீன இந்தியாவிற்கும் அது வலுசேர்க்கிறது, 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நமது கடற்பரப்பு, சுமார் 1,300 சிறு தீவுகள், 25 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பிலான தனிப்பட்ட பொருளாதார மண்டலம் போன்றவைதான் ஈடு இணையற்ற கடல்சார் வலிமையை அளித்துள்ளன. இந்தியப் பெருங்கடல், இந்தியாவிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்திற்கும் மிகவும் அவசியமானதாகும். உலகின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து மட்டுமன்றி, உலகின் சரக்குப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதியும், உலகின் சரக்குப் பெட்டக போக்குவரத்தில் பாதியளவிற்கும் இந்தக் கடற்பகுதி வழியாகவே நடைபெறுகிறது. இந்தக் கடற்பகுதி வழியாக நான்கில் மூன்று பகுதி போக்குவரத்து நடைபெறுவதுடன், உலகின் மற்ற நாடுகளுக்கும் செல்கிறது. இந்தப் பெருங்கடல் பகுதியில் எழும் அலைகள் 40 நாடுகளையும், உலகின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தினரையும் சென்றடைகிறது.
நண்பர்களே, 21 ஆம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிப்பாதையை இந்தியப் பெருங்கடல் மூலமாகவே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது அரசின் கொள்கைகளில் இந்தியப் பெருங்கடல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது, நமது தொலைநோக்குச் சிந்தனையிலும் இந்த அணுகுமுறை பிரதிபலித்துள்ளது. அத்துடன், நான் இதனை சாகர் என்ற சிறப்பு பெயரில் அழைக்க விரும்புகிறேன். S. A. G. A. R. - என்றால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று பொருளாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில், சர்வதேச, நீடித்த மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து நாம் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருப்பதுடன், இந்திய கடற்படையின் நவீன மற்றும் பன்னோக்குச் செயல்பாடுகள், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைப்பாட்டிற்கும் வழிவகுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் அரசியல் மற்றும் கடல்சார் பொருளாதார ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவதுடன், பிராந்தியக் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு, இலக்கை எளிதாக அடைய வழிவகை செய்கிறது.
நண்பர்களே, கடல்சார் அதிகாரங்கள் தேசிய வளர்ச்சிக்கான பொருளாதாரச் சக்தியை நமக்கு அளிக்கிறது. இதன் காரணமாக இந்தியா மட்டுமன்றி, இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. கடல்வழிப் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, அல்லது கடற்கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை சமாளிப்பதிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. தண்ணீர், காற்று அல்லது நிலம் எதுவாக இருந்தாலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதே நமது தாரக மந்திரமாகும்.
உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி, முன்னோக்கி செயல்பட்டால், இந்தியா தனது சர்வதேசப் பொறுப்புகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள முடியும். அண்டை நாடுகள் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது இந்தியாதான் அவர்களுக்கு முதலில் உதவி செய்கிறது. அந்த வகையில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, இந்தியக் கடற்படைதான் முதலில் விரைந்து சென்று நேசக்கரம் நீட்டியது. மாலத்தீவில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்ட போது, இந்தியாவிலிருந்து கப்பல்களில் தண்ணீர் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது. பங்களாதேஷில் புயல் தாக்கியபோதும், நடுக்கடலில் சிக்கித்தவித்த பங்களாதேஷ் மக்களை இந்திய கடற்படைதான் மீட்டது. மனிதநேயக் கடமைகளில் இருந்து இந்தியக் கடற்படை ஒருபோதும் பின்வாங்கியதில்லை; மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரங்களில் இருந்து மீண்டு வரவும் உதவிக்கரம் நீட்டியது. இவை மட்டுமின்றி, ஏமனில் சிக்கித்தவித்த சுமார் 4,500 இந்தியர்களை மீட்டுவந்த இந்தியக் கடற்படை வேறு 48 நாடுகளைச் சேர்ந்த மக்களையும் நெருக்கடியில் இருந்து பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் மீட்டது. இந்திய ராஜதந்திரத்தின் மனிதநேய அணுகுமுறை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறைகள்தான் நாட்டின் சிறப்பு என்பதோடு, அதுவே நமது தனித்துவமுமாகும்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதையும் நான் நினைவு கூற விரும்புகிறேன். 700-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஆயிரம் டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச்சென்றதுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களைக் காப்பாற்றுவது போன்ற அன்பான பாங்கு இந்தியாவின் இயற்கையான மனோபாவமாக உள்ளது. மனிதாபிமான கடமைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் விலகிச் செல்லாது.
நண்பர்களே, திறமையான, வலிமையான இந்தியா தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் முக்கியப் பணியாற்ற வேண்டியுள்ளது. அண்டை நாடுகளின் ராணுவத்தினர் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு நமது ராணுவத்துடனான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 50 நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் சர்வதேசக் கடற்பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது அவர்கள் கண்ட விசாகப்பட்டினத்தின் இயற்கை எழிலை மறப்பது என்பது சாதாரணமானதல்ல.
இந்த ஆண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதியில், நமது வலிமை மூலம் இந்திய கடற்படை உலகின் கவனத்தை ஈரத்தது. இந்திய கடற்படை கடந்த ஜூலையில் நடைபெற்ற மலபார் ஒத்திகையின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினருக்கு இணையாகத் திறம்படச் செயலாற்றியது. அடுத்தடுத்த மாதங்களிலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேஷிய கடற்படையினருடன் இந்தியா தொடர் ஒத்திகைகளில் ஈடுபட்டது. இந்திய ராணுவமும், இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டது.
சகோதர-சகோதரிகளே, இவை அனைத்தும் அமைதி மற்றும் நிலைப்பாட்டிற்காக உலக நாடுகள் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதற்குச் சான்றாகும்.
நண்பர்களே, நாடு எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மாறியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். நமது பாதுகாப்பு ஆயத்தநிலையை மேம்படுத்த அதிமுக்கியத்துவம் அளிப்பதுடன், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ராணுவ பலத்துடன் பொருளாதாரம், தொழில்நுட்பம், சர்வதேச உறவு, மக்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் மென்மைத்தன்மை போன்றவற்றுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பு தேவை. இதுவே தற்போதைய தேவையாகும்.
சகோதர சகோதரிகளே, கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏராளமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருபுறம், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்னுரிமை அளிக்கும் வேளையில், மறுபுறம் தேவையான தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உரிமம் வழங்கும் நடைமுறை முதல், ஏற்றுமதி அனுமதி வரை வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திச் சமச்சீரானப் போட்டிக்கும் வழிவகுத்துள்ளோம். அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கவும் நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 49 சதவீதம் வரையிலான அந்நிய நேரடி முதலீடுகளுக்கு தானியங்கி முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையின் சில பிரிவுகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், ராணுவக் கொள்முதல் கொள்கையிலும் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளோம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது வகைசெய்கிறது.
ஐஎன்எஸ் கல்வாரி கப்பலைக்கட்ட 12 லட்சம் மனித வேலைநாட்கள் தேவைப்பட்டன என என்னிடம் தெரிவித்தனர். இந்தக் கட்டுமானப் பணியின்போது, இந்திய நிறுவனங்கள், இந்திய தொழிற்சாலைகள், சிறுதொழில் முனைவோர் மற்றும் நமது பொறியாளர்கள் காட்டிய தொழில்நுட்ப வல்லமை நமது நாட்டின் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது. இந்தத் திறமைகள் நமது நாட்டின் சொத்துக்கள் என்பதோடு, எதிர்காலத்திலும் நாட்டிற்குத் தொடர்ந்து பலனளிக்கும்.
நண்பர்களே, நமது ராணுவ ஏற்றுமதிக் கொள்கையில் அதிரடியான மாற்றங்களைச் செய்துள்ளோம்: இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதுடன், உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யவும் வகை செய்துள்ளோம். முக்கியத்துவம் அல்லாத 150 பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராணுவ தளவாடங்களை நமது படையினர் கொள்முதல் செய்வதும் எளிதாக்கப்பட்டுள்ளது. நமது ராணுவப் படைகள் அவற்றுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கான, படைக்கலத் தொழிற்சாலைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்பதோடு, அவர்கள் அந்தப் பொருட்களைத் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளவும் முடியும்.
பாதுகாப்புத் துறையில் நாட்டை தற்சார்புடையதாக மாற்ற, இந்தியாவைச் சேர்ந்த தனியார் துறையினருடன் நீடித்த ஒத்துழைப்பு முயற்சிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் மூலம், வெளிநாடுகளைப் போல இந்திய நிறுவனங்களும், போர் விமானங்கள் முதல் ஹெலிகாப்டர்கள் வரையும், பீரங்கிகள் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரையும் நம்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். இதுபோன்ற நீடித்த ஒத்துழைப்புகள், எதிர்காலத்தில் இந்தியாவில் பாதுகாப்பு தளவாடத் தொழிலை மேலும் வலுப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
பாதுகாப்பு சார்ந்த பொருட்களை வாங்குவதைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான பல்வேறு கொள்கை முடிவுகளையும் அரசு எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முப்படை தலைமையகங்களின் நிதி ஒப்புதல் அதிகாரங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் மேலும் எளிமையாகவும், வலிமையானதாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற முக்கியமான சீர்திருத்தங்களால், நம் நாட்டின் பாதுகாப்பு நடைமுறையும் படைகளின் திறனும் மேலும் அதிகரிக்கும்.
சகோதர, சகோதரிகளே, நமது அரசின் பாதுகாப்புக் கொள்கை நம் நாட்டிற்கு வெளியே பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியதுடன் மட்டுமின்றி, உள்நாட்டுப் பாதுகாப்பிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போர் தொடுக்க பயங்கரவாதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமது அரசின் கொள்கைகள் மற்றும் வீர்ர்களின் துணிச்சலான நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு-கஷ்மீரில் அதுபோன்ற சக்திகளின் முயற்சிகளை முறியடித்துள்ளோம். ஜம்மு-கஷ்மீரில் இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சுச் சம்பவங்களின் எண்ணிகையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமை மேம்பட்டுள்ளது. நக்ஸல் மற்றும் மாவோயிஸ்டு வன்முறைகளும் குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருவதையே இது எடுத்துக்காட்டுகிறது. நாட்டைப் பாதுகாக்க இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநிலக் காவல்படைகள், துணை ராணுவப் படைகள், நமது ராணுவம் உட்பட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகள் மற்றும் மறைமுகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாட்டின் 125 கோடி மக்களும் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அவர்களை நான் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே, நாட்டின் வலிமை நமது பாதுகாப்புப் படையினரின் வலிமையுடன் தொடர்புடையது என்பதால், பாதுகாப்புப் படையினரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தாமதமின்றி முடிவுகள் எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும், அரசின் முன்னுரிமை என்பதுடன், அரசின் தன்மையும் இதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது வாக்குறுதி என்பதால், நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் இருந்த ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 லட்சத்திற்கும மேற்பட்ட முன்னாள் படைவீர்ர்களுக்கு இதுவரை சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே, அனைத்து கடல்புரட்சிச் செயல்திட்டத்தையும் ஈடுபட்டுள்ள இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆறு துணிச்சல் மிக்க அதிகாரிகளை இத்தருணத்தில் நினைவுகூர நான் விரும்புகிறேன். அவர்களைக் கவுரவிக்கவும் விரும்புகிறேன். பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் ஊக்கமும், இந்திய மகளிரிடமிருந்து வரும் தகவல்கள் மூலம், இந்த தீரமிக்க ஆறு இதயங்களும், தங்களது பயணத்தில் முன்னோக்கிச் செல்கின்றனர்.
நண்பர்களே, நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் இந்தியாவின் ஆழமான திறமைகளை நீங்கள் நிர்வகிக்கிறீர்கள். இன்று ஐஎன்எஸ் கல்வாரி மூலம் புதிய பயணம் தொடங்கியுள்ளது. கடல் தேவதை உங்களை வலுவாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்வார். ஷாமா நவ் வருணா என்பதே உங்களது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை எனது வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீர்மூழ்கிப் பிரிவின் பொன்விழா கொண்டாடும் வேளையில், இந்தப் புதிய வரவுக்காக நான் உங்கள் அனைவரையும் பாராட்டி விடை பெறுகிறேன்.
நன்றிகள் பல.
பாரத மாதா நீடூழி வாழ்க.
(Release ID: 1521311)
Visitor Counter : 370