மத்திய அமைச்சரவை

தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ. 60,000 கோடி அளவுக்கு தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாட்சி கொண்ட அமைப்பான கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சிலில் இருக்கும்.

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், (நகர்ப்புறம்) இந்த அமைச்சகம் இதுவரை 39.4 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் மாதம் ஒன்றுக்கு சுமார் 2 – 3 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. 17 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பணி தொடங்கப்பட்டு சுமார் 5 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் / குறைந்த வருவாய் பிரிவினர் / நடுத்தர வருவாய் பிரிவினரைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ், வங்கிகள் / வீட்டுக் கடன் நிறுவனங்களால் தகுதியான பயனாளிகளுக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 87,000 வீட்டுக் கடன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதுடன் 40,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புதலுக்கான பரிசீலனையில் உள்ளன. 2022ம் ஆண்டு நாடு தனது 75வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது வீட்டு வசதி இல்லாமல் இருக்கும் 1.2 கோடி பேருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் தேவையான நிதிகளை உருவாக்கி அதன் மூலம் பயனாளியுடன் இணைக்கப்பட்ட கட்டுமானம் (பி.எஃப்.சி.), கூட்டணியில் கட்டுபடியாக கூடிய வீட்டுவசதி (ஏ.ஹெச்.பி.), குடிசைப்பகுதி மறு உருவாக்கம் (ஐ.எஸ்.எஸ்.ஆர்.) மற்றும் மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் (சி.எல்.எஸ்.எஸ்.) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நகர்ப்புற வளர்ச்சியில் உள்ள இடைவெளியை சுமூகமாக போக்கும் வகையில் நீடித்திருப்பதுடன் வீடுகள் கட்டப்படுவதையும் இந்த தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியம் வசதிப்படுத்தும்.

***


 


(Release ID: 1521204)
Read this release in: English , Urdu , Telugu