பிரதமர் அலுவலகம்
மும்பையில் 18.02.2018 அன்று செயற்கை நுண்ணறிவுக்கான வாத்வானி கல்விக் கழகத்தின் தொடக்கவிழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் முழுவடிவம்
Posted On:
18 FEB 2018 9:39PM by PIB Chennai
மஹாராஷ்ட்ர ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், மஹாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ், மஹாராஷ்ட்ர அமைச்சர் வினோத் தாவ்டே,
மும்பை பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேவேனந்த் ஷிண்டே,
ரொமேஷ் வாத்வானிஜி, சுனில் வாத்வானிஜி மற்றும்
பெரியோர்களே, தாய்மார்களே, செயற்கை நுண்ணறிவுக்கான வாத்வானி கல்விக் கழக தொடக்க விழாவிற்கு இன்று இங்கு நான் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தக் கல்விக் கழகம் அமைவதற்கு ஒன்றிணைந்து செயல்பட்ட ரொமேஷ் வாத்வானிஜி. சுனில் வாத்வானிஜி ஆகியோருக்கும், மஹாராஷ்ட்ர அரசு, மும்பைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கும் பாராட்டு தெரிவிப்பதோடு எனது உரையைத் தொடங்குகிறேன்.
ஏழை எளிய மக்களுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டு உலகத் தரம் வாய்ந்த கல்விக் கழகத்தை உருவாக்க பொதுத்துறையும், தனியார் துறையும், நல்லெண்ணத்தோடு எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடன் நான் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறேன். இந்தியாவுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற ஆழமான விருப்பம் அவர்களுக்கு இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த விருப்பத்தோடு வளமான, துடிப்புமிக்க இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்குடன், இந்த கல்விக் கழகத்தை உருவாக்கி, ரொமேஷ்ஜி-யும், சுனில்ஜி-யும் கலந்திருக்கிறார்கள். இதைச் செய்திருப்பதன்மூலம், மதிப்பு வாய்ந்த முன்மாதிரியை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
நண்பர்களே, உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று திகழ்கிறது. வேளாண்மையிலிருந்து விமானத் துறை வரையும் விண்வெளி ஆய்விலிருந்து சேவை அளிப்பது வரையும் இணையில்லாத வகையில், தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். சிறுதொழில்கள் முதல், மிகப்பெரிய முதலீடுகள் வரையிலான தொழில்துறை வேகத்தையும் நாம் காண்கிறோம். வரவிருக்கும் நான்காவது தொழில் புரட்சிக்கு நாம் எவ்வாறு பொருத்தமாக இருக்கிறோம் என்பதற்கு ஒருசில அடையாளங்களாக இவை இருக்கின்றன.
நண்பர்களே, ரோபோக்களை பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு வந்திருப்பதன் மூலம், நமது உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், மனிதர்களுக்கு அச்சங்களும் ஏற்படுகின்றன. ஏனென்றால், மனித மனதிற்கும், எந்திரங்களுக்கும் இடையே போட்டி வருகிறது. இத்தகைய அச்சங்கள் கண்டறியப்படாததுமில்லை, புதியதுமில்லை. தொழில்நுட்பங்கள் உருவாகும் ஒவ்வொரு நிலையிலும், இத்தகைய சந்தேகங்களையும், கேள்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். இது, எதிர்காலம் பற்றிய இரண்டு கருத்துக்களுக்கு வழிவகுக்கிறது. முதலாவதாக, நம்பிக்கைகளையும். அபிலாஷைகளையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, அச்சங்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்துகிறது.
தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமாக புதிய தடங்களையும், துறைகளையும் திறந்துவிடுகிறது. மேலும் அது முழுமையாக புதிய வாய்ப்புகளுக்கான முன்னுதாரணத்தையும் திறக்கிறது. புதிய தொழில்நுட்ப வருகை ஒவ்வொன்றும், பல புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புதிய வாய்ப்புகள் எப்போதும் இழந்தவைகளைவிட, அதிகமாகவே இருக்கின்றன. மனிதனின் புத்திக்கூர்மை எப்போதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். அறிவியலையும், ஆன்மீகத்தையும் கலந்த/இரண்டு அம்சங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கண்டறிந்த/ மனிதகுலத்திற்கு மகத்தான நன்மைபயக்கும் தொன்மையான இந்தியச் சிந்தனைகளில் எனது உறுதியான நம்பிக்கை வேரூன்றியிருக்கிறது.
யஜுர்வேத தைத்ரிய ஆரண்யகா: “சத்ய சர்வம் பிரதிஷ்டதம்” என்பதிலிருந்து ஞான் சுக்த் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அறிவியல் ஆய்வு என்ற உணர்வு உண்மையை நிலைநிறுத்துவதில் வேர் கொண்டிருந்தது. உண்மையை நிலைநிறுத்துவதற்கு உதவியாக அர்ப்பணிப்பு, மனோதிடம், நுண்ணறிவு, மனம், அமைதி, உணர்வின் உயர்நிலை, நினைவாற்றல், நினைத்துப் பார்த்தல், அறிவை பயன்படுத்துதல் ஆகிய மனஉணர்வுகளின் பட்டியலை நமது தொன்மையான நூல்கள் கொண்டிருக்கின்றன.
உண்மையை நிலைநிறுத்தும் இந்த அறிவியல் ஆய்வு, மனிதகுலத்திற்கு மகத்தான நன்மையைப் பயக்கும் பேரின்பத்தைக் கிடைக்கச் செய்கிறது. வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் தொலைநோக்கு என்பதில் நான் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அறிவியல் முன்னேற்றம் என்ற உணர்வு எனக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது.
அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் காலம் மிக அருகில் இருக்கிறது. அதுவே மனிதகுலத்தின் விருப்பங்களை நிறைவேற்றும். செயற்கை நுண்ணறிவு தீர்க்கமான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். ஒவ்வொரு தொழில்புரட்சியின்போதும், தொழில்நுட்பத்தின் அளவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்கள் எதைச் செய்தாலும், அவர்களின் சக்தியை அதிகரித்து, ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. வளர்ச்சியின் நோக்கம் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும். தொழில்நுட்ப வசதி கிடைப்பதில் சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளை மேலும் அதிகரிப்பதாக தொழில்நுட்பங்களின் அணிவகுப்பு இருக்க முடியது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
நண்பர்களே, மனிதர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்கும், மனிதத் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கும், மனிதகுல தகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு உலக அளவில் உருவாக்கியிருக்கும் நிலைமை குறித்து, நாம் அறிவோமா? மனிதகுலத்திற்கு மகத்தான நன்மை தருவதற்கு மனிதர்களின் இடத்தில் எந்திரங்களைக் கொண்டு வந்து, மனிதர்களின் பலவீனங்களை பலமாக மாற்றி, மனிதர்களை மேலும் சிறந்த மனிதர்களாக நாம் உருவாக்கலாமா?
நண்பர்களே., செயற்கை நுண்ணறிவு தொகுப்பால், மிகப் பெரிய தகவல்கள் சேகரிப்பும், மனிதகுலப் புரிந்துணர்வும் நாம் எதிர்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது அவசியம். அதேபோல், இந்தியாவுக்கு செயற்கை நுண்ணறிவின் பணியை பயன்படுத்துவதும் அவசியம்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் தீர்வு காணக்கூடிய இந்தியாவின் மிகப் பெரிய சவால்களை அடையாளம் காண வேணடுமென்று உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பல பத்து எழுத்து மொழிகளையும். பல நூறு பேச்சு மொழிகளையும் கொண்டிருக்கும் பன்முக தேசம் நம்முடையதாகும்.
செயற்கை நுண்ணறிவு மூலமான தகவல் தொடர்பும், உரையாடலும் இத்தகைய எழுத்து மொழிகளாலும், பேச்சு மொழிகளாலும் எளிதாக்குவது சாத்தியமா? மாற்றுத்திறனாளிகள் நமது சொத்து என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு அதிகாரம் அளிக்க தேசம் உறுதிபூண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்து, திறன்களை விரிவுபடுத்தவும், பணிகளை நிறைவேற்றவும் அவர்களின் உண்மையான திறன்களை வெளிக்கொண்டு வரவும் நம்மால் இயலுமா? ஆசியர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணைப்பு, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு, ஆசிரியர் – மாணவர் விகிதத்தில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு இது உதவி செய்யுமா? நமது சுகாதார ஊழியர்களுக்கான திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியாவின் மூலைமுடுக்குகளிலும், சுகாதாரத்தின் தரத்தை உயர்த்துவதற்கு செயற்கை நுண்ணறிவு உதவி செய்யுமா? இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுமா? உடல் ரீதியாக நோய் அறிகுறிகள் தெரிவதற்கு முன்னால், மோசமான உடல்நிலை பாதிப்பைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நமக்கு உதவுமா? விதை விதைத்தல், சாகுபடி செய்தல், வானிலை தொடர்பாக நமது விவசாயிகள் சரியான முடிவுகளை எடுக்க செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கு உதவுமா?
நண்பர்களே, வறுமையையும், நோய்களையும் ஒழிக்க 21ஆம் நூற்றாண்டின் இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும் என்று எமது அரசு உறுதியாக நம்புகிறது. இதைச் செய்வதன்மூலம், ஏழை எளிய மற்றும் நலிந்த பிரிவு மக்கள் வாழ்க்கையில் வளத்தை நாம் கொண்டுவர முடியும். டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி என்பது சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரம் பெறச் செய்து, அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி, இந்தியாவை மாற்றியமைப்பதை நோக்கமாக கொண்டது. பாரத் நெட் திட்டத்தின்கீழ், கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பை நாம் வழங்கி வருகிறோம். இந்த டிஜிட்டல் அடிப்படை கட்டமைப்பு, சேவைகள் வழங்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
அடுத்த சில பத்தாண்டுகளில் உலக அளவில் உருவாகும் வேலைவாய்ப்புகளை மனதில் கொண்டு, அதற்கு சரியான, திறன்வாய்ந்த பணியாளர்களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது, மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கமாகும். தொழில்துறை ஈடுபாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தையும்கூட நாங்கள் தொடங்கியிருக்கிறோம். உலகத் தரத்திலான கண்டுபிடிப்பு மையங்களை உருவாக்குவது, பெரிய சவால்களை எதிர்கொள்வது, புதிய தொழில்களைத் தொடங்குவது, சுயதொழில் செயல்பாடுகள், குறிப்பாக தொழில்நுட்ப துறைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த இயக்கமாகும். இந்தியா முழுவதும் 10 லட்சம் சிறார்களை ஊக்கப்படுத்தி, இளம் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றும் தொலைநோக்குடன் நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை அடல் கண்டுபிடிப்பு இயக்கம் நிறுவிவருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வேகப்படுத்தும் நோக்கம் கொண்டது. நமது மக்கள் நலனுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும்.
நண்பர்களே, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இந்தக் கல்விக் கழகத்தின் முன்னோடிகளும் இந்தியாவில் உள்ள சாமான்ய மக்களின் நன்மைகளைத் தங்கள் இதயங்களில் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதன்படி, அவர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் முயற்சிகள் சிறப்பாக நிறைவேற நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன். செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்போடும், மக்கள் நலனுக்கான பொறுப்புணர்வோடும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டும் தனித்துவ நிலையை இந்தியா கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தக் கல்விக் கழகத்தைத் தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது மக்களுக்கு சேவை செய்யும், அதன் உறுதிப்பாடு நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
------
(Release ID: 1520922)
Visitor Counter : 292