குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மக்கள் நலன்களுக்காக அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளுக்குத் தனியார் மருத்துவ நிறுவனங்களும் துணைபுரிய வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

குழந்தைகளிடையிலான சத்துக் குறைபாடு கவலை தருகிறது

Posted On: 14 FEB 2018 8:08PM by PIB Chennai

மக்கள் நலத் திட்டங்களால் உரிய பலன்களை எட்டுவதற்கு அரசு நிறுவனங்களால் மட்டும் இயலாது. அவற்றுக்கு தனியார் மருத்துவ சேவை நிறுவனங்களும் துணை புரிய வேண்டும் என்று இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டார். தில்லியில் இன்று (2018, பிப்ரவரி 14) உயர் தரமான ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையைத் திறந்துவைத்து அவர் உரையாற்றினார்.

இந்த விழாவில் மத்திய மக்கள் நலம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் பேசுகையில், “குழந்தைகளின்  சத்துக்குறைபாடு பொது சுகாதாரத்திற்கு மிகுந்த கவலையும் வளர்ச்சிக்குப் பெரிய சவாலையும் ஏற்படுத்துகிறது. ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் ஆயிரத்துக்கு 43 பேர் என்று உள்ளது. சிசு மரணம் 1000 பேருக்கு 34 என்றும் பிறந்த குழந்தைகளில் 1000 பேரில் 25 என்றும் உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட மொத்தம் 10.8 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இந்தியாவில் குழந்தைகள் மரணத்துக்கு குறைந்த எடையுடன் பிறத்தல், நிமோனியா, வயிற்றுப் போக்கு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

“மக்களிடையில் சுகாதார நலன் பேணும் போக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் பெரிய அளவில் இருக்க வேண்டும். ஆனால், ஏழைகளின் சுகாதார முன்னேற்றத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புள்ளது” என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் எம்.வெங்கைய நாயுடு, “குழந்தைகளுக்கென தனி மருத்துவமனைகள் அமைப்பதற்கான தேவை இருக்கும் சூழ்நிலையில், தனியார் மருத்துவ நிறுவனங்கள் அளிக்கும் சிகிச்சை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும், ஏழைகளுக்கு எட்டும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

வேத கால ரிஷிகள் நோயின்றி மக்கள் விடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் “உலகில் அனைவரும் அமைதி, நலனுடன் வாழ வேண்டும் (Sarve Santu Niraamayaa)” என்று வேண்டினர். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு தனியார் துறையினரும் வள்ளல்களும் ஈடுபடவேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

தில்லியில் குழந்தைகளுக்கென மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் வகையில் அமைந்துள்ள ரெயின்போ மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் ரமேஷ் கஞ்சராலாவையும் அவரது கூட்டாளிகளையும் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் வகையிலான ரெயின்போ மருத்துவமனை உன்னத சேவையை ஆற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“எல்லாக் குழந்தைகளும் நன்கு தேறி, உடல் நலம், ஆரோக்கியம் பெற்று, புதிய இந்தியாவின் உற்சாகமான குடிமகனாக வாழ்வதற்கான தேசிய அளவிலான இயக்கத்திற்குத் தனது மிகப் பெரிய அளவிலான பங்களிப்பைச் செலுத்தும்” என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடுவின் முழுமையான உரையை அறிந்துகொள்ள இணையதளம் : pib.gov.in

 

 

 

 

 

 

 

 



(Release ID: 1520737) Visitor Counter : 149


Read this release in: English , Urdu