எரிசக்தி அமைச்சகம்

திரு ஆர் கே சிங் ‘இந்தியன் மின்சார நிலையங்கள் 2018’ – இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

தேசிய அனல்மின் கழகம் வெளிநாடுகளில் மின்நிலையங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவின் பன்னாட்டு மின்சார நிறுவனமாக மாறவுள்ளதாக அமைச்சர் பெருமிதம்.

Posted On: 13 FEB 2018 4:55PM by PIB Chennai

மத்திய எரிசக்தி மற்றும் புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி இணையமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஆர் கே சிங் இந்தியன் மின்சார நிலையங்கள் 2018 எனும் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டை  பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிவைத்தார். பிறநாடுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் மின்சாரத் துறையில் பன்னாட்டு நிறுவனமாகவும், உலகின் மிக அதிகமாக மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமாகவும் தேசிய அனல் மின் கழகம் உருவெடுக்கும் என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.  மின்சாரத்தை குறைந்த விலையில் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றும், இது பிராந்தியம் முழுமைக்கும் பயனளிக்கக்கூடியது என்றும் திரு சிங் கூறினார். 

இலங்கை, மியான்மர், நேபாளம், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கு உரிய சந்தைகளாக உள்ளன என்று அமைச்சர் கூறினார்.  அந்த நாடுகளில்  மின்சாரத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  அந்த நாடுகளில் மின்சாரத்தின் தேவையை மதிப்பிடுவதற்காக குழுக்களை அனுப்புவதற்கான வாய்ப்புகளை எரிசக்தி அமைச்சகம் கண்டறியும் என்று அவர் தெரிவித்தார்.

24 மணி நேரமும் அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கும் அரசின் நோக்கத்தை எட்டுவது குறித்து பேசிய திரு சிங், முழுமையான எரிசக்தித் துறையில் பார்ப்போனால், மின்சாரத்தின்  தேவை குறைத்தே மதிப்பிடப்படுகிறது என்று கூறினார்.  இப்போதுதான் இந்த துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம் என்று தெரிவித்த அமைச்சர், விரைவில் இருஇலக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்ற கூறினார்.  மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், கூடுதல் உற்பத்தித் திறனை நம்மால் பயன்படுத்த இயலாமல் போகலாம்.  சில தடங்கல்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியாத  நிலை ஏற்படும்.  நம்மிடம் நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை, ஆனால் நிலக்கரியை தரைக்கு அடியில் இருந்து வெளியே கொண்டு வந்து அதை மின்சார நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளை கூடிய விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள  அனைத்து மின் நிலையங்களும் தங்களது உற்பத்தித் திறனில் 70 முதல் 80 சதவீதத்திற்கு மட்டுமே இயங்குகின்றன என்பதால், உடனடி நெருக்கடிக்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  மின் நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்காவிட்டாலோ, தேவையை எட்ட முடியாவிட்டாலோ, இந்த நெருக்கடி ஏற்படும் என்று அவர் கூறினார்.

நாட்டில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் திரு சிங், குறைந்த விலையிலான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை பெறுவதில் ஏற்படும் முன்னேற்றம் சந்தையில் தவறான சமிக்ஞைகளை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்தார்.  நுகர்வோரும், குறைந்த விலையில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், அந்த மின்சாரம் மட்டும் தேவைக்கு போதுமானதல்ல என்பதை உணர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.  நிலையான மின்சாரத்தின் தேவையை சமன்படுத்துவது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.  இந்த தகவலை நாம் நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கும் பகிர்மான நிறுவனங்களுக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் கூறினார். 

எரிசக்தித் துறை செயலர் திரு அஜய்குமார் பல்லா, எரிசக்தித் துறை அமைச்சகம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

 



(Release ID: 1520546) Visitor Counter : 122


Read this release in: English