நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் -2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 FEB 2018 1:07PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகார அமைச்சகத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் -2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரி விற்பனைக்காக நிலக்கரிச் சுரங்கங்கள் அல்லது தொகுதிகளை ஏலம் விடுவதற்கான புதிய வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1973ஆம் ஆண்டு முதல் நாட்டுடைமையாக உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் வணிக அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவதை அனுமதிப்பது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம் ஆகும்.
இதற்கான நடைமுறையில் வெளிப்படைத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், வணிகம் நடத்துவதை எளிமையாக்குவது, இயற்கை வளங்களை தேசத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கும் இந்த நடைமுறை வழியமைக்கிறது.
மேலும், ஏகபோகத் தொழிலாக இருந்ததை மாற்றி, போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம் நிலக்கரித் துறையில் திறமையை அதிகரிக்க இந்தச் சீர்திருத்தம் வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் போட்டிபோட்டு முன்னேறவும், மிகச் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழியமைக்கவும் இந்தச் சீர்திருத்தம் துணைபுரியும்.
மேலும், இந்தியாவின் மின்சாரத் தேவையில் 70 சதவீதம் மின்சாரம் அனல் மின்நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், மின்சாரப் பாதுகாப்புக்கு இச்சீர்திருத்தம் வழியமைக்கும்.
நிலக்கரி விற்பனைக்காக தொழில் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுப்பதால் கிடைக்கும் வருவாய் புதிய நடைமுறையின்படி அந்தந்த மாநிலங்களுக்கே கிடைக்கும். இதனால், அந்த மாநிலங்கள் கூடுதலாக வருவாய் பெற வழியேற்படும். அந்த நிதி அந்தந்த மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டுக்கும் பழங்குடியினர் உள்பட அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும்.
*****
(Release ID: 1521102)
Visitor Counter : 440