பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

வணிகத்தை எளிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன : டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 25 JAN 2018 5:48PM by PIB Chennai

மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வணிகத்தை எளிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து, டாவோஸில். ‘நான்காம் தொழில்துறை புரட்சிக்கான நீடித்த உற்பத்தி கண்டுபிடிப்புகள்குறித்து, நேற்று நடைபெற்ற, நண்பகல் வட்டமேஜை விருந்து சந்திப்பில் கலந்துகொண்ட டாக்டர் ஜிதேந்திர சிங், உலகின் சில நாடுகளில் வணிகத்திற்கு அதிக விதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து சில பிரதிநிதிகள் தெரிவித்த அச்சத்தை தணிக்கும் வகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அரசு வணிகத்தை எளிமைப்படுத்துவதற்கு வசதியாக பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 3 முதல் 4 ஆண்டுக்குள் மட்டும் அரசு கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் காலத்துக்கு ஏற்றதாகவும், பயனுள்ளதாகவும் இல்லை என்று கண்டறிந்து அகற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் .. மற்றும் ரோபோக்கள் குறித்துப் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக நீடித்த நிலைத்த உற்பத்தி எனும் சவாலை நிறைவேற்ற முடிகிறது என்றாலும், இந்த இயந்திரங்களுக்கு மனித சக்தி அடிமையாக மாறிவிடக் கூடாது என்று தெரிவித்தார். இவற்றை பயன்படுத்தும் முதல் தலைமுறையாக நாம் இப்போது இருக்கிறோம், இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள் மனித சக்திக்கும் செயற்கை சக்திக்கும் இடையில் ஆரோக்கியமான உடன்பாடு ஏற்பட்டுவிடும். நான்காம் தொழில்துறை புரட்சிக்கான கண்டுபிடிப்புகளை நிறைவேற்றுவதற்கு மனித மற்றும் இயந்திரங்கள் இணைந்து, பரஸ்பரம் தேவையான வளங்களை பூர்த்திசெய்யும் மிகச்சிறந்த சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.

சர்வதேச குறியீட்டின் படி, 2030ம் ஆண்டுக்கான செயல் பட்டியலை அடையும் வகையில், 2020-ம் ஆண்டு முக்கிய முன்னேற்ற  மைல்கல்லாகத் திகழும். மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்யும் 2022-ம் ஆண்டும் முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். அதனால் 2022-ம் ஆண்டுக்குள் குறிக்கோளை அடையும் வகையில் அரசு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்றும் எதிர்காலப் பயணம் போட்டிகளை ஊக்குவிப்பதாகவும் இலக்கு அடைவது நோக்கியும் அமையும் என்றார்.

இந்தியாவில் வளர்ந்துவரும் மின்னாற்றல் தேவையைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மின் உற்பத்தியை அதிகரிக்கும் அதேநேரம்சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத மாற்று மின் சக்தி ஊக்குவிக்கப்படுவது குறித்தும் தெரிவித்தார். உலகப் பசுமை சூழலுக்கு ஆபத்தாக விளங்கும் நச்சுப்புகையில் 50%-க்கும் மேல், மூலப்பொருள் விளைச்சலில் இருந்து ஆலைக்குக் கொண்டுசெல்லும் பயணத்தில்தான் உருவாகிறது, இந்தியா இந்த ஆபத்தான அளவைக் குறைக்கும் புத்தாக்க நடவடிக்கைகளை அனைத்து கட்டங்களிலும் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளதால், அரசு தலையீடு அல்லது அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.



(Release ID: 1520562) Visitor Counter : 146


Read this release in: English