சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2017-18 ஐ விட 2018-19-ல் 12.10 சதவீதம் அதிகரிப்பு இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2017-18 ஐ விட 2018-19-ல் 41.03 சதவீதம் அதிகரிப்பு

தாழ்த்தப்பட்டோருக்கான மூலதன நிதியைப் போல இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மூலதன நிதி ஒதுக்கும் புதிய திட்டம் தொடக்கம்

Posted On: 14 FEB 2018 1:57PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு மத்திய பட்ஜெட் 2018-19 ல் ஒதுக்கப்பட்ட தொகை 2017-18 ஆம் ஆண்டை விட, 12.10 சதவீதம் அதிகரித்துள்ளது.  2017-18 ஆம் ஆண்டில் ரூ.6,908 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.7,750 கோடியாக உயர்ந்துள்ளது.  மேலும், 2017-18 ஆம் ஆண்டை விட, 2018-19 ஆம் ஆண்டில் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் 11.57 சதவீதமாக அதிகரித்துள்ளது.  கூடுதலாக இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் 2017-18 ஐ விட 2018-19 ல் 41.03 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கான மூலதன நிதியை போல, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மூலதன நிதி ஒதுக்கும் புதிய திட்டம் முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்படவுள்ளது.  2018-19 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  13,587 துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  809 துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. 

முதல்முறையாக, தேசிய சர்வே போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவுள்ளது.  185 மாவட்டங்களில் 1.5 லட்சம் வீடுகளைச் சேர்ந்த 6 லட்சம் பேரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்படுகிறது.  தற்போது நடந்து வரும் இந்த சர்வே பணிகள் 2018 மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 15 முன்மாதிரி மாவட்டங்களில்  தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ், துறையின் ஆதரவுடன் இயங்கும் அனைத்து மையங்களிலும் வெளிநோயாளிகள் வசதி இயங்கும்.  மறுவாழ்வு மையங்களுக்கு பதிலாக அவற்றின் பெயர் சிகிச்சை மருத்துவமனை என பெயர் மாற்றப்படும்.  மாநிலங்களில் உள்ள முக்கிய சிறைச்சாலைகள், கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் பெரிய அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மெட்ரிகுலேஷனுக்கு முந்தைய வகுப்புகளில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச  வரம்பு ரூ.44,500-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தாழ்த்தப்பட்டோர் இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  வெளியிலிருந்து வந்து படிப்பவர்களுக்கான உதவித் தொகை ரூ.150-லிருந்து ரூ.225 ஆகவும் விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.350-லிருந்து ரூ.525 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.  உயர் வகுப்பு கல்வி பயிலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் இலவச கோச்சிங் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  உள்ளூர் மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும் வெளியூர் மாணவர்களுக்கு ரூ.3,000-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மெட்ரிக்குலேஷனுக்கு முந்தைய வகுப்புகளுக்கு உதவித் தொகை சதவீதம் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு முதல் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்புக்கான கல்வி உதவித் தொகை  வெளியிலிருந்து வந்து படிப்பவர்களுக்கு   ரூ.25 ஆகவும், 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை ரூ.40 ஆகவும், 9  ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை ரூ.50 ஆகவும் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.  இது முதல் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை 10 மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ. 100 வீதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  விடுதியிலிருந்து தங்கி படிப்பவர்களுக்கு 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை முறையே கல்வி உதவித் தொகை ரூ.200 மற்றும் ரூ.250 ஆக 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.  இது மாதத்திற்கு ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் இடைக்கால மானியமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும்.  தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.25,000-லிருந்து ரூ.28,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



(Release ID: 1520566) Visitor Counter : 171


Read this release in: English