பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
ரூ. 4955.72 கோடி செலவில் 425 கி.மீ. தொலைவிலான ஜான்சி – மாணிக்பூர் மற்றும் பீம்சென் - கைரார் மார்க்கத்தில் இரண்டாவது வழித்தடம் அமைக்கவும் மின்மயமாக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 FEB 2018 1:10PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 425 கிலோமீட்டர் தொலைவிலான ஜான்சி – மாணிக்பூர் மற்றும் பீம்சென் – கைரார் இடையே இரண்டாவது வழித்தடம் அமைத்தல் மற்றும் மின்மயமாக்குதல் பணிகளை ரூ. 4955.72 கோடியில் நிறைவு செய்ய ஒப்புதல் அளித்தது. இந்தப் பணிகள் 2022-23ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி, மஹோபா, பாண்டா, சித்ரகூட் தாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணி ஜான்சி/கான்பூர் இடையே வரும்/போகும் ரயில்கள் மற்றும் அலகாபாத்தில் இருந்து வரும்/போகும் ரயில்களின் இயக்கத்தைச் சுலபமாக்கும். இதனால் எதிர்த்திசையில் இருந்து வரும் ரயில்களைக் குறுக்கீட்டுக்காக நிறுத்த வேண்டி இருக்காது.
மேலும் சர்வதேசச் சுற்றுலாத் தலமான கஜுரஹோவுக்கான இணைப்பையும் இது மேம்படுத்தும். இந்தப் பகுதியில் சுற்றுலா மூலம் பொருளாதார வளம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கும்.
இது தவிர இந்தத் திட்டங்களின் கட்டுமானத்தின் போது 102 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
(Release ID: 1521092)